உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு - நன்மை தரும் கீரைகள்!

உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் கீரை முக்கியமானது. அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல நோய்களை தடுக்கும் மருந்தாகவும் அமையும். கீரை மற்றும் அவற்றின் பயன்களை பார்ப்போம்...முளைக்கீரை: இருமலை நீக்கும். பசியை உண்டு பண்ணும்; சொறி, சிரங்கு நோய்களை குணமாக்கும். சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லாருக்கும் ஏற்றது.கலவைக்கீரை: இதயத்தை வலுப்படுத்தும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்; எந்த வகை மருந்து உண்டாலும், தவிர்க்காமல் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.புளிச்சக்கீரை: புளிப்பு சுவை உடையது. கெட்ட கொழுப்பை கரைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்; கல்லீரலை பலமாக்கும்; உடல் சூட்டை தணிக்கும். நாவின் சுவையை மீட்டு தரும்.குப்பைமேனி: இதன் இலைச்சாறு, வாந்தியை உண்டாக்கி, கோழையை அகற்றும். பசியை துாண்டும்; மூட்டு வலி, தலை வலி, வாத வீக்கத்தை குறைக்கும். மஞ்சளுடன் சேர்த்தரைத்து, முகத்தில் பூசி வர, கரும்புள்ளிகள் மறையும்.பொன்னாங்கண்ணி: உடலுக்கு அழகை உண்டாக்கும். சருமத்தை பாதுகாக்கும்; மூல நோயை கட்டுப்படுத்தும். மூளைக்கு புத்துணர்ச்சி தரும்; கண் பார்வைக்கு சிறந்தது.அகத்தி: எலும்பை பலப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும்; ரத்தத்தை சுத்தப்படுத்தும்; உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். பித்த மயக்கம் போக்கும்; நினைவாற்றலை அதிகரிக்கும்.காசினி கீரை: அதிக உயிர்ச்சத்து உடையது. சிறுநீரகத்தின் சீரான செயல்பாட்டுக்கு உதவக் கூடியது. உடல் எடை குறைய உதவும்; நீரிழிவை கட்டுப்படுத்தும். உடல் சூட்டை தணிக்கும்.சிறுகீரை: அடிக்கடி சாப்பிடலாம். சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களை போக்கும். பித்த நோய், சிறுநீர் எரிச்சலை தீர்க்கும்; சிறுநீரகம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றும்.பசலைக்கீரை: புது ரத்த உற்பத்தியில் சீராக செயல்படும். சிறுநீர் கடுப்பு, நீரடைப்பு தணிக்கும். மலச்சிக்கலை போக்கும்; கொடி பசலை கீரைச்சாறுடன் கற்கண்டு சேர்த்து பருகலாம்.பருப்புக்கீரை: வெயில் காலத்துக்கு ஏற்றது. குளிர்ச்சியை தரும்; மலச்சிக்கலை போக்கும்; கல்லீரல் நோய்க்கு மிகவும் சிறந்தது. தாய்ப்பால் அதிகரிக்க செய்யும். பிண்ணாக்குக் கீரை: வாய்வு தொல்லையை போக்கும். சிறுநீரக கோளாறை சரி செய்யும். வயிற்றில் தங்கும் மலத்தை வெளியேற்றும். மணலிக்கீரை: வயிற்றுப்புண், குடல் புண், செரிமானக் கோளாறை சரி செய்யும். வயிற்றில் இருக்கும் பூச்சியை வெளியேற்றும்; மூளையை பலப்படுத்தும். நினைவாற்றல் அதிகரிக்க உதவும்; மார்புச்சளி விலகும்.முருங்கை: இரும்புச் சத்து நிறைந்தது. உடலுக்கு வலிமை அளிக்கும். ரத்த சோகையை போக்கும். வயிற்றுப் புண் ஆற்றும்; உடல் சூடு தணிக்கும்; வறட்டு இருமல், மார்புச்சளி, மந்தம் போக்கும்.துாதுவளை: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும். இருமல், இளைப்பு, சளியை போக்கும்; பெருவயிறு மந்தம் சரியாகும்; செரிமானத்தை சீராக்கும்; கண்நோய் குணமாகும்.தவசிக்கீரை: ஆஸ்துமா, இருமல், ஜலதோஷம் குணமாக்கும். சளித்தொல்லையை அகற்றும்; தொண்டைப் புண் நீக்கும். மணத்தக்காளி: வாய்ப்புண், வயிற்று புண்ணை குணமாக்கும்; உடல் சூட்டை தணிக்கும். சோர்வை போக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.வல்லாரை: மூளைக்கு பலம் கொடுக்கும்; 'வெரிக்கோஸ் வெயின்' என்ற நரம்பு பாதிப்பை சரி செய்யும்; பார்வைத் திறனை அதிகரிக்கும்.அரைக்கீரை: உடலை பலப்படுத்தும். வாத நோயை தடுக்கும்; கபத்தை அறுக்கும்; நரம்புகளை பலப்படுத்தும். மாதவிடாய் பிரச்னையை சீராக்கும்.எளிதாக கிடைக்கும் கீரை வகைகளை உணவில் சேர்த்து நலம் பெறுவோம்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !