உள்ளூர் செய்திகள்

சாகச வீரன் சூப்பர் தும்பி!

''முகில்... அங்க என்ன செய்துட்டு இருக்க...''தோட்டத்தில், தும்பிகளை பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்த சிறுவனை அந்த குரல் கலைத்தது.உற்சாகத்துடன், ''அம்மா... இங்க வாங்களேன்... எத்தனை தும்பி பாருங்கம்மா... நம்ம தோட்டத்துல அழகா பறக்கின்றன. பார்க்க, பார்க்க ஆசையா இருக்கு...'' என கையில் தும்பியை பிடித்தபடி வந்தான் முகில்.''இதென்ன கெட்ட பழக்கம். எந்த உயிரினத்தையும் துன்புறுத்த கூடாது. ஓடி விளையாடுற உன்னை பிடிச்சு, கட்டி வெச்சா, வலிக்குமா, வலிக்காதா... அப்படித் தான், விலங்குகளும், பூச்சிகளும்... அதுங்களோட உலகத்துல, நாமும் இருக்கோம். நாம வலிமை மிக்கவங்க என்பதாலே துன்புறுத்த கூடாது. விட்டுடு...''மென்மையாக சொன்னார் அம்மா.''மன்னுச்சுருங்கம்மா... இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன்; என் நண்பன் முத்து தான், தும்பி பிடிக்க சொல்லிக் கொடுத்தான்; அவனையும் பிடிக்க கூடாதுன்னு சொல்லிடுறேன். மன்னிச்சுரு தும்பி... ஏதோ ஆசையில பிடிச்சுட்டேன்; இப்ப விட்டுடறேன்... நீ சுதந்திரமா பறந்து போ...'' என்றபடி விட்டான்.உற்சாகமாக சிறகடித்து பறந்தது தும்பி.பள்ளியில் -''முத்து... இனிமே தும்பி, பட்டாம் பூச்சி எல்லாம் பிடிச்சு விளையாடறதை விட்டுடு. நம்மை போல, அவையும் உயிரினங்கள். துன்புறுத்தக் கூடாது...'' என்றான் முகில்.''போடா... அறிவுரை கூற வந்துட்டான். நீ வேணா பிடிக்காதே... தும்பி மட்டும் இல்ல... பொன்வண்டு, பட்டாம் பூச்சி எல்லாம் பிடிப்பேன். உன்னால முடிஞ்சதை செய்...''''உன் கிட்ட ஏதாவது பூச்சியை பார்த்தா அவுத்து விடுவேன்...''''முடிஞ்சா செய். இதோ பாரு... என் கிட்ட ஒரு தும்பி இருக்கு. இதோட ரெக்கையை உடைச்சு வெச்சுக்க போறேன்...''''வேணாம்டா விட்டுடு...'' தும்பியின் இறக்கையை உடைக்க முயன்றான் முத்து.சினம் கொண்டு அவன் கையைத் தட்டி விட்டான் முகில்.தும்பி விடுபட்டு பறந்தது. அடுத்த கணம் முகில் முகத்தில், ஒரு குத்து விழுந்தது. அலறியபடி அதிர்ந்தான்.''எவ்வளோ கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்தேன்; இப்படி தட்டி விட்டுட்டியே... அதுக்கு பரிசு தான் இந்த குத்து! நாளைக்கு, மறுபடியும் தும்பியோட வருவேன்; அப்ப வால் ஆட்டுனே, பல்லு உடைஞ்சிடும்...'' முத்து கூற, கண் கலங்கியவாறு நடந்தான் முகில்.அன்று இரவு -விளையாடிய பின் துாங்க சென்றான் முகில்.அவன் தோள் மீது வந்து அமர்ந்த தும்பி, 'என்ன முகில்... அடி பலமா பட்டிருச்சா... வலிக்குதா...' என்றது.'யாரு... யாரு... பேசுறது...''நான் தான் உன் தோள் பட்டையில் உக்கார்ந்திருக்கேன் பார். காலையில், காப்பாற்றினாயே அந்த தும்பி...'முகிலின் கண்கள் வியப்பால் விரிந்தன.'நீ பேசக்கூட செய்வாயா...' 'சாதாரண தும்பியால் பேச முடியாது. ஆனால், நான் வினோத தும்பி; முனிவர் ஒருவர் சாபத்தால், இப்படி மாறி விட்டேன்; உண்மையில் நான் கந்தவர்மன்...''