முறுக்கு வியாபாரம்!
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1971ல், 10ம் வகுப்பு படித்தபோது தேர்வுகளில், 80 மதிப்பெண்களுக்கு குறைவின்றி வாங்குவேன். ஆனால், கணக்கு மட்டும் புரியாத புதிராக இருந்தது. காலாண்டு விடைத்தாளில் குறைவான மதிப்பெண் கண்டு, 'நீயெல்லாம் சினிமா கொட்டகையில் முறுக்கு விற்க தான் லாயக்கு...' என்று கடுமையாக சபித்தார் புதிதாக வந்திருந்த கணித ஆசிரியர் அருணாசலம்.அதே ஊர் டூரிங் டாக்கீசில், நொறுக்கு தீனி விற்கும் கடையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார் என் தாய்மாமன். மறுநாள் பட இடைவேளையின் போது, முறுக்கு விற்க அனுப்பினார். என்னை அங்கு கண்டதும், அதிர்ச்சி அடைந்தார் ஆசிரியர். மறுநாள் வகுப்பில், கோபத்தில் தற்செயலாக சொன்ன வார்த்தைக்காக வருத்தப்பட்டார். பின், சற்று கூடுதல் கவனம் எடுத்து, கணக்கில் நல்ல மதிப்பெண் வாங்கும் அளவிற்கு கற்று தந்தார். அதை பயன்படுத்தி உயர்ந்தேன்.என் வயது, 70; அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பரமக்குடி அஞ்சலகத்தில் பணியாற்றியபோது, அங்கு சேமிப்பு கணக்கு வைத்திருந்த அந்த ஆசிரியரை சந்தித்தேன். என்னை அறிமுகம் செய்து, 'கடுமையாக திட்டு வாங்கியதால், இன்று நல்ல நிலையில் உள்ளேன். என் முன்னேற்றத்திற்கு நீங்களும் முக்கிய காரணம்...' என்று பணிந்தேன். அவரது கண்களில் மகிழ்ச்சி தெரிந்தது. அதை எண்ணி இன்றும் மகிழ்கிறேன்!- பி.பாண்டி, மதுரை.தொடர்புக்கு: 88704 58128