உள்ளூர் செய்திகள்

பெட்டிக்குள் என்ன இருக்கு!

கூவம் கிராமத்தில் வசித்து வந்தார் கண்ணன். அவரது மகன் பெயர், மிருதன். மிகவும் சந்தோஷமாக வாழ்க்கை நடந்தது. அந்த கிராமத்தில், வஞ்சகமும், ஏமாற்றும் குணமும் நிறைந்த துரைசாமி இருந்தான். அவனை, மிக நல்லவன் என்று நம்பினான் மிருதன். நெருங்கிய நண்பனாக வைத்துக் கொண்டான்.பலமுறை, பலரை ஏமாற்றியதை அவன் அறியவில்லை.இதை அறிந்த கண்ணன், ''துரைசாமி நல்லவன் இல்லை; அவன் நட்பை விட்டு விடு...'' என்று மகனுக்கு அறிவுரை கூறினார்.''தந்தையே... என்னை பொறுத்த வரையில், துரைசாமி நல்லவனாகவும், நேர்மையானவனாகவும் உள்ளான்...'' என்றான்.துரைசாமியிடம் இருந்து மகனைப் பிரித்து காப்பாற்ற திட்டம் போட்டார் கண்ணன்.ஒரு நாள் -மிருதனை அழைத்த கண்ணன், ''வியாபாரம் செய்வதற்காக, நாம் வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது. திரும்பி வர, இரண்டு மாதம் ஆகும். நம்மிடம் உள்ள, விலை மதிப்புள்ள பொருட்களை ஒரு பெட்டியில் போட்டு பூட்டி உள்ளேன். சாவி என்னிடம் உள்ளது; இந்த பெட்டியை யாரிடம் கொடுத்தால் பத்திரமாக பாதுகாத்து திருப்பி தருவர்... நீயே சொல்...'' என்றார் கண்ணன். ''என் நண்பன் துரைசாமியிடம் தரலாம்; அவன் நேர்மையானவன்; பாதுகாப்பாக திருப்பி தருவான்...'' என்றான் மிருதன்.''உன் விருப்பபடியே செய்...'' பெட்டியை, நண்பனிடம் தந்து, வீடு திரும்பினான் மிருதன்.தந்தையும், மகனும் திட்டமிட்டபடி வெளியூர் சென்றனர்.வியாபாரம் நல்ல முறையில் நடந்தது. ஏராளமான பொருள் சேர்த்து ஊர் திரும்பினர். திரும்பிய அன்று, ''நான் கொடுத்த பெட்டியை, உன் நண்பனிடமிருந்து வாங்கி வா...'' என்றார் தந்தை.நண்பனை சந்தித்து வீடு திரும்பியவன், ''தந்தையே... வெறும், கல்லும், மண்ணும் தான், அந்த பெட்டியில் இருந்திருக்கின்றன. என் நண்பனை அவமானப்படுத்த இப்படிச் செய்து இருக்கிறீர்களே... இது நியாயமா...'' என்றான்.சிரித்தபடி, ''பொறுமையாக கேள். பூட்டியப் பெட்டியை தானே, உன் நண்பனிடம் தந்தாய்; சாவி என்னிடம் அல்லவா உள்ளது. உன் நண்பனால் அந்த பெட்டியை எப்படி திறக்க முடியும். பெட்டிக்குள் இருப்பது, கல்லும், மண்ணும் என்பது எப்படி தெரிந்திருக்கும்...' என கேட்டார்.சிந்தித்தான் மிருதன். ''இப்படிப்பட்டவர்களை நம்பி, விலை மதிப்புள்ள பொருட்களை கொடுத்தால் என்ன ஆகும்...'' புத்தி புகட்டும் வகையில் கேட்டார் தந்தை.உண்மை உணர்ந்தான் மிருதன். தந்தையிடம் மன்னிப்பு கேட்டபடி, ''நீங்கள் காட்டும் வழியில் நடக்கிறேன்; உங்கள் அறிவுரையை ஏற்கிறேன்...'' என்றான்.குழந்தைகளே... ஏமாற்றுவோரை இனம் கண்டு, விலகி வாழப் பழகி கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !