உள்ளூர் செய்திகள்

அடித்தளம்!

சென்னை, மயிலாப்பூர், எம்.சி.டி.எம். பள்ளியில், 2007ல், 9ம் வகுப்பு படித்தபோது, என் இரண்டாவது மொழி ஹிந்தி; புரியாததால் மிகவும் கஷ்டப்பட்டு படிப்பேன். ஹிந்தி ஆசிரியையாக இருந்த பத்மாசினி, பாட புத்தகம் தவிர, சில வார்த்தைகளைக் கொடுத்து வாக்கியம் அமைத்து எழுதச் சொல்வார். சிறிய கதை புத்தகங்களை படித்து, பொருள் கூற சொல்வார். இவற்றால் என் சிரமம் மறைந்தது; புரிந்து படிக்க முடிந்தது.பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடித்தேன். உயர் கல்வியை கல்லுாரியில் முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். அதன் தலைமை அலுவலகம், மும்பையில் இருப்பதால், பல ஆவணங்கள், ஹிந்தியில் இருக்கும். கொரோனா தொற்று பரவி, முதல் அலை உச்சத்தில் இருந்தபோது, வீட்டிலிருந்தபடி வேலை செய்தேன்.ஒருநாள், உயர் அதிகாரி அழைத்து, 'பணிக்கான பிரமாண பத்திரம் ஹிந்தியில் உள்ளது; அதை படிக்க முடியவில்லை; உன்னால் முடியுமா...' என்றார். அதை படித்து பொருள் கூறி பாராட்டு பெற்றேன். பள்ளியில் படித்த போது நல்ல அடித்தளம் போட்டிருந்ததால், பல ஆண்டுகளுக்குப் பின்னும், தடுமாற்றமின்றி படிக்க முடிந்தது. தற்போது என் வயது, 26; எனக்கு ஹிந்தி மொழி கற்பித்த அந்த ஆசிரியையை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன். -- அஜித் ரெங்கசாமி, சென்னை.தொடர்புக்கு: 99403 94638


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !