தோஷம்!
அரண்மனையில், அயர்ந்து துாங்கினார் மன்னர் இன்பன். அப்போது, அவர் மீது பல்லி ஒன்று விழுந்தது. உடனே, துாக்கத்திலிருந்து எழுந்தார். விழுந்து ஓடிய பல்லியை பார்த்தார். மன்னருக்கு பயந்து, சுவரில் ஒதுங்கியது பல்லி.'காவலர்களே... தண்ணீர் எடுத்து வாருங்கள்...'கட்டளையிட்டார் மன்னர்.தண்ணீர் வந்தவுடன் அதை வாங்கி, தன் தலையில் கொட்டிக் கொண்டார்.மன்னரின் செயலை குழப்பத்துடன் பார்த்து, சுவரில் இருந்து இறங்கியது பல்லி.தரையில் கொட்டிக் கிடந்த தண்ணீரில் தன் உடலை நனைத்தது.வியப்புடன் பல்லியை பார்த்தார் மன்னர்.'நீ எதற்காக தண்ணீரில் உருள்கிறாய்...''மன்னா... நீங்கள் எதற்காக குளித்தீர்...''நீ, என் மீது விழுந்தாய் அல்லவா... உன் உடல், என் மீது பட்டால் தோஷம் ஏற்படும். அதனால் குளித்தேன்...''மன்னா... உங்கள் உடல், என் மீது பட்டதால் தோஷம் ஏற்பட்டு விட்டது. அதனால் தான் குளிக்கிறேன்...' என்றது பல்லி.அதை கேட்டு விழிப்புணர்வு பெற்றார். அன்றே அது போன்ற மூடபழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மன்னர்.செல்லங்களே... இயற்கையின் படைப்பில் எல்லா உயிரினங்களும் மதிப்பு வாய்ந்தவை என உணர்ந்து செயல்படுவோம்!