உள்ளூர் செய்திகள்

எது அழகு!

சுட்டிப் பெண் வினிதா, 6ம் வகுப்பு படித்து வந்தாள். படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வம் காட்டுவாள். ஆசிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.அவள் அம்மா படிப்பறிவற்றவர். அவரைக் கண்டாலே வினிதாவுக்கு பிடிக்காது. இந்த குணத்தை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்தார், அப்பா. பலன் அளிக்கவில்லை. காலப்போக்கில் மாறும் என தேற்றிக் கொண்டார். பள்ளியில் ஆண்டு விழா வந்தது. நிறைய பரிசுகள் வாங்க தகுதியாகி இருந்தாள் வினிதா.விழாவுக்கு பெற்றோரை, கண்டிப்பாக அழைத்து வர வேண்டும் என்று கூறியிருந்தது பள்ளி நிர்வாகம்.வேண்டா வெறுப்பாக அழைத்து வந்தாள் வினிதா.பன்னாட்டு தரம் உடைய பள்ளி அது. பெரிய விளையாட்டு திடல், கலையரங்கம், நீச்சல் குளம் என, வசதிகளுடன் இருந்தது. அவற்றை எல்லாம் கடந்து சென்று கொண்டிருந்தாள் வினிதா. பின்னால் வந்துகொண்டிருந்தனர் பெற்றோர்.திடீரென, 'காப்பாற்றுங்க... உதவி...' என்ற குரல் பள்ளியின் பின்புறத்தில் இருந்து கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி மூவரும் ஓடினர். ஐந்து வயது குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து தவித்தது. அதை காப்பாற்றும் வெறியுடன் தாயும் குதித்திருந்தார். நீச்சல் தெரியாததால் இருவரும் தத்தளித்தனர். அதைக் கண்டதும் வினிதாவின் அம்மா, சற்றும் பதட்டம் இன்றி நீச்சல் குளத்தில் குதித்தார். வேகமாக நீந்தி, லாவகமாக குழந்தையை மீட்டார். பின், தாயையும் பத்திரமாகக் கரை சேர்த்தார். கரைக்கு கொண்டு வந்ததும் முதலுதவி அளித்து, இருவர் வயிற்றிலிருந்த தண்ணீரையும் வெளியேற்றினார். வினிதாவின் தந்தையும் அதற்கு உதவினார். அதற்குள், ஆசிரியர்களும், பள்ளி ஊழியர்களும் அங்கு கூடி விட்டனர்.துணிச்சலுடன் செயல்பட்ட பெண்ணின் வீரச்செயலை பாராட்டினர். லாவகமாக முதலுதவி செய்தது கண்டு வியப்படைந்தனர். ஒரு ஏழைத்தாயின் உதவும் செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.தலைமையாசிரியரும் அங்கு வந்து, விவரங்களை விசாரித்தார். தாயுடன் நின்று கொண்டிருந்த வினிதா, 'மேடம்... அவங்க என்னோட அம்மா...' என்று பெருமையாக கூறினார்.கட்டியணைத்து பாராட்டினார் தலைமையாசிரியை. ஆண்டு விழா மேடைக்கு அழைத்து சிறப்பாக கவுரவித்தனர். வீரப்பெண்மணி என பள்ளி சார்பில் பட்டம் கொடுத்தனர்.விழா முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அம்மாவை கட்டியணைத்து, 'உங்களுக்கு படிப்பறிவு இல்லை என மதிக்காமல் இருந்தேன். அழகு இல்லை என அவமதித்தேன். ஆனால், உதவுவதற்கு இவை எதுவும் தேவையில்லை என்று நிரூபித்து விட்டீர்கள்... இப்போது தான் உங்கள் அழகு புரிந்தது...' என கண்ணீர் வடித்தாள் வினிதா.குழந்தைகளே... அழகு என்பது பார்க்கும் கோணத்தில் தான் இருக்கிறது. உடல் அழகு அழியும். அன்பாலும் கருணையாலும் ஆனது மன அழகு. அதை வளர்ப்போம்!எஸ்.சோபனா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !