மாய விழிகள்! (5)
முன்கதை: சிறுமி தியா, பள்ளியில் தங்கி படித்த போது பாட்டி வீட்டுக்கு சென்றாள். மர்ம கிணற்றில் தண்ணீர் குடித்ததால் பார்வையில் புதிய சக்தி ஏற்பட்டதை அறிந்து சோதனைகள் செய்தாள். இனி - ''ஐயோ வேண்டாம்... வார்டன் பார்த்தா அவ்வளவு தான்...''''உன் முகத்தை பார்த்தாலே பசி தெரிகிறது. தின்பண்டம் தானே... சாப்பிட்டு தெம்பா படிக்கலாம்...''''வேண்டாம்க்கா...''''நீ சாப்பிடு அனு... வார்டனை நான் சமாளித்து கொள்கிறேன்...''''என்னை திட்டுவாங்க... திரும்பவும் தண்டனை கொடுப்பாங்க...''''இந்த கிண்ணம், உன் பக்கத்துல இருக்கட்டும்; நீ கேக்கை சாப்பிடு. இப்படி ஒரு கிண்ணம் உன் அருகில் இருக்கிறது என்பதை கண்டு கொள்ளாதே... வார்டன் வந்தால் கேக்கை பார்க்காதே...''சற்று தள்ளி இருந்த மேஜையில் அமர்ந்தாள் தியா. அனுவைப் பார்த்து, கண்ணசைவால் சாப்பிடு என்று சொல்ல, ஒரு துண்டு கேக்கை விண்டு எடுத்தாள்.யாரோ வரும் சத்தம் கேட்டதும் திரும்பி பார்த்தனர்.மிரண்டாள் அனு.வந்து கொண்டிருந்தார் வார்டன்!சப்த நாடியும் ஒடுங்கியது அனுவுக்கு.வார்டனின் பார்வை முதலில் தியா மீது சென்றது.''நீ இங்க என்ன செய்துட்டு இருக்க...''''படிக்கிறதுக்காக அறைக்கு வந்தேன் மிஸ்...''தயக்கம் இல்லாத பதில் வார்டனுக்கு சந்தேகம் அளிக்கவில்லை.அனுவை நெருங்கிப் போனார் வார்டன். அப்போது உற்றுப் பார்த்து, அனு அருகே இருந்த கேக்கை மறைய வைக்க முயன்றாள் தியா. உற்றுப் பார்த்தும் கேக் மறையவில்லை.பதறிய தியா கண்ணை சிமிட்டி மீண்டும் உற்றுப் பார்த்தாள்; அப்போதும் கேக் மறையவில்லை.சட்டென பூங்கா நிகழ்வு நினைவில் வந்தது.உடனடியாக, அணிந்திருந்த செருப்பை கழட்டியபடி தரையில் கால் வைத்தாள்.அடுத்த நொடி, கண்களுக்கு முன், புகை மூட்டம் தெரிந்தது.கேக் இருந்த கிண்ணம் மங்கலாகியது. இதற்குள் அனுவை நெருங்கி இருந்தார் வார்டன்.''என்ன ஒரு மாதிரி முழிக்கிற, பசிக்குதா...''''ஆமா மிஸ்...''''சீக்கிரம் படிச்சிட்டா சாப்பிடலாம்...'' என்றபடி கடந்து போனார் வார்டன்.கேக் இருந்த பக்கம் அவர் பார்வை திரும்பியும், எதுவும் சொல்லாமல் போனது ஆச்சரியம் தந்தது. வார்டன் போன பின் கேக்கை சாப்பிட்டாள் அனு.தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள் தியா.''வார்டன் இதை பார்த்தும் எப்படி ஒண்ணும் சொல்லாமல் போறாங்க...''''அதெல்லாம் ரகசியம். அதை பற்றி யோசிக்காதே... பசி அடங்கி விட்டது அல்லவா... கவனமாக படி...''விலகினாள் தியா.''நன்றி அக்கா...'' புன்னகைத்தாள் அனு.பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள் தியா.தொடர்ந்து, நான்கு நாட்கள் விடுமுறையால், மாணவியரை சொந்த ஊர் செல்ல அனுமதித்திருந்தது விடுதி நிர்வாகம்.''அக்கா...'' குரல் கேட்டு திரும்பினாள் தியா. முதுகில் பையுடன் நின்றிருந்தாள் அனு.''நீயும் ஊருக்கு கிளம்பிட்டியா...''''