யாருப்பா அந்த கணக்கு!
சிவகங்கை, மன்னர் உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 10ம் வகுப்பு தொழிற்கல்வி பாட பிரிவில் படித்து கொண்டிருந்தேன். ஆங்கிலம், தமிழ், கணக்கு பாடங்களை பொது பிரிவு மாணவர்களுடன் அமர்ந்து படிக்க வேண்டும். தமிழ் ஆசிரியர் ஆறுமுகம், பழம்பெரும் புலவர் போல காட்சியளிப்பார். பெருந்தலைவர் காமராஜர் போல வேட்டி, சட்டையுடன் இருப்பார். புரியும்படி பாடம் எடுப்பார். கடிந்து கொள்ள மாட்டார்.அன்று வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். கடைசி பெஞ்சில் அமர்ந்து, நண்பர்களுடன் அவசரமாக, வீட்டுக் கணக்கை போட்டு கொண்டிருந்தேன். தமிழ் பாடத்தை கவனிக்கவில்லை. பக்கத்திலிருந்தவன், 'அவிங்க கணக்கு போட்டுட்டு இருக்காங்க ஐயா...' என போட்டு கொடுத்துவிட்டான்.'யாருப்பா அந்த கணக்கு...' என அன்புடன் அழைத்து, நிறைய புத்திமதிகள் கூறினார். பின், 'உன் தமிழ் எழுத்து அழகாக இருக்கு; மிகச் சிறியதாக எழுதுகிறாய். பொது தேர்வில் சற்று பெரியதாகவும், பக்கத்துக்கு, 20 வரிகளுக்கு மிகாமலும் இருந்தால், அதிக மதிப்பெண் கிடைக்கும்...' என, அறிவுரைத்தார்.அதை பின்பற்றி பொதுதேர்வில் முதல் மாணவனாக வந்தேன்; பாராட்டும், பரிசும் பெற்றேன். பட்டப்படிப்பு முடித்து, மத்திய உற்பத்தி வரித்துறையில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றேன்.இப்போது என் வயது, 61; வாழ்வில் ஒவ்வொரு உயர்வின் போதும், அந்த தமிழாசிரியரை நினைவில் கொள்கிறேன்.- எஸ்.முருகேசன், மதுரை.