உள்ளூர் செய்திகள்

பாடலும் படிப்பும்!

திருப்பூர் மாவட்டம், உடுமலை, எஸ்.வி.ஜி.மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1993ல், 11ம் வகுப்பு படித்த போது நிகழ்ந்த சம்பவம்!வகுப்பில் மாணவி ரேகா நன்றாக பாடுவாள். அதை கேட்டால், காதில் தேன் பாய்வது போல் இருக்கும். ஆசிரியர் வராத வகுப்பு இடைவேளை நேரங்களில் புதிய சினிமா பாடல்களை பாடச் சொல்லி ரசிப்பது வழக்கம்!ஒரு நாள், மதிய உணவிற்குப் பின், 'வருஷம் பதினாறு' படத்திலிருந்து, 'பொங்கல்...' பாடலை பாட சொன்னோம். மேஜை மேல் ஏறி அமர்ந்து பாட துவங்கினாள். ரசித்தவாரே முதலிரு வரிசைகளில், நெரிசலாக அமர்ந்திருந்தோம்.ஜன்னல் அருகே ஒளிந்து நின்று கவனித்து கொண்டிருந்தார் வகுப்பு ஆசிரியை சாருலதா. பாடல் முடிந்ததும் உள்ளே வந்தார். அனைவரும் சிட்டாய் பறந்து, அவரவர் இருக்கையில் அமர்ந்தோம்; திருட்டு முழி முழித்தோம்.புன்னகையுடன், 'அழகாக பாடினாய்... ஆனால், அமர்ந்து பாடுவதற்கு ஆசிரியரின் மேஜை இடமில்லை...' என்று ஆங்கிலத்தில் அறிவுரை கூறி பாடத்தை துவங்கினார். பின், ஆசிரியை அனுமதியுடன் வகுப்பில் கடைசி, ஐந்து நிமிடங்கள் பாடல் கேட்பது எங்கள் வழக்கமானது.தற்போது, என் வயது, 42; இச்சம்பவம் இன்றும் என் நினைவுகளில் இனிமையாக உள்ளது. - கலைமணி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !