உள்ளூர் செய்திகள்

அணில்!

உலகம் முழுவதும், 365 அணில் ரகங்கள் உள்ளன. அறிவியல் பகுப்புப்படி ஒரே குடும்பத்தில் அடங்கி விடுகின்றன. மேலும் ரகங்களை தேடி வருகின்றனர் விஞ்ஞானிகள். வாழ்க்கை முறை அடிப்படையில், நிலத்தில் வாழ்பவை; மரத்தில் வாழ்பவை; பறக்கும் அணில் என வகை பிரித்துள்ளனர்.'ஸ்குரோடியா' என்னும் விலங்கினக் குடும்பத்தை சேர்ந்தது. பறவை போல் கூடு கட்டி வாழும். உலகில் தோன்றி, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆவதாக கணித்துள்ளனர். இதன் புதை படிவங்கள் உலகின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன.அணிலை ஆங்கிலத்தில், 'ஸ்குரெல்' என்பர்; இது, கிரேக்க மொழிச் சொல். 'ஸ்கிரோஸ்' என்ற கிரேக்கச் சொல், நிழல் என்ற பொருளையும், 'அவுரா' என்பது வால் என்ற பொருளையும் குறிக்கும். இரண்டும் இணைந்து, 'ஸ்குரெல்' என்றாகி விட்டது. கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில், அணில்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். வாலுடன் நிழலில் அமர்ந்திருக்கும் பிராணி என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார்.விலங்குகளில், பாலுாட்டி வகையை சேர்ந்தது அணில். கர்ப்ப காலம், 33 முதல், 60 நாட்கள் வரை. ஒரே முறை, நான்கு குட்டிகள் வரை ஈனும்.பிறக்கும்போது, உடல், 1 அங்குல நீளம் இருக்கும். எட்டு வாரங்கள் வரை கண்களை திறக்காது. அப்போது உடல் முழுவதும் முடி வளரும்; கொறிக்க வசதியாக பற்களும் முளைக்கும். பின், கண்கள் திறந்து உலகை பார்க்கும்.மரக்கிளையில் தீட்டி, பற்களை கூர்மையாக்கி கொள்ளும். சில நேரம் மின்சார வயர்களை கூட கடித்து துவம்சம் செய்வதும் உண்டு. இந்த பண்பால், ஒருமுறை அமெரிக்க நாடு முழுதும் மின் தடை ஏற்பட காரணமாகிவிட்டது அணில். கொறித்து பற்களை தேய்க்காவிட்டால், ஆண்டிற்கு அரை அடி நீளம் வளர்ந்து விடும். பற்களால் தோட்டத்தில் குழி தோண்டி நாசமும் செய்யும்; பழம், காய்கறிகளை மரத்திலே கடித்து குதறி சேதமும் விளைவிக்கும். அதே நேரம் பழம், காய்கறிகளோடு தீமை செய்யும் பூச்சிகளையும் விழுங்கி, விவசாயிகளுக்கு நன்மையும் செய்கிறது. அணிலின் ஆயுட்காலம் ஆறு ஆண்டுகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !