கம்பீரத்தின் சிகரம் சிங்கம்!
பாலுாட்டி வகை விலங்கான சிங்கம், பூனைப் பேரினத்தை சேர்ந்தது. கவரும் பிடரியும், கம்பீர கர்ஜனையும் கொண்டது. இதன் பாதுகாப்பை வலியுறுத்தி, ஆகஸ்ட் 10, உலக சிங்க தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகில், 15 நாடுகள், சிங்கத்தை தேசிய விலங்காக பெருமை கொண்டாடுகின்றன. சராசரியாக மணிக்கு, 81 கி.மீ., வேகத்தில் ஓடும். அதிவேக வேட்டை விலங்குகளில், முதலிடத்தை புலியும், இரண்டாம் இடத்தை சிங்கமும் பிடித்துள்ளன.சிங்கத்தின் சிறப்பை பார்ப்போம்...* ஆண் சிங்கத்தின் கர்ஜனை, எட்டு கி.மீ., வரை கேட்கும் * மான், காட்டெருமை, வரிக்குதிரை, யானை, காண்டாமிருகம், நீர்யானை, காட்டுப்பன்றி, முதலை, ஒட்டகசிவிங்கி, முயல், ஆமை என இதன் உணவு பட்டியல் நீளமானது; உணவை வேகமாக ஜீரணிக்கும்; ஐந்து நாட்கள் வரை நீர் குடிக்காமல் வாழும்* பெரும்பாலும், பெண் சிங்கமே வேட்டையாடும். உணவை முதலில் ஆணும் அடுத்து, பெண், குட்டி என கட்டுப்பாட்டுடன் உண்ணும்.ஆண் சிங்கம், 250 கிலோ வரை எடை இருக்கும்; ஆயுள், 13 ஆண்டுகள். பெண், 150 கிலோ வரை இருக்கும்; ஆயுள், 16 ஆண்டுகள்.சிங்கத்தில், 11 சிற்றினங்கள் உண்டு. அவற்றில், ஐந்து அழிந்து விட்டன. தற்போதுள்ளவற்றை, ஆசிய, ஆப்ரிக்க சிங்கங்கள் என வகைப்படுத்தலாம். ஆப்பிரிக்காவில் கட்டங்கா, காங்கோ, டிரான்ஸ்வால், கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க சிங்கம் என்ற வகைகள் உள்ளன. ஆசிய சிங்கம் அளவில் சிறியது. அமெரிக்காவில் அழிந்துபோன இனமே, உலகில் மிகப்பெரியதாக கருதப்படுகிறது. இன்றுள்ளதில் மிகப்பெரியது கட்டங்கா சிங்கம்.இன்று ஆப்பிரிக்காவில், 28 நாடுகளில், 20 ஆயிரம் சிங்கங்கள் உள்ளன. இந்தியா, குஜராத் கிர் காட்டில், தற்போது, 674 சிங்கங்கள் உள்ளன. ஆண் சிங்கத்தை, அரிமா என்பர். தமிழ் அகராதியான சூடாமணி நிகண்டு, வயப்போத்து, சீயம், அறுகு, கேசரி, பூட்கை, மிருகராசன், வயமா, மடங்கல், கண்டீரவம், பஞ்சானனம் என சிங்கத்தின் பெயர்களாக குறிப்பிடுகிறது. வரலாற்றில் புலி - சிங்கம் இடையே நடந்த மோதல்களில், புலியே பெருமளவில் வென்றுள்ளது. மத்திய கிழக்கு நாடான துருக்கி, அங்கோரா விலங்கு பூங்காவில் வங்கப்புலி ஒன்று, 2011ல் ஒரே அடியில் சிங்கத்தை கொன்றுவிட்டது. ஆனால், பழங்கதைகளில், சிங்கமே வலிமையானதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.- டாக்டர் வானதிதேவி