உள்ளூர் செய்திகள்

பயனுள்ள காத்திருப்பு!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில், 1994ல், 9ம் வகுப்பில் படித்தேன். தமிழாசிரியர் மைக்கேல் குருஸ், எப்போதும், நேரடியாக பாடத்திற்குள் செல்ல மாட்டார். பாடம் தொடர்பான செய்திகள், கதைகள், கவிதைகள் என விளக்கங்கள் கூறியே துவங்குவார்; போட்டிகளையும் நடத்துவார். அதனால், தமிழ் வகுப்பை, ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்போம். ஒருமுறை, வகுப்பில் நுழைந்ததும், 'எதிர்காலத்தை காட்டும், 'ப், வ்' என்ற எழுத்துகள் இல்லாத, சொற்களை கூறுவோருக்கு, 100 ரூபாய் பரிசு...' என்றார்.போட்டி போட்டு கூறினோம்; அனைத்தும் தவறாக இருந்தன; எதிர்காலத்தை காட்டும் ஒரு சொல் கூட கூற இயலவில்லை.சிரித்தபடி, 'அடேய்... தமிழ் மொழியில் எதிர்காலத்தை காட்டும் இடைநிலைகள் தான், 'ப், வ்' என்ற எழுத்துகள்; இவை வராத எந்த சொல்லும் எதிர்காலத்தை காட்டாது...' என்றார்.இந்த கற்பித்தல் உத்தியும், அணுகு முறையும், தமிழ் மொழி மீது அதிக ஆர்வத்தை துாண்டியது. அதன் விளைவாக, தமிழ் இலக்கியம் பயின்று, தமிழாசிரியராக பணி செய்கிறேன். அவர் போலவே வகுப்பறையை எப்போதும் கலகலப்பாக வைத்திருக்கிறேன். தற்போது, என் வயது, 39; தமிழ் வகுப்பிற்காக, அந்த காலத்தில் நான் காத்திருந்ததை போல, மாணவர்கள், என் வகுப்பிற்காக காத்திருக்கின்றனர். எல்லாம் அந்த ஆசிரியரின் அருட்கொடையால் விளைந்தது! - துஷ்யந்த் சரவணராஜ், சிவகங்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !