துணியும், மணியும்!
ராமநாதபுரம், தர்ம தாவள விநாயகர் நடுநிலைப் பள்ளியில், 1973ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...அன்று பள்ளி ஆண்டு விழா நிகழ்வில் போட்டிகள் ஒவ்வொன்றாக அரங்கேறின. மேடை அருகே அமர்ந்து ரசித்தபடியே இருந்தேன். அடுத்து, நாடகத்துக்கு ஏற்பாடு நடந்தது. அதில் நடிக்கவிருந்த ஒருவன் திடீரென வரவில்லை.என்னை அழைத்த ஆசிரியர்கள் ராஜேந்திரன், ஆறுமுகம், சகுந்தலா ஆகியோர், 'வேட்டி, துண்டு எடுத்து வா...' என அவசரப்படுத்தினர். என் வீடு அருகே இருந்ததால் ஓடிச் சென்று எடுத்து வந்தேன். ஒப்பனை அறைக்குள் அவசரமாக அழைத்து, 'பணியாளர் வேடத்தில் நீ தான் நடிக்க வேண்டும்...' என்று கூறினர். மறுத்தும் வற்புறுத்தி அரிதாரம் பூசி விட்டனர். அதில் நான் நடித்த காட்சி:முதலாளி: வேலையாக வெளியூர் செல்கிறேன். சலவைக்காரர் வந்தால், துணிமணிகளை எடுத்து தவறாமல் சலவைக்கு போட்டுடு...நான்: சரிங்க ஐயா...அடுத்த காட்சி --முதலாளி: சாமி அறையில் வைத்திருந்த மணியை காணல்லையே...நான்: நீங்க தானே ஐயா, துணியையும், மணியையும் சலவைக்கு போட சொன்னீங்க...இவ்வாறு வசனம் பேசி முடித்த போது, பார்வையாளர் பகுதியில் விண்ணதிர கைதட்டல் ஒலி எழுந்தது. நான் போட்ட வேடத்துக்கு முதல் பரிசாக, பேனா கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியும், எழுச்சியும் ஏற்பட்டது.என் வயது, 62; அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அறியா பருவத்தில் பள்ளியில் இயல்பாக நடித்ததை எண்ணும் போதெல்லாம் மனதில் சிரிப்போசை கரைபுரள்கிறது.- எம்.மனோகரன், ராமநாதபுரம்.தொடர்புக்கு: 94861 79685