கந்தவர்மனா...'சந்தேகத்தில் புரியாமல் கேட்டான் முகில்.'நிஜமா தான்; நாங்கள், வானில் வசிப்பவர்கள்; ஒருமுறை அப்படியே, சஞ்சாரம் செய்த போது, விந்திய மலை அடிவாரத்தில் ஒரு முனிவர் ஆசிரமத்தில் நுழைந்தேன்; அங்கு, கூடைகளில் மலர்கள் நிறைந்து இருந்தன. மலர்களின் வாசம் கவர்ந்தது; அப்படியே இறங்கி, கூடையோடு மலர்களை எடுத்து, முகர்ந்து கொண்டிருந்தேன்...'முனிவர், ஆவேசத்தோடு வந்தார். பூஜைக்கு வைத்திருந்த மலர்களை பாழாக்கி விட்டதாக கடிந்தார். பூஜை பூக்களை நுகர்ந்ததால் தும்பியாக மாறி, பூக்களை தினமும் நுகர சாபம் இட்டு விட்டார்...'சாப விமோசனம் கேட்டு கெஞ்சினேன். நல்ல மனதுள்ள ஒரு சிறுவன், உன்னை விடுவிப்பான்; அவனுக்கு தேவையான உதவிகளை செய்தால் அப்புறம் விமோசனம் கிடைக்கும் என்றார்...'அதன்படி நீ தான் என்னை விடுவித்தாய்; எனக்கு சாப விமோசனம் கிடைக்கும்; அதற்கு நன்றி கடனாக என் சக்தியை தரப் போகிறேன். இன்று முதல், உன்னால் பறக்க முடியும். என்னை எண்ணி, 'சிறகே வா... சீக்கிரம் பற...' என்றால் அந்தரத்தில் பறப்பாய். சூப்பர் தும்பியாகி நான் தரும் சக்தியை பயன்படுத்தி நன்மைகள் செய்...' என மறைந்தது தும்பி.நடப்பது எதையும் முகிலால் நம்ப முடியவில்லை.அப்போது, சற்று துாரத்தில் ஒரு பொன்வண்டை பிடித்து சித்திரவதை செய்து கொண்டிருந்தான் முத்து. அவனுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்தான் முகில்.தும்பியை எண்ணியபடி, 'சிறகே வா... சீக்கிரம் பற...' என்றான்.அடுத்த நொடி, பறந்தபடி முத்துவின் முன் வந்து நின்றான் முகில். அவனைக் கண்டதும், 'காலையில் வாங்கினது பத்தலையா...' என ஏளனமாக சிரித்தான் முத்து.'அந்த பொன்வண்டை விட்டுடு...''இல்லன்னா என்ன செய்வே...'கேட்ட அடுத்த நொடி - முத்துவை துாக்கியபடி பறந்தான் முகில்.உயரமான மரக்கிளை ஒன்றில் தொங்க விட்டான்.எதுவும் புரியாமல் வெலவெலத்து போனவனிடம், 'எப்படி இருக்கு தொட்டில். ராத்திரி முழுக்க இங்க துாங்குறியா...' என்றான் முகில்.முத்துவின் கண்களில் பயம் தெரிந்தது.'வேண்டாம். இந்த பொன்வண்டை விட்டுடுறேன்...''இதை மட்டும் இல்ல. இனி, எந்த உயிரினத்தையும் சித்திரவதை செய்ய மாட்டேன்னு சொல்லு...''எந்த வம்புக்கும் போகமாட்டேன்...'மரத்திலிருந்து முத்துவை இறக்கினான் முகில்.'டமால்' என்ற சத்தம் கேட்டது. கட்டிலில் இருந்து, புரண்டு விழுந்தான் முகில்.''ஏன்டா கனவு ஏதாவது கண்டியா... துாக்கத்திலே உளறினே, இப்ப புரண்டு விழுந்திருக்கே...'' முகிலிடம் கேட்டார் அம்மா.''ச்சே... எல்லாம் கனவா...''முகம் கழுவ குளியலறை சென்றான் முகில். அப்போது, குளியலறை ஜன்னலில் தும்பி ஒன்று, அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.குழந்தைகளே... உயிரினங்கள் மீது, கருணை காட்ட வேண்டும்!எஸ்.சுரேஷ்பாபு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !