உள்ளூர் செய்திகள்

ஓரம் போ... ஓரம் போ... பஞ்சம்பட்டி வண்டி வருது!

நான் திண்டுக்கல்லில், ஒரு பிரபலமான பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். எங்களின் தமிழாசிரியர் அந்தோனிராஜ், பஞ்சம்பட்டியிலிருந்து தினமும் சைக்கிளில் வந்து போவார். அந்த பழைய சைக்கிள், கண்காட்சியில் வைக்குமளவு இருக்கும். அது எழுப்புகிற ஓசையே அவரின் வருகையைக் காட்டி கொடுத்துவிடும். அந்த சைக்கிளுக்கு இரண்டு பூட்டுகள் வேறு போட்டிருப்பார்; மிகவும் எளிமையான மனிதர். அவர் சைக்கிளில் வரும் போதே மாணவர்கள், 'ஓரம் போ... ஓரம் போ... பஞ்சம்பட்டி வண்டி வருது... ஓரம்போ!' எனக் கத்துவர். எவ்வளவு கிண்டல் செய்தாலும், கடிந்து கொள்ளவே மாட்டார்.மாணவர்பால் அக்கறையும், பேரன்பும் கொண்டவர். தாய்மொழியாம் தமிழில் நாங்கள் சிறப்பாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என உழைப்பவர். அவரின் ஏழ்மை நிலை என்ன என்று, ஒரு ஞாயிற்றுக்கிழமை அவரின் வீட்டிற்கு போன பின்தான் தெரிந்தது. கண் பார்வையற்ற தாய், நோயாளியான மனைவி, புத்திஸ்வாதீனம் இல்லாத பத்து வயது மகள். அவரது வீட்டின் கூரையில் இருந்த ஓட்டைகள் மூலமே நட்சத்திரங்களை எண்ணி விட முடியும். அந்த ஏழ்மை நிலையிலும் அவரது விருந்தோம்பல் பண்பு வியக்க வைத்தது.எங்கள் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 எல்லாம் கிடையாது; எஸ்.எஸ்.எல்.சி., வரைதான். பிரிவு உபசார விழாவில் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு வாத்தியாருக்கு ஒரு புது, 'ஹெர்குலஸ்' சைக்கிளை வாங்கி கொடுத்தோம். வாங்கவே மறுத்துவிட்ட அவர், எங்களின் வேண்டுகோளுக்கு இணங்க வாங்கிக் கொண்டார்.நாங்களும் மேற்கல்வி படித்து, ஆளுக்கொரு திசையாக பிரிந்து விட்டோம். ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று இறந்தும் விட்டார். அவரது வீட்டில் நாங்கள் அளித்த சைக்கிள், ஒரு காட்சிப் பொருளாக இன்றும் இருக்கிறது. ஆசிரியர் அதை யாருக்கும் விற்கக் கூடாது என்று அவரது வீட்டில் சொல்லியிருந்தாராம். அந்த சைக்கிள் எங்களின் ஆசிரியரை நினைவுப் படுத்திக் கொண்டே இருக்கிறது. மறக்க முடியாத ஆசிரியர்!-எம்.செய்யது சபி, மடிப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !