பனி விழும் திகில் வனம்! (10)
முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் மகள் மிஷ்கா, நம்பிக்கையும், கற்பனை வளமும், சாகசம் செய்யும் துணிவும் மிக்க சிறுமி. இமயமலை சிகரம் ஏறப்போகும் தந்தையை பிரிய மனம் இன்றி கண்ணீர் வடித்தாள். மகளை பிரிந்து இமயமலை அடிவாரப்பகுதிக்கு சென்றான் துருவ். அங்கிருந்த இந்திய மலையேற்ற வீரர்களுக்கு உதவும் அமைப்பின் தலைவர் தடுத்தார். அதை ஏற்காமல் செயல்பட்டான் துருவ். இனி - மலையேறும் சகாக்களுடன் ஆறு மணி நேரம் ட்ரக்கிங் செய்து, 'டெங்போசே' புத்த மடாலயத்துக்கு வந்தான் துருவ். சுற்றிலும், 12 டிகிரி சென்டி கிரேடு தட்ப வெப்பம் நிலவியது. பனிமலைகள் பின்னணியில் மடாலயம் மிடுக்காய் நிமிர்ந்திருந்தது. மடாலயம் முழுக்க கற்களால் கட்டப்பட்டு புனரமைக்கப்பட்டிருந்தது.பிரார்த்தனை ஹாலில் சாக்கியமுனி புத்தாவின் சிலை பிரமாண்டமாய் நிமிர்ந்திருந்தது. மடாலய உச்சியில், மண், காற்று, நெருப்பு, நீர், மனசாட்சியை குறிக்கும் ஐவகை கொடிகள் பறந்தன.முழுக்க சிற்பங்களும், ஓவியங்களும் நிறைந்திருந்தன.புத்தமத துறவியர் மந்திரங்களை தொடர்ந்து ஓதியபடி இருந்தனர்.துருவும், அவனது சகாக்களும் சம்மணமிட்டு அமர்ந்திருந்தனர். தலைமை துறவி துருவிடம் வந்தார்.''இன் குங் டெலக்...'' ''இன் குங் டெலக்...''இவ்வாறு, இனிய நண்பகல் வணக்கம் கூறியபடி, ''என் மனம் சஞ்சலமடைந்திருக்கிறது. அமைதி பெற உங்களிடம் வந்தேன்...'' என கனிந்தான் துருவ்.''மகிழ்ச்சி... என் தனியறைக்கு வாருங்கள்...''தனியறையில் தலைமை துறவியும், துருவ் மற்றும் சகாக்களும் எதிர் எதிரே அமர்ந்தனர்.''உனக்கு என்ன பிரச்னை சொல் துருவ்...''''நான், 31 முறையாக எவரெஸ்ட் ஏறுவதாக இருக்கிறேன். ஆனால், சில சக்திகள் நான் மலையேறுவதை தடுக்கின்றன...''''அப்படியா... இப்போது நான் என்ன செய்ய வேண்டும்...''''நான் மலையேற போகலாமா, வேண்டாமா என நீங்கள் தான் கூற வேண்டும். உங்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்...''''யாருடைய தீர்ப்புக்காகவும் காத்திருப்பவன் இல்லை நீ. என்னை ஆழம் பார்க்க வந்திருக்கிறாய்...''''அப்படியல்ல... கீழ்ப்படிதலுடன் தான் வந்திருக்கிறேன்...''சிரித்தார் தலைமை துறவி.சீன ட்ராகன்கள் வரையப்பட்ட தாயக்கட்டைகளை எடுத்தார்.சுழற்றி போடுவதற்கு முன், நடு நெற்றியில் குவித்தார்.முதல் முறை, மூன்று விழுந்தது.இரண்டாம் முறை, ஏழு விழுந்தது.மூன்றாம் முறை, 11 விழுந்தது.தலைமை துறவியின் முகம் வாடியது.''தாயக்கட்டைகள் என்ன சொல்கின்றன பன்டே...''பதில் கூறாமல் மவுனித்தார்.''நமோ புத்தாயா...'' முணுமுணுத்தான் துருவ்.பல்வர்ண கூழாங்கற்களை சுழற்றி போட்டார் தலைமை துறவி.தொடர்ந்து அரிசி மணிகளை இரு கை குவித்து கொட்டினார்.மாவு உருண்டையை போட்டார்.இரு பனிகோழிகளை துருவ் முன் நடக்க விட்டார்.கோள வடிவ கண்ணாடி வைத்து துருவ் பிரதிபலிப்பை பார்த்தார். ஒரு கிண்ணத்தில் நீர் வைத்து துருவ் பிம்பத்தை அலசினார்.வெளியில் போய் வானத்தை அண்ணாந்தார்.பின், நீண்ட நேரம் மந்திரங்களை உச்சரித்தார்.தலைமை துறவியின் நடவடிக்கைகளை உன்னித்தவாறே மவுனமாய் அமர்ந்திருந்தான் துருவ்.''என்ன பார்த்தீர்கள் பன்டே...''''இந்த முறை எவரெஸ்ட் ஏறலாமா, இல்லையா... இது தானே உன் கேள்வி...''''ஆமாம்...''''ஒரே வார்த்தையில் கூறுகிறேன். இந்த முறை எவரெஸ்ட் ஏறக்கூடாது...''''ஏன்...''''சமிக்ஞைகள் சரியில்லை...''''என்ன சமிக்ஞைகள்...''''ஏதோ கெட்டது நடக்கப் போவதாக சமிக்ஞைகள் காட்டுகின்றன...''''கெட்டது என்றால்...''''திடீரென்று ஒரு பனிப்பூகம்பம் வெடித்து, நீ எவரெஸ்ட் ஏறுவதை நிறுத்தலாம். அல்லது ஏதாவது ஒரு அசம்பாவிதத்தால், நீயும், உன் சகாக்களும் மரணக்காயப்படலாம். அல்லது நீ இறந்து போகலாம். மொத்தத்தில், உன், 31வது மலையேற்றம் வீண்...''ஆங்காரமாக சிரித்தான் துருவ்.''எல்லாம் சரியாக சொல்கிறீர்களா அல்லது யாரையாவது திருப்திபடுத்த சொல்றீங்களா...''''துறவிக்கு மனிதரை திருப்திபடுத்தும் அவசியம் இல்லை...''''ஏதாவது பரிகாரம் உண்டா...''இடி இடி என சிரித்தார் தலைமை துறவி.''ஒன்றே ஒன்று உள்ளது துருவ்...''''அது என்ன...''''நீ பத்திரமாய் ஊர் திரும்பி போவது...''அழுது விட்டான் துருவ்.''ஏன் அழுகிறாய்...''''முன் வைத்த காலை பின் வைப்பது என் பழக்கம் இல்லை. வேதனைகளை, சாதனைகளாக மாற்றி காட்டுவேன் பன்டே...''''நான் உன்னை எதுவும் வற்புறுத்தவில்லை. நீ எந்த முடிவும் எடுக்கலாம்...'' சில மூங்கில் பூக்களை துருவ்வின் கைகளில் கொட்டினார்.''என்னை ஆசிர்வதியுங்கள் பன்டே... எனக்கு அது போதும்...''''புத்தர் உனக்கு வெற்றியை பரிசளிக்கட்டும்...''''நன்றி...''''காலே பெப்...'' என பிரியா விடை கொடுத்தார் தலைமை துறவி.''வி லா ஜெல் யோங்...'' என்றான் துருவ். அதற்கு விரைவில் உங்களை சந்திப்பேன் என்பது பொருள்.துருவ் சகாக்களுடன் எழுந்தான்.கையிலிருந்த மூங்கில் பூக்கள் கறுத்து சாம்பலாய் உதிர்ந்தன!- தொடரும்...- மீயாழ் சிற்பிகா