கதை புத்தகம்!
''ஒரு ஊர்ல, ஒரு ராஜா... அவருக்கு, மூன்று பிள்ளைகள்...''கதைக் கூற துவங்கினார், ராகவன்.''நிறுத்துங்க தாத்தா... எத்தன முறை இதேயே சொல்லுவீங்க... வேற எதாவது சொல்லுங்க...''அன்பாக வேண்டினான் விச்சு.''தாத்தவ, தொந்தரவு செய்யாத... இதய நோய்ல சிரமப்படுறாருல... துாங்க விடு. தொல்லை பண்ணக்கூடாது. அவரென்ன கதைப் புத்தகமா... தினமும் சொல்ல... போய் துாங்கு. காலையில் எழுந்து பள்ளிக்கூடத்துக்கு கிளம்பணும்...'' மகனை அதட்டினார் மாறன்.''ஏம்பா... கதைதானே கேக்குறான்... சொன்னாப் போச்சு! வாடா செல்லம்...'' பேரனை அருகே அழைத்து, இனிமையாக சொல்ல ஆரம்பித்தார் ராகவன்.வாய்பிளந்து கேட்டபடியே, மடியில் துாங்கிப் போனான் விச்சு.''என்னங்க... இதுக்கு முதல்ல முடிவு கட்டணும்; கதை கேட்டாத்தான் துாங்கவே செய்றான். இது என்ன கெட்ட பழக்கம்! அவன் தான் சின்னப்பையன்; உங்கப்பாவுக்கு எங்க போச்சு புத்தி... கொஞ்சம் கண்டிச்சு வைங்க...''கடிந்தாள், மாறன் மனைவி தமிழரசி.விடிந்தது -காலை உணவு செய்து கொண்டிருந்தாள் தமிழரசி. அலைபேசி அழைத்தது.பேசினார் மாறன்; முகத்தில், பரபரப்பும், அவசரமும் தொற்றிக் கொண்டது. ''என்னங்க... யாரு போன்ல... ஏன் பதற்றமா இருக்கீங்க...''கணவரைக் கேட்டாள் தமிழரசி.''என்னோட ஆபீசர் தான்; அவசரமா டில்லிக்குப் போகணுமாம்; முக்கியமான மீட்டிங்; ஒண்ணும் புரியல...''''இதிலென்ன யோசனை... உடனே புறப்படுங்க... விச்சுவையும், மாமாவையும் நான் கவனிச்சுக்கிறேன். இரண்டு நாள்ல வந்துடுவீங்கல... பத்திரமா போயிட்டு வாங்க...'' மனைவி அனுமதி கிடைத்தது.அவசரமாக புறப்பட்டார் மாறன்.இரண்டு நாட்களுக்கு பின் -''வீட்ல எதுவுமே ஒழுங்கில்லை... வெச்சது வெச்ச இடத்துல இருக்கறதுல்ல... 3 ஆயிரம் ரூபாவாச்சே... அவருக்கு தெரியாம கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வெச்சிருந்தேனே... எங்க போயிருக்கும்...''புலம்பியபடியே, அங்குமிங்கும் நடந்தாள் தமிழரசி.''என்னம்மா ஆச்சு... ஏன் டென்ஷனா இருக்க...'' மருமகளிடம் கனிவுடன் விசாரித்தார் ராகவன்.''ம்... என்ன ஆகணும்; அலமாரியில வெச்சுருந்த, 3 ஆயிரம் ரூபாயை காணோம்; வீட்டுல இருக்கிறதே, மூணு பேரு தான்; எங்கே போயிருக்கும். ''செலவுக்கு வேணும்ன்னா கேட்டு வாங்கிக்க வேண்டியது தானே; இதென்ன புது பழக்கம்... எல்லாத்தையும் பூட்டித்தான் வைக்கணும் போலிருக்கு; டில்லியிலிருந்து அவர் வரட்டும். ஒரு முடிவு கட்டறேன்...'' கோபமாக வெடித்தாள் தமிழரசி.ராகவனுக்கு மனம் என்னவோ செய்தது; கண்கள் இருட்டின. மயக்கத்தில் ஈசிசேரில் சாய்ந்து விட்டார்.மதியம் சாப்பிட பிடிக்கவில்லை.மருமகள் பேச்சு மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தபடியே இருந்தது.அன்று மாலை -பள்ளி விட்டு வந்தான் விச்சு. ஆசையாக ஓடி வந்து, ''தாத்தா... இன்னக்கி ஒரு நல்ல கதையா சொல்லணும்... ராத்திரி அப்பா வர்ற வரைக்கும் விழித்திருப்போமா...'' என தோளில் சாய்ந்தான்.மழலைக்குரல் ஆறுதல் தந்தது.இடையில் குறுக்கிட்டு அத்திரத்துடன், ''அங்கென்ன வெட்டியா பேச்சு; இல்லாத பழக்கமெல்லாம் கத்துக்கப் போற.... யார நம்பறதுன்னே தெரியல...'' ஜாடை பேசினாள் தமிழரசி.ராகவனுக்கு உடல் வியர்த்தது; கண் கலங்கியபடி படுக்கைக்கு சென்றார். துாக்கம் வர மறுத்தது. மனமுடைந்து புரண்டு படுத்தார்.நள்ளிரவு, 2:00 மணி -அழைப்பு மணி ஒலித்தது.கதவை திறந்தாள் தமிழரசி.''வாங்க... போன வேலை முடிஞ்சுதா... உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்...''''என்ன இந்த நேரத்தில அவசரம்....''''கஷ்டப்பட்டு சேர்த்து வெச்சுருந்த, ௩ ஆயிரம் ரூபாயை காணோம். உங்க அப்பா வேலையாத்தான் இருக்கணும்; சாடை மாடையா கேட்டத்துக்கு, சாப்பிட மறுத்து துாங்கப் போயிட்டாரு...''''பீரோவில் நீ வைச்சிருந்த பணம் தானே... அதை நான் தான் எடுத்து போனேன். சிறுவர் கதைப் புத்தகங்கள் வாங்க, அவரசத்துல சொல்லாம போயிட்டேன்... உண்மை தெரியாம சந்தேகப்பட்டுட்டியே...''புத்தகப் பார்சலுடன் கூடத்தில் படுத்திருந்த அப்பாவிடம் ஓடினார் மாறன்; எழுப்ப முயன்ற போது எந்த சலனமும் இல்லை. ராகவன் உடல் சில்லிட்டிருந்தது.குழந்தைகளே... சந்தேகம் என்பது கொடிய நோய். தீர விசாரித்து அறியாமல் பழி சொல்லக்கூடாது. பூபதி பெரியசாமி