டூ இன் ஒன் - சிறுகதை
சேமிக்கப் பழகு!ஆடு மேய்க்கும் சிறுவன் ராமு. யார் என்ன வேலைக் ஏவினாலும் செய்வான்; கூலியாக தருவதைப் பெற்றுக் கொள்வான்.ஒரு நாள் -சாலையில் நின்ற இளைஞர்கள், 'சிகரெட் வாங்கி வா...' என்றனர். வாங்கி வந்தவனுக்கு, சிறிய அளவில் பணம் கொடுத்தனர்.வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியது அந்த வாலிப கும்பல். ராமுவை எடுபிடி வேலைகளுக்கு பயன்படுத்தியது. ஓர் ஆண்டுக்கு பின் -சிறிதளவு பணம் எடுத்து வந்தான் ராமு. ஊர்சுற்றி பொழுது போக்கிய வாலிபர் கும்பலிடம் கொடுத்தான். அந்த பணத்தை சரிபார்க்க கேட்டான்.பணத்தை எண்ணி, 'பத்தாயிரம் ரூபாய்...' என்றனர்.முகம் மலர்ந்த ராமு, 'இந்த பணம் உங்களது தான்... பகிர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்...' என்றான்'எங்க பணமா...'ஆச்சரியத்துடன் கேட்டனர்.'ஆமா... நீங்க அவ்வப்போது, 'டிப்ஸ்' கொடுத்தது...' என்றான்.வாலிபர்களுக்கு, 'சுரீர்' என உறைத்தது. 'இவ்வளவு பணத்தை சேமித்திருக்கிறான். அப்படியானால் வெட்டியாக எவ்வளவு செலவழித்திருப்போம்' என கவலையடைந்தனர். அந்த பணத்தை சேமித்திருந்தால் எத்தனையோ தொழில் செய்திருக்கலாம் என புலம்பினர்.பணத்தின் அருமையையும், சேமிப்பின் அவசியத்தையும் உணர்த்திய, சிறுவனை வணங்கினர். சோம்பேறியாக பொழுது போக்குவதை கைவிட்டனர்.நிச்சயமாக வேலைக்கு செல்வதுடன், தேவையில்லா செலவுகளையும் குறைப்பர் என மகிழந்தான் ராமு!தளிர்களே... தேவையற்ற செலவைக் குறைத்தால், சேமிப்புக் கூடும்; பெரும் தொகையாகி, அத்தியாவசிய தேவைகளுக்கு உதவும். பணத்தின் அருமையை உணருங்கள்.சுத்தம் போட்ட சோறு!கந்தன் எதையுமே சுத்தமாக பேணுவான். இருக்கும் இடத்தை கச்சிதமாக பராமரிப்பான். நண்பர்களிடம், சுற்றுப்புற துாய்மை பற்றியும் எடுத்துக் கூறுவான். அதை, 'சுத்தம் தான் சோறு போடுதாக்கும்...' என்று கேலி பேசி அலட்சியம் செய்வர்.அது மழைக்காலம். சுகாதாரத் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளை முடுக்கி விட்டது அரசு. வீடு வீடாக ஆய்வு செய்தனர் அதிகாரிகள். கந்தன் வீட்டுக்கும் வந்தனர். அங்கு, சுற்றுப்புறம் சுகாதாரமாகவும், கழிப்பறைகள் சுத்தமாகவும் இருந்தது கண்டு ஆச்சரியமடைந்தனர். அவனை பாராட்டினர்.நாட்கள் நகர்ந்தன -கந்தனின் அப்பா திடீர் என இறந்தார். துயரத்தில் மூழ்கியது குடும்பம். பட்டதாரியான கந்தன் வேலைக்கு விண்ணப்பித்தான். எங்கும் கிடைக்கவில்லை.'சுத்தம் என்று உபதேசம் செய்தானே... அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வான்...' என, கிண்டல் செய்தனர் நண்பர்கள்.அன்று அந்த ஊருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக மேடை அமைக்கப்பட்டிருந்து. ஒரு சுகாதார திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்ததும், கந்தனை தேடி வந்தனர் அதிகாரிகள். மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பதாக கூறினர்.எதையும் புரியாமல் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்தான்.சுத்தம் பேணும் அவன் பண்பை பாராட்டி, 'உன்னைப் போல் ஒருவனால் தான், இந்த ஊரும், நாடும் முன்னேறும்; உனக்கு உதவி செய்வது என் கடமை... பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தில் இணைந்து பணியாற்றலாம்...' என, அழைத்தார். நடந்தது, கனவா... நனவா... என புரியாமல் கண்ணீர் மல்கினான் கந்தன். சுத்தம் கந்தனுக்கு சோறு போட்டது.செல்லங்களே... சுத்தம் உடலுக்கும், மனதுக்கும் நல்லது. சுத்தம் பேணி நோய்களை விரட்டுவோம். வாழ்க்கையில் முன்னேறுவோம்.- சு.பிரபாகர்