முட்டாளான தினம்!
கோவை மாவட்டம், காரமடை பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளியில், 1961ல், 2ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியை காளியம்மாள். அவரது கணவர், ஐ.எம்.பழனியப்பன், அதே பள்ளியில், 5ம் வகுப்பு ஆசிரியராக பணிப்புரிந்தார்.நான் கொஞ்சம் துடுக்கு; எல்லாரையும் கவரும் வண்ணம் பேசுவேன். வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும் போது, அடிக்கடி மயங்கி விழுவார் ஆசிரியை. ஓடிச் சென்று, அவரது கணவரிடம் கூறுவோம். அவர், மாத்திரையும், டீயும் கொடுப்பார்; சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும்.அந்த கல்வி ஆண்டில் ஏப்ரல் முதல் நாள், 'முட்டாள் தினம்' கொண்டாட எண்ணினோம். அதன்படி, வகுப்பு இடைவேளையில் ஓடிச்சென்று, 'ஐயா... ஆசிரியை மயக்கம் போட்டு விட்டார்...' என்று கூறினேன். பதறியடித்தபடி ஓடி வந்தவர், சக ஆசிரியைகளுடன் பரபரப்பின்றி பேசிக்கொண்டிருந்த மனைவியை கண்டு நின்றார்; திடீரென வேகமாக வரும் கணவரைக் கண்டதும் விவரம் கேட்டார் ஆசிரியை.அக்கணம் கைகொட்டி, 'ஏப்ரல் பூல்...' என்று கத்தியபடி சிரித்தோம். கோபம் கொண்ட போதும் பொறுமையுடன், 'மற்றவர்களை ஏமாற்றுவது தீய பழக்கம்; அது சில சமயங்களில், ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்...' என அறிவுரைத்தார் ஆசிரியர். தவறை உணர்ந்து, 'இனி இது போல் செய்யக் கூடாது' என்று உறுதி பூண்டேன்.என் வயது, 65; பள்ளியில் முதுகலை ஆசிரியையாக பணிப்புரிந்து ஓய்வு பெற்றேன். பள்ளி பருவத்தில், தவறை திருத்தி நெறிப்படுத்திய ஆசிரியருக்கு நன்றி கூறுகிறேன்.- வ.பாக்கியலட்சுமி, ஈரோடு.தொடர்புக்கு: 99444 70040