அரச மோதிரம்!
பகை நாடுகளிலிருந்து வந்த ஒற்றர் சிலர் ஆக்ராவில் உலவிக் கொண்டிருப்பதாக அக்பருக்கு செய்தி கிடைத்தது. மாறுவேடமணிந்து அவர்களின் நடமாட்டத்தை அறிய விரும்பினார் அக்பர்.ஒருநாள் -பொழுது சாய்ந்ததும் அக்பர் சக்ரவர்த்தி, மாறுவேடமணிந்து நகருக்குள் சென்றார். மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் இடங்களில் நின்று கூர்ந்து கவனிப்பார். சந்தைகளிலும்,பொது இடங்களிலும் நின்று மக்கள் பேசிக் கொள்வதை கேட்பார். சந்தேகப்படும்படி எவராவது நடமாடினால், அவர்களை பின்தொடர்ந்து சென்று அவர்களது செயலை கூர்ந்து கவனிப்பார்.இவ்வாறு சக்ரவர்த்தி மற்றவர்களை கவனித்து வரும்போது, அவரையே ஒருவன் விடாமல் பின் தொடர்ந்து வந்ததை அவர் கவனிக்கவில்லை. ஒரு சிறிய வீதியில் நுழைந்து ஒரு கடையருகில் நின்றபோதுதான், தன்னை ஒருவன் பின் தொடர்ந்து வருகிறான் என்பதை உணர்ந்தார். அவனது நடமாட்டத்தைக் கவனிப்பதற்காக வெவ்வேறு வழியாகச் சென்று பார்த்தார் அக்பர். அவர் எங்கு சென்றாலும் அவன் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். சக்ரவர்த்திக்கு அவன் பேரில் சந்தேகம் ஏற்பட்டது. ஒதுக்குப் புறமான ஓரிடத்தை அடைந்ததும் அவர் சற்று நின்றார். அந்த மனிதனும் ஏதோ வேலையிருப்பதைப் போல் அங்கு நின்றான்.அவன் செய்கையைக் கண்ட சக்ரவர்த்திக்கு அவன் பேரில் பெருத்த சந்தேகம் ஏற்பட்டது. மெல்ல அவன் அருகில் சென்று, ''யார் நீ?'' என்று கேட்டார்.''உன்னைப் போல் நானும் ஒரு மனிதன்,'' என்று துடுக்குத்தனமாக பதில் அளித்தான் அந்த மனிதன்.இது சக்கரவர்த்திக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.'மாமன்னர் என்ற மதிப்பு துளியும் இல்லாமல் இப்படி துடுக்குத்தனமாகப் பதில் அளிக்கிறானே!' என்று கோபம் கொண்டார்.''எதற்காக என்னைப் பின்தொடர்ந்து வருகிறாய்?'' என்று அவனைப் பார்த்துக் கேட்டார் அக்பர்.''உன் பாட்டன் வீட்டு வீதியா இது? என் விருப்பப்படி நான் எங்கு வேண்டுமானாலும் செல்வேன். நீ யார் என்னைக் கேட்பதற்கு?'' என்று முரட்டுத்தனமாக பதில் அளித்தான் அந்த மனிதன்.''நான் யார் என்றா கேட்கிறாய்? நான்தான் இந்த நாட்டின் பேரரசர்,'' என்றார் அக்பர்.''பைத்தியக்காரனைப் போல் உளறாதே! நீதான் இந்த நாட்டுப் பேரரசர் என்பதற்கு என்ன அத்தாட்சி?'' என்றான் அந்த மனிதன்.இதைக் கேட்டதும் அக்பர் சக்ரவர்த்தி தம் மடியில் மறைத்து வைத்திருந்த முத்திரை மோதிரத்தை எடுத்து அவனிடம் காண்பித்தார். உடனே, அவர் கையிலிருந்த முத்திரை மோதிரத்தை வெடுக்கென்று பறித்து, ''மரியாதையாக இந்த இடத்தை விட்டுப் போய் விடு. இல்லாவிட்டால் பெரும் துன்பத்தை அடைவாய்,'' என்று சக்ரவர்த்தியை மிரட்டினான் அந்த மனிதன்.''என்னையா மிரட்டுகிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்,'' என்று கூறிய அக்பர், கையைத் தட்டி தூரத்தில் சென்று கொண்டிருந்த சேவகன் ஒருவனைக் கூப்பிட்டார்.சேவகன் அவர்கள் அருகில் வந்ததும், புதிய மனிதன் தன் கையிலிருந்த முத்திரை மோதிரத்தை அவனிடம் காண்பித்தான். அதைக் கண்டதும் சேவகன் தலைகுனிந்து அவனுக்கு வணக்கம் தெரிவித்தான்.''இவன் ஒரு பைத்தியக்காரன். இவன்தான் அரசன் என்று உளறுகிறான். இவனை இழுத்துச் சென்று நகருக்கு வெளியே விட்டுவிடு,'' என்றான் அந்த மனிதன்.சக்ரவர்த்தி அந்தச் சேவகனிடம் ஏதோ சொல்லுவதற்காக வாயெடுத்தார். எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை அவன். சக்ரவர்த்தியை இழுத்துச் சென்று நகருக்கு வெளியே விட்டு விட்டான்.எவ்வளவோ பகைவர்களை முறியடித்த சக்ரவர்த்தி, இன்று ஒரு எளிய மனிதனால் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்து வருந்தினார். அதுவுமில்லாமல், தன்னுடைய முத்திரை மோதிரத்தை அந்த மனிதன் தவறான வழியில் உபயோகப்படுத்துவானோ என்று பயந்தார். இவ்வளவுக்கும் காரணம், தன் அவசரபுத்திதான் என்று மனம் வருந்திய படியே அரண்மனைக்கு வந்து சேர்ந்தார் சக்ரவர்த்தி.மறுநாள் பொழுது புலர்ந்ததும் சேவகன் ஒருவன் அவரிடம் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தான். அதைப் பிரித்ததும் அதற்குள்ளிருந்து அவருடைய முத்திரை மோதிரம் கீழே விழுந்தது. இதைப் பார்த்து வியப்படைந்த அக்பர், கடிதத்தை ஆர்வத்துடன் படித்தார்.'பெருமதிப்பிற்குரிய மாமன்னர் அவர்களுக்கு, இனிமேல் தனியாக நகரச் சோதனைக்குச் செல்ல மாட்டீர்களென்று நினைக்கிறேன். அவசரமும், ஆத்திரமும் துன்பத்தைத் தரும் என்பதை உணர்ந்திருப்பீர்களென்று நினைக்கிறேன். இங்ஙனம், வணக்கத்திற்குரிய பீர்பல்' என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.முன்தினம் தம்மை மடக்கியவர் மாறு வேடத்தில் வந்திருந்த பீர்பல்தான் என்பதை அறிந்ததும் சக்ரவர்த்தி பெரிதும் ஆறுதலடைந்தார்.