உள்ளூர் செய்திகள்

பனி விழும் திகில் வனம்! (3)

முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் மகள் மிஷ்கா. கற்பனை வளமும் நம்பிக்கையான முயற்சி உடைய சிறுமி. உயர்ந்த மலைகளில் ஏறி சாதனை படைக்கும் தந்தைக்கு நீண்ட ஆயுள் வேண்டும் என கனவில் தோன்றிய தேவதையிடம் வரம் வாங்கியதாக கூறியதுடன், தானும் மலை ஏற வருவதாக கூறினள் மிஷ்கா. இனி -ஒரு கணம் மகளை முறைத்தான் துருவ். அவன் முகம் கோபத்தில் கனன்றது.''நீ பைத்தியமா...''கத்தினான் துருவ்.''ஏன் சாதிக்க முடியாததையா கேட்டுட்டேன் அப்பா...'' என்றாள் கொஞ்சலாக மிஷ்கா.''சீதோஷ்ண நிலை, மலையேற்ற நோய் பாதிப்புகள், உயரம் தொடர்பாக உடலில் ஏற்படும் பாதிப்புகள், பனிப் புயல் எல்லாவற்றையும் சமாளித்து, இமயம் ஏறுவது ஆபத்தான விஷயம்... ''ஏறும் யாரின் உயிருக்கும் உத்தரவாதமில்லை. கடந்த, 2023ல், 18 மலையேறிகள் இறந்திருக்கின்றனர். 2024ல், ஒன்பது பேர் காணாமல் போயிருக்கின்றனர். எவரெஸ்ட் சிகரம் கருணை இல்லாத ராட்சசன். அவன் மீது ஏறி விளையாட விரும்ப மாட்டான். உன் ஆசையை முளையிலே கிள்ளிப் போடு...''''நீங்கள் எப்பப்பா ஊருக்கு போறீங்க...'' பேச்சை மாற்றினாள் மிஷ்கா.''இன்னும், 10 நாள் சென்னையில், உன்னுடன் தான் இருப்பேன். பின், சிம்ரிக் ஏர்லைன்ஸ் அல்லது கோமா ஏர்லைன்ஸ் விமானத்தில் லுக்லா பறப்பேன். லுக்லாவிலிருந்து பல ஊர்கள் புகுந்து, இமயமலை அடிவார முகாமுக்கு செல்வேன்...''''இந்த, 10 நாட்களும் நீங்கள் என்னுடன் தான் இருக்க வேண்டும். நான் கேட்பதை எல்லாம் வாங்கி தர வேண்டும். நான் சொல்வதை எல்லாம் தட்டாமல் கேட்க வேண்டும்...'' அன்பு கட்டளை போட்டாள் மிஷ்கா.சம்மதம் தெரிவித்தான் துருவ். ''மேலும், 10 நாட்களும், காலை, மாலை இரண்டு நேரங்களும், என்னை உப்பு மூட்டை துாக்கி, ஒரு ஐந்து கி.மீ., சுற்றி வர வேண்டும்...''கலகலப்பு ஊட்டினாள் மிஷ்கா. ''உன்னை உப்பு மூட்டை துாக்க கசக்குமா என்ன... பஞ்சு மிட்டாய் நிலவு நீ, கை, கால் முளைத்த ைஹக்கூ கவிதை நீ, பிங்க் நிற முயல் குட்டி நீ, செங்கல் நிற பர்மீஸ் பூனை நீ, மயில் நிற டால்பின் குட்டி நீ...'' ''அச்சச்சோ... போதும்ப்பா நீங்க வர்ணித்தது. இன்னும் பல ஆவலாதிகள் உள்ளன. அவற்றை நீங்கள் நிறைவேற்றி தர வேண்டும்...''''சொல்... ஜமாய்த்து விடலாம்...''''கிராமத்து அப்பா தன் பிள்ளையை கழுத்தில் கோர்த்து அமர வைத்து, திருவிழா சுற்றி வருவாரே... அதை போல, நீங்கள் என்ன துாக்கி வைத்து பன்சிட்டி வெர்ச்சுவஸ் மால் கூட்டி செல்ல வேண்டும். எங்கும் இறக்கி விட கூடாது. மாலுக்குள் என் விருப்பத்துக்கு இறங்குவேன்...''''சரி...''''ஓ.டி.டி.,யில், நீங்களும், நானும் பாப்கான் கொறித்தபடி, ஐஸ்கிரீம் நக்கியபடி, 'குங்க்ப்பூ பாண்டா 4' பார்க்க வேண்டும்...''''பார்த்திட்டா போச்சு...''''