உள்ளூர் செய்திகள்

பெண் டாக்டருக்கு கிடைத்த பூசணிக்காய் பரிசு!

மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண், தமிழக சட்டசபையில் அங்கம் வகித்த முதல் பெண் என்ற பெருமைக்குரியவர், முத்துலட்சுமிரெட்டி. அஞ்சாநெஞ்சம் கொண்ட சமூக சீர்திருத்தவாதியாக வாழ்ந்தார். புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில், ஜூலை 30, 1886-ல் பிறந்தார். தந்தை நாராயணசாமி; தாய் சந்திரம்மாள். நான்கு வயதில், திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். நன்றாகப் படித்ததால், உயர்நிலையில் படிப்பைத் தொடர்ந்தார். அவருடன் மெட்ரிகுலேஷன் தேர்வை, 100 பேர் எழுதினார். இதில், 10 பேரே தேர்ச்சி பெற்றனர். அதில், முதன்மை மதிப்பெண் பெற்றார் முத்துலட்சுமி. சென்னை, மருத்துவக் கல்லுாரியில், 20 வயதில் சேர்ந்தார். மருத்துவப்படிப்பை 1912ல் முடித்தார். அறுவை சிகிச்சை மருத்துவ தேர்வில், முழுமையான மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவத்தில் பட்டம் பெற்ற, முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றார்.அவரது ஆற்றலை அறிந்த அரசு, பெண்கள் சிகிச்சையில் சிறப்பு பயிற்சி பெற ஐரோப்பிய நாடான இங்கிலாந்துக்கு அனுப்பியது. அங்கு, 11 மாதம் பயிற்சி பெற்றார். பின், இந்தியா திரும்பி மருத்துவ சேவைகள் செய்தார். சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழக பெண் என்ற பெருமையும் பெற்றார். சட்டசபையில் துணைத்தலைவரானார். இந்தப் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளில், புரட்சிகரமான சட்டங்களை நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பால்ய விவாக தடை சட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து, நல்ல எதிர்காலத்தை உருவாக்க நினைத்தார். இதற்காக, சென்னை, அடையாறில் அவ்வை இல்லத்தை உருவாக்கினார். இதை நிர்வகிக்க ஏராளமான பொருள் உதவி தேவைப்பட்டது. கருணை உள்ளம் கொண்ட சிலர், வேண்டிய உதவிகளை செய்தனர். ஒருமுறை, அவ்வை இல்ல செலவுக்கு நிதி கேட்டு ஒரு பணக்காரர் வீட்டுக்கு சென்றார் முத்துலட்சுமி. அந்த வீட்டு வாசலில் ஒரு பூசணிக்காய் இருந்தது. நிதி கேட்டு வந்தது கண்டு எரிச்சல் அடைந்த பணக்காரர், 'என்னிடம் பணம் இல்லை; வேண்டுமென்றால் இந்தப் பூசணிக்காயை கொண்டு போங்க...' என அலட்சியமாக உருட்டிவிட்டார். முத்துலட்சுமி வருந்தவில்லை. புன்சிரிப்புடன் அந்தப் பூசணிக்காயை எடுத்து தலையில் வைத்தபடி, 'ரொம்ப சந்தோஷம்... இதையாவது கொடுத்தீங்களே... எங்கள் இல்ல குழந்தைகளுக்கு சாம்பார் வைக்க உதவும்; அவங்க வயிறும் நிரம்புவதால், உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்...' என்றார். இதுபோல், தளராத மனமும், சோர்வற்ற உழைப்பும் ஒருங்கே பெற்றவர்.முத்துலட்சுமியின் தங்கை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தகுந்த சிகிச்சை கிடைக்காததால் இளம் வயதிலேயே இறந்தார். இந்த கதி, மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்ற நோக்கில், சென்னை, அடையாறில் புற்றுநோய் மருத்துவமனையை, 1952ல் துவங்கினார். இன்று, புற்று நோயாளிகளுக்கு மாபெரும் புகலிடமாக அது விளங்குகிறது. அவரது சேவைகளை பாராட்டி, பத்மபூஷன் விருது கொடுத்து கவுரவித்துள்ளது மத்திய அரசு. பல சாதனைகளை நிகழ்த்திய முத்துலட்சுமி, ஜூலை 22, 1968ல், 82ம் வயதில் மறைந்தார். உலகில் அவர் புகழ் என்றும் நிலைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !