உள்ளூர் செய்திகள்

வெண்பா விருத்தம்!

மதுரை, சோழவந்தான் அரசஞ்சண்முகனார் உயர்நிலைப் பள்ளியில், 1960ல் எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது தமிழாசிரியராக இருந்தார் பெரும்புலவர் கு.குருநாதன். அன்று வெண்பா இலக்கணம் கற்பித்தார். ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வாங்க பொருளுதவி கேட்டு, என் தந்தையை சந்திக்க மறுநாள் வந்திருந்தார். என்னை கண்டதும், முதல் நாள் நடத்திய பாடம் பற்றி கேட்டார். தெரியாமல் விழித்ததால் அங்கேயே, இலக்கண பாடத்தை எளிமையாக சொல்லி தந்தார். அது மனதில் பதிந்தது. பள்ளி படிப்பை முடித்து, கர்நாடகாவில் இளநிலை மருத்துவர் பட்டம் பெற்றேன். தொடர்ந்து, மதுரையில் கண் மருத்துவத்தில் முதுநிலை படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆசிரியருக்கு கண்புரை நோய் இருந்ததால், தனியார் மருத்துவமனையில் ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்திருந்தார். எதிர்பாராதவிதமாக பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மறுகண்ணுக்கு சிகிச்சை பெற தயங்கியவரை, அவரது மகன் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், என்னிடம் அழைத்து வந்தார். நம்பிக்கை ஏற்படும் விதமாக பேசி, என் பேராசிரியர் தியாகராசனிடம் அறிமுகப்படுத்தினேன். மிகவும் கவனமுடன் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தோம். அதில் கண்ணொளி கிடைத்தது. அந்த நிகழ்வு மிகவும் மகிழ்ச்சி தந்தது. எனக்கு, 80 வயதாகிறது. மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினேன். ஓய்வு பெற்ற பின், தமிழில் வெண்பாவும், விருத்தங்களும் நாள் தவறாமல் எழுதி வருகிறேன். ஆசானாக அந்த ஆசிரியர் தந்த பயிற்சியே அதற்கு உதவி வருகிறது.- வ.க.கன்னியப்பன், மதுரை.தொடர்புக்கு: 63822 55750


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !