சூப்பர் மேன்!
சிறுவர், சிறுமியரை மலைப்புக்கு உள்ளாக்கும் கதாபாத்திரம், சூப்பர்மேன். காமிக்ஸ் வகை கதைகளால் கலக்கிவருகிறது. அசையும் படமாகவும், அசல் நடிகர்களின் பாத்திரமாகவும் பரிணமித்துள்ளது. உலகம் முழுதும், சிறுவர்களிடம் பிரபலமாகியுள்ள சூப்பர்மேன் பற்றி அறிந்து கொள்வோம்!அமெரிக்கா, ஓகியோ நகரைச் சேர்ந்த இருவர், 1933ல், மாணவப் பருவத்தில், 'சூப்பர்மேன்' கதாபாத்திரத்தை கற்பனையாக உருவாக்கினர். அதில் ஒருவர் ஜெரி சேகல்; அந்த பாத்திரத்துக்கான கதையை உருவாக்கினார். மற்றொருவர் ஜோ சூஸ்டர்; அந்த பாத்திரத்துக்கு உயிர் ஊட்டும் படங்களை வரைந்தார். இருவரும் இணைந்து உருவாக்கிய புத்தகத்தை வெளியிட, பல பதிப்பகங்களை அணுகினர். யாரும் கண்டுகொள்ளவில்லை. நிராகரிக்க பல காரணங்கள் கூறப்பட்டன. அதில் படங்கள் கவர்ச்சியாக இல்லை என்பதும் ஒரு காரணம்! கடும் போராட்டத்துக்கு பின், காமிக்ஸ் புத்தகமாக, 1938ல் வெளியானது சூப்பர்மேன். அமெரிக்க நிறுவனமான, 'டிசி காமிக்ஸ்' வெளியிட்டது. அது மிகவும் பரபரப்பாக விற்பனையானது. ஆனால், இதை உருவாக்கியவர்களுக்கு முதலில் எந்த சன்மானமும் வழங்கவில்லை. பின், 1938 முதல், 1947 வரையில், 4 லட்சம் டாலர் சன்மானமாக வழங்கியது. இன்றைய இந்திய மதிப்பில், 2.96 கோடி ரூபாய்.அமெரிக்காவில் விற்பனை வெற்றியைத் தொடர்ந்து உலகம் முழுதும் பிரபலமானது சூப்பர்மேன் கதாபாத்திரம். அதற்கான ஓவியம் சிறுவர், சிறுமியரை வெகுவாக கவர்ந்தது; ரசிகர் பட்டாளம் பெருகியது. அதுபோல் ஒப்பனை செய்து நடிப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. முதலில், தீக்குணம் என்ற வில்லன் பாத்திரமாகத்தான் உருவாக்கப்பட்டது. படிப்படியாக, வீர தீர செயல்களால் நம்பிக்கைமிக்க பாத்திரமாக மாறியது.நீலகண்கள், எக்ஸ்ரே பார்வை, சூடு பட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது போன்ற சாகச தன்மைகள் கொண்டு இருந்ததால், சிறுவர்கள் மனதில் நிஜ சூப்பர்மேனாக பவனி வந்தது. சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகம், வானொலி தொடர், தொலைக்காட்சி தொடர் மற்றும் திரைப்படங்களாக வெளிவந்து பிரபலமாகியது.எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுக்கு இந்த கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டது. கல்வி தொடர்பான நிகழ்வுகளை சிறுவர்களிடம் பிரபலப்படுத்தவும, சூப்பர்மேன் கதாபாத்திரம் பயன்படுத்தப்படுகிறது.இந்த பாத்திரம் ஒளியை விட அதிவேகமானதாக சித்தரிக்கப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் பிரபல விஞ்ஞானி இயென்டெயின். சூப்பர்மேன் கதாபாத்திரத்தின், 75ம் பிறந்த நாள் சமீபத்தில் வட அமெரிக்க நாடான கனடாவில் கொண்டாடப்பட்டது. இதில், ஆறு வகை நாணயங்கள் வெளியிடப்பட்டன. இவை, நிக்கல், வெள்ளி, தங்கம் போன்ற உலோகக் கலவையால் வார்க்கப்பட்டிருந்தன.சூப்பர்மேன் யார்...கிரிப்டான் என்ற கற்பனை கிரகத்தில், விஞ்ஞானிக்கு, கல் எல் என்ற குழந்தை பிறந்தது. கிரகம் அழியும் நிலைக்கு வந்தபோது, ராக்கெட்டில் ஏற்றி, பூமிக்கு அனுப்பினார் தந்தை. பூமியில், ஜோசப் கென்ட் என அழைக்கப்பட்டான். அமெரிக்கா, கன்சாஸ் நகரில் ஒரு தம்பதி, அவனை கண்டுபிடித்து மகனாக வளர்த்தனர். நீதி, நேர்மைக்காக போராடுவது, சாதாரண மக்களுக்கு உதவுவது போன்ற பண்புகளைக் கற்றான். அதிவினோத செயல்களால் ஆச்சரியம் ஊட்டினான். நல்லதுக்கும், நீதிக்கும் துணை நிற்பேன் என, சபதம் எடுத்து சூப்பர்மேன் கதாபாத்திரமாக மாறினான்.நேர்மை தவறாமை, உண்மைக்காக துணிந்து போராடுவது, சட்டத்தை மதித்து நடப்பது போன்ற உயரிய பண்புளை வெளிப்படுத்தும் பாத்திரமாக மிளிர்ந்தான் சூப்பர்மேன். இந்த பாத்திரம் சிறுவர், சிறுமியர் மனதில் பதிந்துள்ளது.- திலிப்