வதந்தி!
காலை, 9:00 மணி -பள்ளியில் வழிப்பாட்டு கூட்ட நேரம் நெருங்கியது.மாணவ, மாணவியரிடையே பெரும் பதற்றம் நிலவியது. ஒருவித கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். அது கண்டு, 'ஏன் பதற்றமாயிருக்கிறீர்கள்... அதற்கு காரணம் என்ன...' என ஒலிபெருக்கியில் கேட்டார் தலைமையாசிரியர் நல்லமுத்து. அவரது கம்பீரக்குரல், மாணவர்களை நிதானப்படுத்தியது. பதற்றம் சற்று குறைந்ததால், 'ஏதோ ஒரு செய்தி உங்களை பாதித்துள்ளது. யாராவது மேடைக்கு வந்து அதை பகிர்ந்தால் கோஷ முழக்கத்தில் நானும், பங்கு பெற உதவுமே...'ஒலி பெருக்கியில் மீண்டும் கூறினார் தலைமையாசிரியர்.மாணவன் ஒருவன் மேடை ஏறினான்.சமூக வலை தளத்தில் பரவிய குறுஞ்செய்தியை தெளிவாக பகிர்ந்தான்.மீண்டும் கோஷமிட துவங்கினர் மாணவர்கள்.'கோபம், கொந்தளிப்பை சற்று தள்ளி வையுங்கள். நான் சொல்வதை சற்று பொறுமையாக கேளுங்கள். காலை, பள்ளியை நான் நெருங்கும் தருணத்தில், மிதிவண்டியில் பயணித்த ஒரு மாணவர் மீது, எதிரே வந்த வாகனம் மோதியது. இதனால் காயம் அடைந்த அவருக்கு ரத்த இழப்பு ஏற்பட்டது...'காயம் பட்ட மாணவருக்கு கணித ஆசிரியர் உடனடியாக முதலுதவி செய்தார். பின், 108 என்ற எண்ணில் உதவி கேட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். உரிய ரத்தம் வழங்கி, அந்த மாணவனை காப்பாற்றியுள்ளார்... இந்த செய்தி உங்களுக்கு தெரியுமா...''மாணவர்களிடம் மவுனம் நிலவியது. அந்த தருணத்தில் மீண்டும் பேச்சை தொடர்ந்தார் தலைமையாசிரியர்.'ஒருவர் பெறும் கல்வி, அறிவை வளர்க்க வேண்டும். எந்த அழிவையும், காக்கும் கருவியாக திகழ்கிறது அறிவு. அதை முழுமையாக பெற முயற்சிக்க வேண்டும். யார், எதை சொன்னாலும் அதன் உண்மை பொருளை அறிந்து செயல்படுவது தான் அறிவு. அதுவே உலகுக்கு நன்மை தரும்...'உரையை முடித்தார் தலைமையாசிரியர்.மறுகணம் பாராட்டு கோஷம் விண்ணை பிளந்தது. உண்மையை உணர்ந்து வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றனர் மாணவ, மாணவியர்.பட்டூஸ்... எந்த தகவல் என்றாலும் சரியா என்று நன்கு விசாரித்து அறிந்த பின்பே பிறருக்கு பகிர வேண்டும்! - எஸ். ராமன்