மானின் சமயோசிதம்!
முன்னொரு காலத்தில், ஒரு காட்டில் நரியொன்று வாழ்ந்து வந்தது. அது கிழட்டு நரி. ஓடியாடி, வேட்டையாடி இரையைப் பிடிக்க முடியவில்லை.வயது ஆகிவிட்டதால், சில பற்களும் உதிர்ந்துவிட்டன. இனி என்ன செய்வதென்று ஒரு மரத்தடியில் படுத்து யோசனை செய்தது. அப்போது, அவ்வழியாக ஒரு புலி வந்தது. உடனே, நரிக்கு சட்டென்று யோசனை தோன்றியது.புலியிடம் சென்ற நரி, ''பெருமைக்குரிய புலியாரே, வணக்கம்!'' என்று ஒரு குட்டிக் கரணம் அடித்துத் தன் இரு முன்னங்கால்களையும் தூக்கி வணங்கி நின்றது.''யார் நீ? என்னை ஏன் வணங்குகிறாய்?'' என்று கேட்டது புலி.''தலைவரே! நான் உங்கள் அருமை பெருமைகளை அறிவேன். அதனால்தான் வணங்குகிறேன்!'' என்றது நரி.''அப்படியா மகிழ்ச்சி!'' என்றவாறே புலி நகன்றது. நரி விடாமல் பின்தொடர்ந்து.''நீங்கள் தினமும் இரையைத் தேடி அலைவதுதான் எனக்குப் பாவமாக இருக்கிறது!'' என்றது.''அலைந்தால்தானே இரை கிடைக்கும்!'' என்றது புலி.''அது எனக்கு தெரியும். இருந்தாலும், நீங்கள் உணவுக்காக இனி அலைய வேண்டாம். உங்கள் இருப்பிடத்திலேயே இருங்கள். இரை எங்கே இருக்கிறதென்று நான் வந்து துப்புச் சொல்கிறேன்!'' என்றது நரி.''சரி. அதுவும் நல்லதுதான்!'' என்று சம்மதித்தது புலி.அதிலிருந்து கிழ நரியும், புலியும் நண்பர்களாகயினர்.மான்கள், மாடுகள், காட்டெருமைகள் போன்ற மிருகங்கள் எங்கு இருக்கின்றன என்ற விவரத்தை, நரி யாருக்கும் தெரியாமல் ஓடி வந்து புலியிடம் சொல்லிவிடும். புலி பதுங்கிப் பதுங்கிச் சென்று அவற்றைக் கொன்று தின்னும். புலி தின்றது போக மீதியை நரி ருசித்துச் சாப்பிடும்.ஒருநாள்-மான் ஒன்று தன் குட்டியைக் காணாமல் எங்கெங்கோ தேடியது. குட்டி கிடைக்கவில்லை. கடைசியில் அந்தக் குட்டி, புலியின் குகையில் விளையாடிக் கொண்டிருப்பதை கண்டது. ஆபத்தை உணர்ந்த புள்ளிமான் உடனே தன் குட்டியுடன் வெளியே கிளம்பும் போது, குகைக்கு வெளியே சற்றுத் தொலைவில் புலி வருவதைப் பார்த்துவிட்டது. அதற்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இருப்பினும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டது.புலி மிக அருகில் வந்ததும் மான் தன் குட்டியை ஓங்கி அடித்தது. குட்டி பலமாக அழுதது; மீண்டும் அடித்தது; இப்போது மிகவும் சத்தமாக கத்தியது. ''புலிக்கறி வேணும், புலிக்கறி வேணுமென்று ஏன் இப்படி அடம்பிடிக்கிறாய். இன்று இரண்டு புலிகளை அடித்துக் கொடுத்துவிட்டேன்.''கொஞ்சம் பொறு. புலி ஒன்று இந்தக் குகைக்கு வரும். அதை அடித்துத் தருகிறேன். சாப்பிடு,'' என்றது மான்.இதைக் கேட்ட புலி மிகவும் பயந்துவிட்டது.குட்டியே இரண்டு புலிகளைச் சாப்பிட்டு இன்னும் போதாதென்று கேட்டால், அது எவ்வளவு பெரிய மிருகமாக இருக்கும் என்று சிந்தித்தது. புலிக்கு நடுக்கம் ஏற்பட்டது. குகைக்குள் சென்றால் அந்தப் பயங்கர மிருகம் தன்னை அடித்துக் கொன்று, அதன் குட்டிக்கு கொடுத்துவிடும் என்று பயந்தது.குகைக்குள் போகாமல் வேறிடம் தேடி புறப்பட்டது.''புலியாரே, புலியாரே ஏன் குகைக்குப் போகாமல் சோர்வாக திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள்?'' புதர் நடுவில் பதுங்கியிருந்த கிழட்டு நரி கேட்டது.''நண்பா, உன்னைத்தான் தேடுகிறேன்!''''அப்படியா என்ன செய்தி?''''என் குகையில் ஏதோ மிகப் பெரிய மிருகம் ஒன்று தன் குட்டியுடன் பதுங்கியுள்ளது!''''உங்களை விடப் பெரிய மிருகமா?''''அந்த ராட்சத மிருகம் தன் குட்டிக்கு, இரண்டு புலிகளை அடித்துக் கொடுத்தும் குட்டிக்குப் பசி அடங்கவில்லையாம். மேலும் புலிக்கறி கேட்கிறது அந்தக் குட்டி மிருகம்,'' என்றது.''அடடே, குட்டியே புலிகளைச் சாப்பிட்டால் தாய் எதை சாப்பிடுமோ!''''அதுதான் தெரியவில்லை!''''நீங்கள் அந்த மிருகத்தைப் பார்த்தீர்களா?''''பார்க்கவில்லை!''''நீண்ட கயிறு ஒன்றை எடுத்து, ஒரு நுனியை உங்கள் கழுத்திலும், மறு நுனியை என் கழுத்திலும் கட்டியபடி அந்தப் புதிய மிருகத்தை பார்த்து வருவோம்!'' என்றது நரி.''கழுத்தில் ஏன் கயிற்றை கட்டிக் கொள்ள வேண்டும்?'' என்றது புலி.''வாழ்விலும், சாவிலும் இருவரும் இணை பிரியாத நண்பர்கள் என காட்டத்தான்!'' என்றது நரி.''நல்ல யோசனைதான்!'' என்றது புலி.புலியும், கிழட்டு நரியும் கழுத்தில் கயிற்றைக் கட்டியவாறு பயந்து பயந்து வருவதை மறைந்திருந்து பார்த்து விட்டது மான். உடனே தன் குட்டியை ஓங்கி அடித்தது. குட்டி அழுதது.''அழாதே என் செல்லமே. என் நண்பன் நரி என்னிடம் உறுதி கூறியதற்கிணங்க, அதோ ஒரு புலியைக் கட்டி இழுத்து வருகிறான். உனக்கு இன்று நல்ல வேட்டைதான்,'' என்று பலமாகச் சொன்னது.இதைக் கேட்ட புலி பயந்து நடு நடுங்கி வேகமாக ஓட ஆரம்பித்தது.புலியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கிழட்டு நரி உருண்டது. புலி ஓடிக் கொண்டே இருக்க, நரி உருண்டு புரண்டது.முடிவு? கற்களிலும், மரங்களிலும் அடிபட்டு நரியின் உடல் சின்னாபின்னமானது.