வலியும் வழியும்!
திருப்பத்துார், ஸ்ரீ ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில், 1956ல், 7ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்திருந்தேன். குடும்ப வறுமையால் அத்துடன் படிப்பை நிறுத்த சொன்னார் அப்பா.அதன்படி, பள்ளி திறந்ததும் சான்றிதழ் வாங்க சென்றேன். அங்கு, 8ம் வகுப்பு அறையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். வருகைப்பதிவேட்டை சரி பார்த்த ஆசிரியர், என் பெயரை அழைத்தார். எதுவும் புரியாமல், 'பிரசென்ட் சார்...' என்று கூறிவிட்டேன். அங்கிருந்த பெயர் தெரியாத நண்பன், 'நீ அட்டன்டென்ஸ் கொடுத்துட்டியே... இனி ஆறு மாதத்துக்குரிய கட்டணத்தை செலுத்தினால் தான், மாற்று சான்றிதழ் கொடுப்பர்...' என்றான். பயத்தில் செய்வதறியாது திகைத்தேன். கட்டணம் செலுத்த முடியாத நிலையில் தான் படிப்பை நிறுத்த இருந்தேன். இந்த நிலையில் அவ்வளவு பெரிய தொகையை எப்படி திரட்டுவது என மலைப்பாக இருந்தது.அந்த நண்பன் சொன்னதை நம்பி, பள்ளி அலுவலகத்தில் விசாரிக்காமல், உறுதிப்படுத்தாத தகவலை தந்தையிடம் கூறினேன். அதை நம்பியவர் வேறு வழியின்றி, கடன் வாங்கி, 8ம் வகுப்பில் சேர்த்தார். சில நோட்டு புத்தகங்கள் மட்டுமே வாங்க முடிந்தது. தட்டு தடுமாறி சிறு வேலைகள் செய்தபடி படித்து தேர்ச்சி பெற்றேன். பின், நடத்துனர் உரிமம் பெற்று, அரசு போக்குவரத்து கழக பணியில் சேர்ந்து வாழ்வில் உயர்ந்தேன். என் வயது, 79; உறுதி செய்யாத தகவலை தந்து, என் படிப்பு தொடர உதவிய அந்த நண்பனை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.- கே.சி.நாராயணன், செங்கல்பட்டு.தொடர்புக்கு: 98403 07476