உள்ளூர் செய்திகள்

ஏளனங்கள் செதுக்கும்!

சென்னை, பாடி, பிரிட்டானியா உயர்நிலைப் பள்ளியில், 1987ல், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். குடும்ப ஏழ்மை காரணமாக, புதிய புத்தகங்களை வாங்க இயலவில்லை. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கிப் படித்தேன்.பாடங்களை எழுத குறிப்பேடுகள் எல்லாம் கிடைக்காது. அதை ஈடுசெய்ய, மாதக் காலண்டர் தாள்களில் அச்சிடாத பின்புற பகுதியை சேகரித்து வெட்டி, தைத்து, குறிப்பேடாக பயன்படுத்துவேன். இதற்காக, அக்கம் பக்கத்தவரின் பழைய காலண்டர்களை வாங்குவேன். சக மாணவ, மாணவியர் ஏளனம் செய்வர்; அதை பொருட்படுத்த மாட்டேன்.இதை கவனித்த அறிவியல் ஆசிரியர் ஜெயராம், 'எதில் எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல; என்ன எழுதுகிறோம் என்பது தான் முக்கியம். கண்மணியைப் போல, சிக்கனமாக வாழ பழகிக் கொள்ளுங்கள்...' என, பாராட்டி உற்சாகப்படுத்துவார். மின்சாரம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவார்.தற்போது, என் வயது, 48; பள்ளி ஆசிரியையாக பணியாற்றுகிறேன். சிக்கனத்தின் உயர்வை போதித்த ஆசானை மனதில் கொண்டு, என் மாணவர்களுக்கும் அந்த வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கிறேன். - கே.கண்மணி, சென்னை.தொடர்புக்கு: 98401 53387


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !