நேர்த்தி செயலால் வெற்றி கண்ட நடிகை!
'கிடைத்தவற்றுக்கு நன்றி செலுத்துங்கள்; இல்லாதவற்றில் கவனம் செலுத்தினால் ஒருபோதும் மனநிறைவு கிடைக்காது...' என்று சொன்னவர் பிரபல அமெரிக்க நடிகை ஓப்ரா வின்ப்ரே. கிடைத்த வாழ்க்கைக்கு நன்றி கூறி, அடுத்தடுத்த நிலைகளுக்கு சுலபமாக உயர்ந்தவர். இவரது இயற்பெயர் ஓர்பா கெயில் வின்ப்ரே. அமெரிக்கா, மிஷிசிபி மாநிலம், கோஸ்கியுஸ்கோ நகரில், ஜன., 29, 1954ல் பிறந்தார். மிகவும் வறுமையான சூழலில் வாழ்க்கையை துவங்கினார். இன்று உலகின் முதல்நிலை பணக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார். நடிகை, ஊடக ஆளுமை, எழுத்தாளர், கொடையுள்ளம் நிரம்பியவர் என பரிமாணங்கள் கண்டவர். மலையென நின்ற தடைகளைத் தகர்த்து, பெண் முன்னேற்றத்துக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.தந்தை நிலக்கரிச் சுரங்க தொழிலாளியாக இருந்தார். தாயார் சாதாரண பணிப்பெண். மிகவும் வறுமையில், ஆரம்ப கல்வியை கற்றார். பெரும்பாலும், உருளைக்கிழங்கு அடைத்து வரும் சாக்குப்பையில், உடை தைத்து அணிவார். அதற்காக கேலி, கிண்டலுக்கு உள்ளானார்.படிப்பிலும், பேச்சிலும் திறமையுடன் திகழ்ந்தார். வாழ்க்கையை புரிந்தால், திட்டமிட்டு இலக்கை எளிதாக அடையலாம் என்பதை, அனுபவத்தில் உணர்ந்தார். படிப்பில் ஆர்வம் காட்டியதால் கல்வி உதவித்தொகை பெற்று, அமெரிக்கா, டென்னசி மாநிலப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.தோல்விகளை எண்ணி முடங்காமல், நன்றாக படித்து பயணத்தை தொடர்ந்தார். அதன் பயனாக, 17ம் வயதில் அழகுப் போட்டியில் பங்கேற்று, 'கறுப்பழகி' என்ற பட்டம் வென்றார். நகைச்சுவை உணர்வு மிக்கவர்.அது, வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி பிரபலம் ஆனார். பின், சிகாகோ நகருக்கு குடிபெயர்த்தார்.தென் ஆப்ரிக்க அதிபராக இருந்த நெல்சன் மண்டேலா உள்ளிட்ட, உலக தலைவர்களைப் பேட்டி எடுப்பதில் வல்லவரானார். பின், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில், 'தி கலர் பர்ப்பிள்' என்ற படத்தில் நடித்தார். இவர் ஏற்ற கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தது. படம் மாபெரும் வெற்றி பெற்றது. வலி, வேதனைகளை தெளிவாக வெளிக் காட்டி நடித்துள்ளார்.மனம் சோர்வுற்ற நேரங்களில், புத்தகங்கள் வாசிப்பார். குறிப்பாக, சுயசரிதை நுால்கள் அருமருந்தாக அமைந்தன.புத்தக வாசிப்பு இயக்கம் ஒன்றை, 1996ல் துவங்கினார். அதற்கு, 'ஆன் ஏர் ரீடிங் கிளப்' என பெயிரிட்டார். அது, உலகின் செல்வாக்கு மிக்க புத்தக வாசிப்பு சங்கமாக மாறியுள்ளது. இதற்காக பல விருது, கவுரவங்களை பெற்றார். தென்னாப்பிரிக்காவில் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறுமியருக்காக, 286 கோடி ரூபாய் செலவில், 2007ல் ஒரு பள்ளியை துவங்கினார். பெண்கள், தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்வதற்காக அது பணியாற்றி வருகிறது.பிரபல போர்ப்ஸ் பத்திரிகையின் உலகப் பணக்காரர் பட்டியலில், 1995 முதல் இடம் பிடித்து வருகிறார்.வாழ்நாள் சாதனைகளுக்காக, 'கோல்டன் குளோப் சிசெல் பி டெமிலி' என்ற விருது பெற்றுள்ளார். இதை பெற்ற முதல் ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண் என்ற பெருமையையும் பெற்றார்.இப்போது, 1 பில்லியன் டாலர்; அதாவது இந்திய மதிப்பில், 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஊடக சாம்ராஜ்யத்தின் தலைவியாக திகழ்கிறார். ஏழை எளியவர் உயர்வு, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றுக்காக, 425 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில், ௩ ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளார்.துன்பம் வரும்போது, 'நான் சாதிக்கப் பிறந்தவள்... இந்த தருணத்தை சமாளித்து கடந்து செல்லும் வலிமை வேண்டும் என மனம் நிறைய வேண்டுங்கள். பிரச்னைகளுக்கு வழி தானாகவே கிடைக்கும்...' என்கிறார் ஓப்ரா வின்ப்ரே. குழப்பம் வரும்போது இவரது சுயசரிதையை படித்தால் புத்துணர்வு கிடைக்கும்.நடிகை ஓப்ரா வின்ப்ரேவின் முன்னேற்ற மந்திரம், 'திருந்தச்செய்' என்பதாகும்.