பத்து நாளும் தினமும் ஒரு காஸ்ட்யூமில் நான் இருப்பேன். ஒரு நாள், கிறிஸ்துமஸ் தாத்தா போல, ஒரு நாள் குட்டி யானை போல, ஒரு நாள் காந்தி தாத்தா போல, ஒரு நாள் பாரதமாதா போல, ஒருநாள் போலீஸ் அதிகாரி போல, ஒரு நாள் டாக்டர் போல, பத்து நாளும் வித விதமான காஸ்ட் ட்யூம்கள். நானும், நீங்களும் செல்பி எடுத்து முகநுாலில், இன்ஸ்டாகிராமிலும் பகிர வேண்டும்...''''பத்து வித காஸ்ட்யூமும் போட்டு பாத்திரலாம்... வேற வேற...''''நீங்களும், நானும், பல்லாங்குழியும், தாயக்கட்டையும் ஆட வேண்டும்...''''சரி...''''ஒரு பாக்கெட் தேன் மிட்டாய், ஒரு பாக்கெட் கோவில்பட்டி கடலை மிட்டாய், கல்கோனா மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், நெல்லிக்காய், கொடுக்காபுளி, கடிகார மிட்டாய், சூட மிட்டாய், வறுத்த புளியங்கொட்டை நீங்கள் எனக்கு வாங்கி தர வேண்டும்...''''எத்தனை ஆண்டு ஆசைகளை, 10 நாட்களில் நிறைவேற்ற பார்க்கிறாய்... தின்பண்டங்களை வாங்கி குவித்து விடுகிறேன்...''''எனக்கு தலை வாரி, தலை நிறைய மல்லிகைப் பூ சரம் பின்ன வேண்டும்...'' சிரித்தான் துருவ்.''இன்னும் சில ஆண்டுகள் குழந்தையாகவே இரு செல்லம். திடீரென்று குமரிக்கு தாவி விடாதே...''''வாய் சிவக்க வெற்றிலை பாக்கு போட வேண்டும்...''''தொண்டு கிழவி ஆசை...''''பத்து நாட்களும், நான் உங்கள் மடியில் படுத்து துாங்க வேண்டும்; தாலாட்டு பாட தெரிந்தால் நீங்கள் பாடலாம்...''தாலாட்டு பாடினான் துருவ்.''சபாஷ்...'' கை தட்டினாள் மிஷ்கா.''மீதி தாலாட்டு பாட்டையும் பாடிடவா செல்லம்...''''போதும்... போதும்... இப்ப நான் ஒரு சென்டிமென்ட்டான விஷயம் கேட்பேன்... செய்வீங்களா...''''செய்கிறேன்...''''ஒரு அடி உயரத்தில் அம்மா போல் ஒரு பொம்மை வேண்டும். நீங்கள் அருகில் இல்லாத போது, அம்மா அருகில் இருக்கும் நல்லுணர்வு கிடைக்கும்...''மனைவி அனன்யா நினைவு மனக்கண்ணில் ரயில் வண்டியாக ஓடியது. லேசாய் கண்ணீர் கசிந்தான் துருவ். மகளுக்கு தெரியாமல், கண்களை துடைத்துக் கொண்டான்.''சரிம்மா... அச்சு அசலா அம்மா உருவத்தில் ஒரு பொம்மை செஞ்சு தரேன்...''''ஊருக்கு போறதுக்கு முன், என் இரு கண்களிலும், நெத்தியிலும், ஆயிரம் முத்தங்கள் கொடுத்து விட்டு போகணும்...''''சரிடா கண்ணு...''''காஞ்சிபுரம் இட்டிலியும், கெட்டி தேங்கா சட்னியும் வாங்கி தாங்க. ஒரு நாள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், ஒரு நாள் திருச்சி உச்சிபிள்ளையார் கோவில் அழைத்து போகணும்... இதெல்லாம் விட, எனக்கு நீங்க ஒரு சத்தியம் செய்து கொடுக்கணும்...''''என்ன...''''எனக்கு, 20 வயதானதும், மலையேற்றத்துக்கு அனுமதிக்க வேண்டும்...''''படிப்பு முடிஞ்சதும் தாராளமாக நீ மலையேறலாம்...''பேசிக்கொண்டிருக்கும் போதே, அறைக்குள் ஒரு மைனா பறந்து வந்து, சுற்றிக் கொண்டிருந்த மின் விசிறியில் சிக்கி கூழாகி, மிஷ்கா காலடியில் விழுந்தது.- தொடரும்...- மீயாழ் சிற்பிகா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !