உள்ளூர் செய்திகள்

உழைப்பே உயர்வு!

வீரவநல்லுார் கிராமத்தில், வீராசாமி என்ற விவசாயி வசித்துவந்தான். தனது நிலத்தில், நெல், கரும்பு, வாழை, சோளம் என, காலத்துக்கு ஏற்ப பயிர்களை விளைவித்தான். நிலத்தை பண்படுத்தி, வேலியிட்டு, மனைவியுடன் சேர்ந்து பாடுபட்டு விவசாயம் செய்து வந்தான். நிலத்தை உழுவது, விதைப்பது, களை பறிப்பது, இயற்கை உரமிடுவது, நீர் பாய்ச்சுவது போன்ற அனைத்தையும் இருவரும் சேர்ந்து மேற்கொண்டனர். வேலை செய்து களைத்த வீராசாமி, ஒரு நாள் மதிய வேளையில் ஒரு மரத்தின் நிழலில் படுத்து கண் அயர்ந்தான். அப்போது, திடீரென ஒரு தேவதை வீராசாமி முன் தோன்றினாள். வீராசாமியின் உழைப்பை சோதிக்க நாடகமாடினாள். 'வீராசாமி...' தன்னை பெயர் சொல்லி ஒரு பெண் அழைத்தது கேட்டு, கண் விழித்தான் வீராசாமி. பனிப்புகைக்கு இடையே ஒரு தேவதை நின்றிருந்ததை பார்த்து திடுக்கிட்டான். 'பயப்படாதே... உனக்கு உதவி செய்யத்தான் வந்துள்ளேன்...' என்றது, தேவதை. 'என் மனைவியுடன் உழைத்து, மகிழ்ச்சியாக தானே இருக்கிறேன்...' வீராசாமி குழப்பத்துடன் கேட்டான். 'உங்கள் இருவரை பார்க்க பாவமாக இருக்கிறது. தினமும் உழைக்கிறீர்கள். உங்கள் இருவருக்கும் குளிகை தருகிறேன். அதை சாப்பிட்டால், எப்போதுமே பசிக்காது... நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்க தேவையில்லை...' என்றது தேவதை. 'வேண்டவே, வேண்டாம்...' என்றான் வீராசாமி 'ஏன்...' வியப்புடன் கேட்டது தேவதை. 'உழைத்து பசித்தால் தான் உணவு ருசிக்கும். அதுமட்டுமல்ல... நான் உழைப்பது எங்கள் இருவருக்காக மட்டுமல்ல... என் தாய்த்திரு நாட்டு மக்களின் பசியாற்றுவதற்கும் தான்... விவசாயிகள் முடங்கினால், நாடே பசியில் அழிந்து விடும்...' என்றான் வீராசாமி. வீராசாமியின் உன்னத லட்சியத்தை வாழ்த்தி, விடை பெற்றது தேவதை. குட்டீஸ்... - உழைத்து உண்பது தான் உன்னதமான செயல்; நம் பசியாற்ற உழைக்கும் விவசாயிகளை வணங்குவோம். எஸ்.டேனியல் ஜூலியட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !