நாளை வருவான் நாயகன் (9)
முன்கதை: மீண்டும் வீட்டை விட்டு ஓடிய மகனை நினைத்து வருந்தி கொண்டிருந்தார் லட்சுமி. அப்போது, படிப்பு உதவி கேட்டு ஆசிரியர் பழனிதுரையை சந்தித்தான் மாணவன் பன்னீர்செல்வம். இனி -ஆசிரியர் பழனிதுரையை நோக்கி, கை குவித்து வணங்கியபடியே, ''அப்ப நான் கோவிலுக்கு கிளம்பட்டுங்களா சார்...'' என்றான் பன்னீர்செல்வம்.''சரிப்பா... போயிட்டு வா... எல்லாம் நல்லபடியா முடியும்...'' என்றார் பழனிதுரை.புறப்பட்ட போது, லட்சுமி அருகில் வந்த பன்னீர்செல்வம், ''வணக்கம் பாட்டி... சாப்பிட்டிங்களா...'' என்றான்.''இனிமே தான்பா சாப்பிடணும்... அம்மாவை விசாரிச்சேன்னு சொல்லு...''''சொல்றேன்... கோவிலுக்கு போறோம்... நீங்களும் எனக்காக வேண்டிக்கோங்க...'' என்றான்.பாசத்துடன், ''நிச்சயம் வேண்டிக்கிறேப்பா...'' என்றார் லட்சுமி.பன்னீர்செல்வத்தின் யாசககுரல், லட்சுமியின் இரக்கமுள்ள இதயத்திற்குள் புகுந்தது.அவன் புறப்பட்டதும், தீர்க்கமாக எழுந்தார் லட்சுமி. உறுதியான குரலில், ஆசிரியரிடம், ''ஐயா... அந்த பையன் மேற்படிப்புக்கு நான் பணம் தந்து உதவுறேன்...'' என்றார்.திகைத்தபடி, ''என்ன சொல்றீங்க... எந்த பணத்தை குடுக்கப் போறீங்க...'' என்றார் பழனிதுரை.''தபால் ஆபிஸ்ல வெச்சிருக்கிறதுல இருந்து...''''அந்த பணம் உங்க பையன் சூரியராஜாகிட்ட சேர்க்க வேண்டியதாச்சே...''''ஆமாங்க ஐயா... அப்படி நெனைச்சித்தான், இதுநாள் வரைக்கும் பாதுகாப்பா வெச்சிருந்தேன்...''''அப்படியே இருக்கட்டும்... இப்ப ஏன் அவசரப்படணும்...''''இல்லீங்க... ஏதோ சரியில்லாத காலகிரகம் நம்மள பிடிச்சு ஆட்டுது; அதனால் தான், பெத்த பிள்ளையே கண்ணை விட்டு மறைஞ்சிட்டான்னு, இவ்வளவு நாளா நெனைச்சிகிட்டே இருந்தேன்...''அது மட்டுமல்ல... என்னைக்கு இருந்தாலும், மகன் திரும்ப வந்து, என்னை காப்பாத்துவான்னு குருட்டு நம்பிக்கையும் இருந்துச்சு... அதை எண்ணி நாளை வருவான்... நாளை மறுநாள் வந்துடுவான்னு வாழ்ந்துகிட்டிருந்தேன்...''லட்சுமி பேசுவதை உன்னிப்பாக கேட்டு கொண்டிருந்தார் ஆசிரியர் பழனிதுரை.''மகன் திரும்பி வரும் செய்தி கேட்டு, நம்பிக்கை வீண் போகலன்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன்... உண்மையான பாசத்துலதான் தேடி வர்றான்னு இந்த பாழாப்போன மனசும் நம்பிக்கிட்டிருந்துச்சு...''பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்தியபடி பேசிக்கொண்டிருந்தார் லட்சுமி.''ஆனா, அவன் கிட்ட பாசம், பந்தம், பச்சாதாமெல்லாம் கொஞ்சமும் கிடையாதுன்னு, இப்ப தெளிவா தெரிஞ்சிடுச்சிங்க ஐயா...''இந்த வாழ்க்கை வெச்ச பரிட்சையில, என் பையனும் தோத்துட்டான்; நானும் தோத்துட்டேன்...'' அழுதபடி, முந்தானையால் கண்களை துடைத்தார்.''பள்ளிகூடம் வெக்கிற பரிட்சையில, இந்த பையன் பன்னீர்செல்வம் ஜெயிக்கறத்துக்கு அந்த பணம் உதவட்டும்... கை, கால் நல்லாயிருக்கிற வரைக்கும் உழைக்கிறேன்; அப்புறம் ஆண்டவன் காட்டுற பாதையிலே என் கதை முடியட்டும்...'' என முடித்தார் லட்சுமி.புதன்கிழமை புலர்ந்தது -மூவரும் அஞ்சலகம் சென்று, உரிய படிவங்களை பெற்று, அதை நிரப்புவதற்கு, விளக்கினார் ஆசிரியர்.''சரிங்க ஐயா...'' என புன்னகைத்தார். படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தவுடன், பூரண சந்தோஷத்துடன் விரல் ரேகையை பதிவு செய்தார் லட்சுமி.அந்த நிமிடம், ஏதோ ஒரு பாரம், அவர் மனதிலிருந்து நீங்கியதாக உணர்ந்தார்.முகத்தில் மலர்ச்சி அதிகரித்தது.அதே நிமிடம், பன்னீர்செல்வத்திற்கும் ஆனந்தக் கண்ணீர் பீறிட்டு வந்தது.லட்சுமியின் கால்களில் விழுந்து, ''என்னை ஆசிர்வாதம் செய்யுங்க பாட்டி...'' என கண்ணீருடன் கேட்டான் மாணவன்.''அடடா... என்னாத்துக்குப்பா என் காலுல விழுந்துகிட்டு...'' பதறியபடி, அவன் தோளைப் பற்றி துாக்க முயன்றார்.''எப்பவும் நல்லாயிருப்ப... இது என்னோட ஆசிர்வாதம்...''கூறிய போது குரல் நெகிழ்ந்தது.''ரொம்ப நன்றி பாட்டி...'' என்றவன், அருகிலிருந்த ஆசிரியர் பழனிதுரை கால்களில் விழுந்து, ''உங்களை என்னைக்கும் மறக்க மாட்டேன் சார்...'' என்றான்.அவனை துாக்கி அணைத்து, ஆசி வழங்கினார் ஆசிரியர்.தபால் அலுவலகத்தில் பணம் எடுக்கும் பணி நிறைவுற்றது.அதை பன்னீர்செல்வத்திடம் கொடுத்து, திருப்தியாக வீட்டை நோக்கி நடந்தார் லட்சுமி.கணவரின் வார்த்தைகளுக்கு, இன்றைய தினத்தில், சிறந்த அர்த்தம் கிடைத்து விட்டதாக லட்சுமி மகிழ்ந்தார்.தொடர்ந்து வங்கியில் கடன் பெறும் பணிகள் துவங்கின. அவை எல்லாம் சிரமம் இன்றி நடந்து கொண்டிருந்தன. வங்கி மேலாளர் அருண்குமார் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மிகவும் சரியாகவும், பொருத்தமாகவும் விடை தெரிவித்தான் பன்னீர்செல்வம்.- தொடரும்...நெய்வேலி ராமன்ஜி