உள்ளூர் செய்திகள்

சுற்றுச்சூழலியலின் தாய்!

இல்லம் சார் சுற்றுச்சூழலியலின் தாய் என போற்றப்படுபவர், எலன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ். நகர சுகாதாரத்தில், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். உலகின் முதல் பாதாள சாக்கடை திட்டத்தை முன்மொழிந்தவர். கழிவு அகற்றும் பொறியியல் என்ற புதிய துறைக்கு வித்திட்டவர். இல்லம் சார்ந்த சூழலியலை அறிமுகம் செய்தவர்.அமெரிக்கா, மாசசெடஸ் மாகாணத்தில், டன்ஸ்டேபிள் புறநகர் பகுதியில் பன்னிகல்ட் டெய்லர், கணவர் பீட்டர் ஸ்வாலோவுடன் வாழ்ந்தார். இருவரும் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். பலசரக்கு கடையும், சிறிய விவசாய பண்ணையும் சொந்தமாக இருந்தன. இவர்களுக்கு, டிச., 3, 1842ல் பிறந்தார் எலன். கல்லுாரி படிப்பை முடித்து ஆசிரியரானார் எலன். ஓய்வு நேரத்தில், நர்ஸ், கடையில் எடுபிடி, சமையல் உதவியாளர் என பல பணிகளை செய்து, மேற்படிப்பிற்கு பணம் சேர்த்தார். வானவியலும், வேதியியலும் கற்றார்.எம்.ஐ.டி., என்ற மாசசெடஸ் தொழில் நுட்ப கல்வியகத்தில், முதல் பெண் பொறியாளராக பதிவு செய்து, உயராய்வுக்கு சேர்ந்தார். அப்போது, 'ஸ்வாலோ ஆய்வு' என்றே அது அழைக்கப்பட்டது. அதற்கு காரணம் இருந்தது. ஒரு பெண், பொறியாளர் ஆக முடியுமா என, அவரை வைத்தே ஆய்வு செய்தது அந்த கல்வி நிறுவனம்!கள ஆய்வுகள் செய்து, கட்டுரை சமர்ப்பித்து, பட்டம் பெற்ற அமெரிக்காவின் முதல் பெண் என்ற புகழ் பெற்றார். தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு, 'வனடியம்' என்ற உலோகத்தை, இரும்புத்தாதிலிருந்து தனித்தெடுத்தார்.இருந்தும், அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்படவில்லை.பெண்களுக்கு அப்பட்டத்தை வழங்க அமெரிக்காவில் தடை இருந்தது. இந்த தடை, மே 11, 1876ல் அகற்றப்பட்டது. அதே ஆண்டு, எம்.ஐ.டி., அரங்க பொறியியல் துறை தலைமை விரிவுரையாளர், ராபர்ட் ஹாலோ வெல் ரிச்சர்ட்ஸ் என்பவரை மணந்தார் எலன். பின் அவரது திறமைகள் பளிச்சிட்டன. எம்.ஐ.டி., பெண்களுக்கான ஆய்வகத்தை, 1876ல் ஏற்படுத்தியது. அதில் வேதிப் பகுப்பாய்வியல், தொழில் வேதியியல் மற்றும் உயிர் வேதியியல் என, புதிய துறைகளை தோற்றுவித்தார் எலன். அடுத்த ஆண்டே, கழிவு அகற்றும் வேதியியல் என்ற துறையை அறிமுகப்படுத்தினார். தொழிற்புரட்சி ஏற்பட்டபோது, நச்சுப்புகையும், நீர்மக்கழிவும் அதிகரித்தன. அவற்றை அகற்ற வேண்டிய முறையை முன்மொழிந்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.அவர் எழுதிய, 'தி கெமிஸ்ட்ரி ஆப் குக்கிங்' என்ற நுால், 1889ல் வெளிவந்தது. ஆசிரியையாக பணியாற்றிய போது, ஓய்வு நேரத்தில் செய்த வேலைகளில் கிடைத்திருந்த அனுபவங்கள் அந்த நுாலில் அழகாக விளக்கப்பட்டிருந்தது. பல பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லியது. விற்பனையில் சாதனை படைத்தது.உணவுப் பொருளில் கலப்படத்தை கண்டுபிடிப்பது பற்றி பள்ளியில் கற்கிறோம் அல்லவா... அதை, முதன் முதலில் நுாலாக எழுதியவர் எலன் தான்.மற்றொரு முக்கிய சுற்றுச் சூழலியல் கண்டுபிடிப்பை, 1887ல் நிகழ்த்தினார் எலன். அமெரிக்கா, மாசசெடஸ் மாகாணத்தில், 40 ஆயிரம் இடங்களில், குடிநீர் மாதிரிகளை சேகரித்து, அதன் பல்வேறு கூறுகளை ஆராய்ந்து, குடிநீர் ஆதாரங்களை பாதுகாப்பது பற்றி விளக்கினார். வீட்டுச்சூழல், நகரச் சூழல், வீதி துாய்மை, குடிநீர் ஆதாரம் பேணுதல் என, பல கூறுகளை உள்ளடக்கிய புதிய கல்வி துறையை ஏற்படுத்தி, அதற்கு, 'எகாலஜி' என பெயரிடலாம் என்றும் முன்மொழிந்தார் எலன்.சுற்றுச்சூழல் சார்ந்த, 'தி சயின்ஸ் ஆப் கன்ட்ரோலபிள் என்விரான்மென்ட்' என்ற நுாலை, 1910ல் வெளியிட்டார். அது, அடுத்த மைல் கல்லாக அமைந்தது. சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்த போதே, 1911ல் மாரடைப்பால் காலமானார். அவர் துவங்கிய சூழலியல் சார்ந்த ஆய்வு, இன்று தீவிரமடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !