ரோஸ் மில்க்!
கடந்த, 1965ல் நெல்லிக்குப்பத்திலுள்ள பஞ்சாயத்து ஆரம்ப பள்ளியில் படித்தேன். என்னிடம் பார்த்தசாரதி என்ற நண்பன் நட்புடன் பழகுவான்.ஒருநாள், பார்த்தசாரதி பள்ளி இடைவேளையில், 'டேய் புகழேந்தி ஓட்டலுக்கு சாப்பிட போலாமா?' என கேட்டான். ஆர்வமிகுதியால் தலையசைக்க, பள்ளியருகே இருந்த, 'கீதா கபே' உணவகம் சென்றோம்.எனக்கு என்ன வேண்டுமென கேட்க, நான், 'ரோஸ் மில்க்' என்றேன். அவனும், தயிர் வடையை ருசித்துச் சாப்பிட்டான். இருவரும் சாப்பிட்டு, பணம் கொடுத்துவிட்டு பள்ளிக்கு திரும்பினோம்.பள்ளி வகுப்பறையில், நான் உறிஞ்சிய ரோஸ் மில்க், பார்த்தசாரதியின் தயிர் வடையின் சுவை வாயிலே நின்றதால், அதன் சிறப்பை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டோம்.பள்ளிக்கூடம் முடிவடைய சிறிது நேரம் இருக்கும் போது, பார்த்தசாரதியின் அப்பா எங்கள் வகுப்பறைக்கு வந்து டீச்சரிடம் ஏதோ பேசினார்.உடனே, பார்த்தசாரதியை அழைத்த டீச்சர் 'நீ அப்பா பாக்கெட்டில் இருந்து 20 ரூபா எடுத்து வந்தியா?' என கேட்டார்.'இல்ல டீச்சர்; வந்து... வந்து...' என தயங்க எனக்கு, 'குப்பென' வியர்த்தது.'பொய்யா சொல்ற?' என்று சுரீர் என ஒரு பிரம்படி விழவும், 'நான்தான் பணம் எடுத்து வந்து புகழேந்தியோட ஓட்டலுக்கு போனேன்' என உண்மையை போட்டு உடைத்தான் பார்த்தசாரதி. அன்றிலிருந்து எனக்கு புகழேந்தி எனும் பெயர் போய், 'ரோஸ் மில்க்' என்ற பெயர் வந்தது. வெட்கத்தால் தலைகுனிந்த இந்த நிகழ்ச்சி, 'நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என்ற பாடத்தை கற்றுத் தந்தது.-ச.புகழேந்தி, கரிய மாணிக்கம்.