ஆமாக்கா... நீங்க ஆழ்வார்குறிச்சி தானே... உங்க ஊருக்குப் போய் தான், என் ஊருக்கு போகும் பேருந்து பிடிக்கணும்...''''நீ எங்க போகணும்...'' ''சிவசைலம்...''மகிழ்ச்சியும், ஆச்சரியமாய் முகம் மலர்ந்தாள் தியா.''அப்போ நீ என் பாட்டி வீட்டுக்கு வந்துட்டு போயேன்...'' கொஞ்சம் யோசித்தாள் அனு.''எப்படியும் பேருந்துக்காக காத்திருக்க போற... கூடுதலாக சிறிது நேரம் ஆகும். அவ்வளவு தான...'' தியா கூறியதும், யோசித்தாள் அனு.''வா... என் பாட்டி சூப்பரா சமைப்பாங்க. சாப்பிட்டு போகலாம்...''''அடுத்த முறை வர்றேனே...''''அங்கே அழகான படித்துறை, தென்னந்தோப்பு எல்லாம் இருக்குது. இயற்கை அழகு ரொம்ப நல்லா இருக்கும்...''''எங்க ஊர்லயும், ஆறு ஓடுது... நிறைய தோப்பு எல்லாம் இருக்கு...'' பதிலுக்கு அனுவும் கூறினாள்.''பரவாயில்ல வா... எங்க ஊர் தோப்பை பார்க்கலாம்...'' என்றாள் தியா.அதற்குள் பேருந்து வர ஏறினர்.பாட்டி வீட்டுக்கு வந்து அறிமுகத்தை முடித்து, படித்துறைக்கு வந்திருந்தனர்.அங்கு, இரண்டு பெண்கள் துணி துவைத்து கொண்டிருந்தனர்.மேற்படியில் அமர்ந்து, தண்ணீரில் கால் நனைத்து குழுமையை ரசித்தனர்.சின்ன மீன்கள் கால் நக இடுக்குகளை கடித்த போது கூச்சமாக இருந்தது.''அக்கா... நீயும் எங்க வீட்டுக்கு வரணும்...'' அழைப்பு விடுத்தாள் அனு.''கண்டிப்பா வரேன்... அடுத்த விடுமுறைக்கு போகலாம்...''''இப்போ வாயேன்...''''உங்க ஊர் எப்படி இருக்கும்...''''அது மலை அடிவார கிராமம். சிவசைலத்திலிருந்து, சற்று தள்ளி இருக்கிறது. முழுவதும் காட்டுப்பகுதி தான்...''''ஓ... அப்போ இயற்கை அழகுக்கு குறைவு இருக்காதுன்னு சொல்லு...''''ஆமாக்கா... ஆனா, எங்க வீடு பெருசா எல்லாம் இருக்காது. சின்னதா தான் இருக்கும்...''''அதனால் என்ன... சரி, உங்க ஊரில், பள்ளி எல்லாம் இல்லையா...''''எட்டாவது வரை சின்னதா இருக்கு. ரெண்டு டீச்சர் மட்டும் தான் இருப்பாங்க. பெரும்பாலும், அங்குள்ளவர்களுக்கு அவ்வளவு தான் படிப்பு. இங்கு கிராமத்தில் இருந்து, 2 கி.மீ., நடந்து வந்தால் பேருந்து கிடைக்கும். அங்கிருந்து சிவசைலமோ, ஆழ்வார்குறிச்சியோ சென்று படிக்கலாம். ஆனால், பெரும்பாலும் யாரும் அவ்வளவு சிரத்தை எடுப்பதில்லை...''''அப்போ நீ மட்டும் எப்படி...''''எங்க ஊர்ல குறிஞ்சியம்மான்னு ஒரு தேவதை கோவில் இருக்கு. அங்கே இருக்கிற பூசாரி ஐயா தான், என்னை படிக்க வைக்கிறார்...''''ஓஹோ...''''எங்கள் கிராமத்திலேயே நான் தான் நன்றாக படிப்பேன். அதனால் தான்...''அனுவின் குரலில் கொஞ்சம் பெருமை தெரிந்தது.''சூப்பர்...''படித்துறையில், சிறிது நேரத்தை செலவழித்து தோப்பு பக்கம் வந்தனர்.''வா அனு, இங்கே ஒரு தோப்பு கிணறு இருக்கிறது. அதைப் பார்க்கப் போகலாம்...''''சரிக்கா...''''அந்த தண்ணீ குடிக்கிறதுக்கு சுவையா இருக்கும். ஆனால், அங்கு ஒரு பாட்டியிருப்பாங்க. அவங்கள பார்த்தால் தான் பயமா இருக்கும்...''''ஏன்... என்ன பயம்...''- தொடரும்...ஜே.டி.ஆர்.