இளஸ் மனஸ்! (240)
அன்பு மிக்க அம்மா...என் வயது, 14; தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். தந்தையும், தாயும் பணியில் இருந்தாலும், மாத வருமானம், 70 ஆயிரம் ரூபாயை தாண்டவில்லை. என் சித்தப்பா கோடீஸ்வரர். அவருக்கு, 8 வயதில் மகன் இருக்கிறான். சமீபத்தில், ஊட்டிக்கு ரயிலில் சுற்றுலா சென்று வந்திருக்கின்றனர். அதிலிருந்து, சித்தப்பா மகன், 'பிறந்தநாள் பரிசாக ஒரு பழைய நீராவி இன்ஜின் வேண்டும்...' என அடம் பிடிக்கிறான். பழைய ரயில் இன்ஜின் விற்பனைக்கு கிடைக்கிறதா... யாரும் வாங்க முடியுமா... முழு விபரம் தந்து உதவுங்கள் அம்மா.இப்படிக்கு,எஸ்.அரிமா பாமகன்.அன்பு மகளுக்கு...ஜேம்ஸ் வட், 1776ல் நீராவி இயந்திரங்களை உருவாக்கி, உலகில் தொழில் புரட்சியை துவங்கி வைத்தார். ஜார்ஜ் ஸ்டீபென்சன், 1814ல் நீராவியில் ஓடும் ரயில் இன்ஜினை கண்டுபிடித்தார். இதில், ரிச்சர்ட் டிரிவித்திக் என்பவர் பங்கும் உள்ளது.ரயில் இன்ஜின், மரத்தால், எண்ணெயால், பீட் என்ற பொருளால், பழுப்பு நிலக்கரியால், கரியால், டீசலால் தற்சமயம் மின்சாரத்தால் இயக்கப்படுகிறது.சாதாரணமாக, நீராவி ரயில் இன்ஜின், 3,900 குதிரை சக்தியும், மின்சார ரயில், 12 ஆயிரம் குதிரை சக்தியும் உடையது. உலகிலே, அதிக குதிரை சக்தி உடைய இன்ஜின் வார்ட்சிலா சுல்சர் ஆர்டி ஏ 96-சி என்பதாகும். இது, ஐரோப்பிய நாடான பின்லாந்து ரயில்வே துறையால் உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் நவீனமயமாக்கலின் தொடர்ச்சியாக, 1955ல் தன் பழைய ரயில் நீராவி இன்ஜின்கள் அழித்தொழிக்கப்பட்டன.இப்போது, உன் சித்தப்பா மகன் விருப்பத்தை பற்றி பேசுவோம்...அமெரிக்காவில், 20 பழைய நீராவி ரயில் இன்ஜின்கள் விற்பனைக்கு உள்ளன. அதில் ஒன்றை வாங்கி, இந்தியாவுக்கு எப்படி எடுத்து வருவது என்று சிந்திக்கலாம். பிரபல கேலி சித்திரப்பட தயாரிப்பாளர் வால்ட் டிஸ்னி, தன் வீட்டு கொல்லைப்புறத்தில் ஒரு நீராவி இன்ஜினை வைத்திருந்தார் என்பது வரலாறு. ரயில் இன்ஜினை வாங்கினால் அது ஓட தனியாக தண்டவாளத்துக்கு எங்கே போவான் உன் சித்தப்பா மகன். ஓடாத பழைய ரயில் இன்ஜினை ரயில் சுடுகாட்டில் போட்டு வைப்பர். பழைய காயலான் கடை இன்ஜின்களை இரும்பு வியாபாரிகள் ஏல விற்பனையில் வாங்கி உடைத்து விற்பர்.ரயில் இன்ஜின் ஏலம் பற்றிய தகவல்களை http://ireps.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். ரயில் இன்ஜின் உள் பாகங்களை அகற்றி விட்டு தான் ரயில்வே நிர்வாகம் ஏலம் விடும். சாதாரணமாக பழைய ரயில் இன்ஜினை, 90 லட்ச ரூபாயில் ஏலத்தில் வாங்கலாம். நிறைய பேர் ரயில் பெட்டிகளை ஏலம் எடுத்து, ஓட்டலாக வடிவமைத்து நடத்துகின்றனர். ஏலம் எடுத்த பழைய ரயில் இன்ஜினை உன் சித்தப்பா தன் பங்களாவுக்கு முன்னோ, பின்னோ பொருத்தி மகனை அதில் ஏறி விளையாட சொல்லலாம். உன் சித்தப்பா மகன், அடுத்த பிறந்த நாள் பரிசாக, பறக்காத பழைய விமானம் கேட்கப் போகிறான்!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.