உள்ளூர் செய்திகள்

சாதனை பெண்கள்!

பெண்கள் தினம், மார்ச் 8ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதனையும் போற்றப் படுகிறது. உரிய மதிப்பு ஏற்பட்டு வருகிறது. பெரும் போராட்டத்துக்கு பின்பே இது சாத்தியமாகியுள்ளது. இதற்காக உழைத்தவர்கள் பலர். அதில், இரண்டு பேரின் தியாக வாழ்க்கை பற்றி பார்ப்போம்...கமலாதேவி!தேர்தலில் போட்டியிட்ட முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் கமலா தேவி. கர்நாடகா மாநிலம், மங்களூரில், ஏப்ரல் ௩, 1903ல் பிறந்தார். இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. சில ஆண்டுகளிலே கணவர் இறந்தார்.அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் கமலா. படிப்பின் மீதான ஆர்வத்தால், தொடர்ந்து, சென்னை ராணிமேரி கல்லுாரியில் உயர்கல்வி கற்றார். கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரர், ஹரீந்திரநாத் சட்டோபாத்தியாவை மறுமணம் செய்து கொண்டார். கன்னடத்தில், 'மிரிச்சகட்டிகா' என்ற திரைப்படத்தில் நடித்தார். கடும் எதிர்ப்புகளை சந்தித்தார்.அவரது வாழ்வின் ஒவ்வொரு செயலும், புரட்சிகரமாக இருந்தன.இந்தியாவில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார். சென்னை மாகாண சட்டசபைக்கு, 1926ல் போட்டியிட்டார். மிகக் குறைந்த, 55 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆண்களைப் போல், பெண்களுக்கும் அரசியலில் பங்கு உண்டு என்பதை நிலைநிறுத்தியவர். தேசப்பிதா காந்தி துவங்கிய சட்ட மறுப்பு இயக்கம், உப்பு சத்தியாக்கிரகம் போன்ற அறப்போர்களில் பங்கேற்று சிறை சென்றார். நடன கலையின் சிறப்பை போற்றும் வகையில் மேடையில் நடனமாடி புரட்சி செய்தார். பெண்கள் முன்னேற்றத்தில், அக்கறையும், பற்றும் கொண்டு உழைத்தார் கமலாதேவி. அனைத்திந்திய பெண்கள் கல்வி சங்க பொதுச் செயலராகவும், அனைத்திந்திய பெண்கள் சங்க செயலராகவும் பணியாற்றினார்.இந்திய கூட்டுறவுச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அகில இந்தியக் கைதொழில் சங்க தலைவராகவும் பொறுப்பேற்றார். குடிசைத்தொழில் செய்வோர் வளமான வாழ்வை மேற்கொள்ள வழிவகுத்தார். உலக பாரம்பரியத்தை போற்றும், 'யுனஸ்கோ' என்ற அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார்.அவரது பொதுத் தொண்டைப் பாராட்டி, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு. ராமன் மகசேசே விருதையும் பெற்றார்.பெண்கள் முன்னேற்றம், நாட்டுநலன் ஆகியவற்றை வாழ்வின் லட்சியமாக கொண்டிருந்தார் கமலாதேவி. அவரது புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.ஈவா பெரோன்!மக்கள் நலனுக்காக, அல்லும் பகலும் அரும் பாடுபட்டவர் ஈவா பெரோன். தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா, லோஸ் டோல்டோசியில், மே 7, 1919ல் பிறந்தார்.இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். சிற்றுண்டி கடை நடத்தி குடும்பத்தை காத்தார் தாய்.படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டினார் ஈவா. பள்ளி நாடகங்களில், ஆர்வத்துடன் கலந்து கொண்டார். பின், நாடகக் கம்பெனியில் சேர்ந்து திறனை வெளிப்படுத்தினார். அதை காண ரசிகர் கூட்டம் அலை மோதியது.நாடக மேடையைத் தொடர்ந்து, வெள்ளி திரையிலும் புகழ் பெற்றார். தொடர்ந்து வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். அர்ஜென்டினா அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான கர்னல் பெரோனை சந்தித்தார்; நட்புடன் பழகி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின், நடிப்பு தொழிலை நிறுத்திக் கொண்டார்.புரட்சி மனப்பான்மை கொண்ட கர்னல் பெரோனை, அரசின் தொழிலாளர் பாதுகாப்பு துறை செயலராக பதவி ஏற்க வற்புறுத்தினார். அந்த பதவி வகித்த போது, தொழிலாளர்களுக்கு மிகுந்த நன்மைகள் கிடைத்தன. பின், அர்ஜென்டினா குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பெரோன். கணவருடன் சேர்ந்து, தொழிலாளர் குறைகளை போக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.ஈவா முயற்சியால், அரசு துறையிலும், தொழிற்சாலைகளிலும், ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. முதியவர்களுக்கு ஓய்வு விடுதிகளும், குடியிருப்புகளும் அமைக்கப்பட்டன. நியாய விலையில் உணவுக் கடைகளை திறப்பதற்கு ஏற்பாடு செய்தார் ஈவா.சமூகப் பாதுகாப்புக்காக சேமிப்பு நிதியை உருவாக்கி, ஏழை மக்களுக்கும், நோயாளிகளுக்கும் உதவினார். இரவெல்லாம் கண் விழித்து, நாட்டு மக்களுக்கு பாடுபட்டார்.அர்ஜென்டினா அரசில் துணைத் தலைவராக, ஈவாவை நியமிக்க தொழிலாளர்கள் முயற்சி செய்தனர். அந்த பதவியை ஏற்க அவர் விரும்பவில்லை. அரசு பதவி வகிக்காமலே, மக்களுக்கு தொண்டு புரிய முடியும் என்று நிரூபித்தார்.நாட்டு மக்களுக்காக பாடுபட்ட ஈவா, ஜூலை 2௬, 1952ல் இவ்வுலகை பிரிந்தார். அவரது உயர்ந்த சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நினைவுச் சின்னத்தை எழுப்பினர் அந்த நாட்டு மக்கள். வெள்ளிப்பேழையில் வைத்து, ஈவாவின் உடலை அடக்கம் செய்தனர். அதன்மீது, வித்தியாசமான உருவச் சிலை அமைத்து நினைவை போற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !