உள்ளூர் செய்திகள்

அந்தமானில் ஒரு எருமை கன்றுக்குட்டி! (1)

'அந்தமானில் எருமையா... என்ன ரீல் சுத்துறீங்க...' என்று அந்தமான் சுற்றுலாச் சென்று வந்தோர் நினைக்கலாம்; அந்த கதைக்கு வருவதற்கு முன், பயணத்தின் முன்கதைக்கு வருவோம்...ஒரு மனிதனுக்கு, குரு, மனைவி, மக்கள் மற்றும் மனை சிறப்பாக அமைய வேண்டுமென்றால், அதற்கு நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறது, இந்து சாஸ்திரம். அவ்வகையில், நாம் பணிபுரியும் இடத்தையும் குறிப்பிடலாம். காரணம், சுயநலமான இந்த உலகில், எத்தனை நிறுவனங்களில், எவ்வளவு முதலாளிகள் தாங்கள் சென்று வந்த சுற்றுலா தல இன்பங்களை, தங்கள் ஊழியர்களும் அனுபவித்து மகிழ வேண்டும் என்று கருதுகின்றனர்!ஆனால், எங்கள் பாஸ், தான் அனுபவித்து மகிழ்ந்த இடங்களுக்கு எல்லாம் தன் ஊழியர்களையும் அனுப்பி, அவர்கள் சந்தோஷம் அடைவதைக் கண்டு, கேட்டு ஆனந்தம் கொள்வார். அத்துடன், பெண் ஊழியர்களின் கஷ்டங்கள் புரிந்து, பரிவுடன், 'ஆண்களுக்கு பொழுது போக்கு என்று எத்தனையோ விஷயங்கள் இருக்கு; ஆனால், பெண்களுக்கு அப்படியல்ல. தாய் வீட்டில் சீராட்டி, பாராட்டப்பட்டு, கவலையற்று வளரும் பெண்கள், திருமணம் ஆனதும், வீடு, கணவன், பிள்ளைகள், அலுவலகம் என்ற குறுகிய வட்டத்திற்குள், எந்த பொழுது போக்கும் இல்லாமல் உழன்று கிடக்கின்றனர். அவர்களுக்கு சிறு ஓய்வு; ரிலாக் ஸேஷன் அளிக்கவே இந்த சுற்றுலா...' என்று கூறி, பெண் ஊழியர்களையும் சுற்றுலா அனுப்புவார்.என் வாழ்விலும் கூட, வீடு, பள்ளி என்பதைத் தவிர, வேறு எங்கும் சென்றறியாத, கிராமத்துப் பெண்ணான என்னை, பணிக்கு சேர்ந்த சிறிது நாட்களிலேயே, என் குணங்களை அவதானித்து, 'நீங்க இப்படி உலகம் தெரியாமல் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டக் கூடாது; போய் வெளி உலகத்தை தெரிஞ்சுட்டு வாங்க...' என்று கூறி, வலுக்கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் டில்லி அலுவலகத்திற்கு அனுப்பினார், பாஸ். அன்று, அவர் எனக்களித்த ஊக்கமே, தொடை நடுங்கியான என்னை தைரியசாலியாக, தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாக மாற்றியது. அதனால் தான் சொல்கிறேன்... பணிபுரியும் இடம் நன்றாக அமையவும் கொடுப்பினை வேண்டும் என்று!அன்று, மொபைல் போனில் என்னை அழைத்த பாஸ், 'லட்சுமி... நம்ம சீனியர் ஸ்டாப்கள் நாலு நாள் டிரிப்பாக அந்தமான் போறாங்க; நீங்களும் அவங்களுடன் போயிட்டு வாங்க...' என்று கூறியதும், பட்டாம்பூச்சியாய், மனம் சிறகடிக்க ஆரம்பித்தது. நன்றி சொல்லக் கூட தோன்றவில்லை.நினைவு பின்னோக்கி நகர, பள்ளிக் காலத்தில், இந்திய வரைபடத்தில், வங்காள விரிகுடா கடலில், தொட்டும் தொடாமல், வண்ணப் பூக்களை விட்டு விட்டு தூவியது போல் இருக்கும் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு, வண்ணக் கலவையை குழைத்து வண்ணம் தீட்டி, மகிழ்ந்தது ஞாபகம் வந்தது. அப்போது நினைத்து பார்த்திருப்பேனா... அந்த தீவுகளுக்கு நான் பயணப்படுவேன் என்று!பெண்களுக்கே உரிய விசேஷ குணம் எனக்குள்ளும் தொற்றிக் கொள்ள, என்ன உடை அணிவது, செருப்பு, அணிகலன்கள் என்று மனம் பட்டியல் போட்டதில், இரண்டு நாட்கள் ஆனந்தத்தில் தூக்கம் வரவில்லை.கூடவே, வீட்டில் என்ன சொல்வார்களோ என்று பயம். தேனி அருகே ஒரு சிறு கிராமத்தில் உள்ள என் அம்மாவோ, போனில், 'உங்க பாஸ் அனுப்புகையில் என்னிடம் எதுக்கு கேக்குறே... சந்தோஷமா போயிட்டு வா...' என்று கூற, என் தங்கையோ, 'ம்... உனக்கு என்ன... கொடுத்து வச்ச ராஜாத்தி போயி, நல்லா ஊர் சுத்தி பார்த்துட்டு வா...' என்றாள். அவளை வெறுப்பேற்றிய மகிழ்ச்சியில், 'அழகே அந்தமானே... உன்னை காண வருகிறேன் இந்த மானே...' என, நடிகர் டி.ராஜேந்தர் பாணியில் ரைமிங்காக பாடியபடி தூங்கப் போனேன்.டூர் கிளம்பும் நாள், அதிகாலை, 4:00 மணி -குளித்து முடித்து, முகத்தில் பவுடரை அப்ப, என் மொபைல் போன் சிணுங்கியது. பாசின் பி.ஏ., கலா, 'லட்சுமி கிளம்பிட்டயா... சரியா மணி, 4:30 கார் வந்துடும் தயாரா இரு...' என்றார். அதேபோன்று, 4:30 மணிக்கு கார் வர, நான் ஏறியதும், அடுத்த ஸ்டாப்பில் காத்திருந்த உடன் பணியாற்றும் பானுமதியை, 'பிக்கப்' செய்து, டூர் ஒருங்கிணைப்பாளர் கல்பலதாவையும் ஏற்றிக் கொண்டு, விமான நிலையம் விரைந்தது, கார்.அங்கு, நேரிடையாக, செல்வி, கோகிலா மற்றும் அவரது மகள் ஸ்வேதாவும் வந்து சேர்ந்து கொண்டனர். சிட்டுக் குருவிகள், கறுப்பு, வெள்ளை உடை அணிந்து, அங்கும் இங்கும் தத்தி நடந்து செல்வதைப் போல், அலுவலக பெண் ஊழியர்கள் ஆறு பேரும், உடன் பணியாற்றும் கோகிலாவின் ப்ளஸ் 1 படிக்கும் மகளுமாக விமான நிலையத்தை, தங்கள் அழகு நடைகளில் நிரப்ப, காண்போர் கண்கள் எல்லாம், 'யார் இவர்கள்...' என்ற கேள்வியை கேட்காமல் கேட்டன.விமான நிலைய, 'பார்மாலிட்டிஸ்' எல்லாம் முடிந்து, விமானத்திற்குள் நுழைந்த போது, 'செல்வி மேடம் நீங்க பாடுங்க; பானுமதி மேடம் ஆடுவாங்க...' என்று கோகிலா கேலி பேச, 'நான் பாட ரெடி, இவங்க ஆடுவாங்களா...' என்று அவர் பதில் கேள்வி கேட்க, 'நான் ஆட ரெடி; நீங்க பாக்க ரெடியா...' என, ஒருவரை ஒருவர் கலாய்க்க, விமான பணியாளர்கள் எங்கள் கலகலப்பில் மகிழ்ந்தனர். விமானம் பறக்க ஆரம்பித்தது; என், கற்பனையில் அந்தமான், 'இதோ வந்துட்டேன்...' என்று ஆனந்த நர்த்தனம் ஆடத் துவங்க, அதன் ஆட்டத்தில் மயங்கி கண்கள் செருக, தூக்கத்தில் ஆழ்ந்து விட்டேன். சரியாக ஒன்றரை மணி நேரம், விமானம், அந்தமான் தலைநகரம், போர்ட் பிளேயரில் இறங்கியது.விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது, திரும்பிப் பார்த்தேன். 'வீரசாவர்க்கர் பன்னாட்டு விமான நிலையம்' என்ற போர்டு தென்பட்டது. 'யார் இந்த வீரசாவர்க்கர்...' என்ற எண்ணம் மனதிற்குள் ஓட, அதற்குள், நாங்கள் பயணப்பட வேண்டிய கார் வந்து நிற்கவே, தற்காலிகமாக அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, காரில் ஏறி, நாங்கள் தங்க வேண்டிய, 'ஷாம்பென்' ஓட்டலுக்கு புறப்பட்டோம்.தினமும், லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் போர்ட் பிளேயர் நகர் சாலைகள், அப்போது தான், கழுவித் துடைத்தது போல், குப்பை கூளங்கள் இன்றி, 'பளீச்' சென்று இருந்தன. சாலையின் ஒரு புறம் பசுமை; மற்றொரு புறம் கடல் என, பூமி தன் அழகை எல்லாம் ஒட்டு மொத்தமாக கடைவிரித்திருந்தது, அந்தமானில்!விமான நிலையத்திலிருந்து, 10 நிமிட தூரத்தில் தான், ஷாம்பென் ஓட்டல் இருந்தது.அறையில், எங்கள் உடைமைகளை போட்டு விட்டு, குட்டிக் குளியலை முடித்து, 100 ஆண்டுகள் பழமைமிக்க மரம் அறுக்கும் ஆலைக்கு சென்று, சுற்றி பார்த்தபின், வரலாற்று சிறப்பு மிக்க செல்லுாலர் ஜெயிலை பார்க்க கிளம்பினோம். வழியில், தமிழர் நடத்தும் அன்னபூர்ணா சைவ ஓட்டலில், மதிய உணவு!சுதந்திரப் போராட்ட வீரர்களை, ஆங்கிலேயேர் அடைத்து வைத்திருந்த செல்லுாலர் ஜெயிலுக்கு சில அடி தூரத்திலேயே, டிரைவர் காரை நிறுத்தி விட, இறங்கி நடக்க ஆரம்பித்தோம். ஒருபுறம், காலாபானி என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும், கரிய நிற போர்ட் பிளேர் கடல்... அதன் முனையில், 327 சதுர கி.மீ., பரப்பளவிற்கு பரந்து விரிந்து கோட்டையைப் போன்று உயர்ந்து நிற்கும் கட்டடம், எத்தனையோ வீரர்களின் வாழ்க்கையோடும், உயிரோடும் விளையாடிய மவுன சாட்சியாக அமைதியாக காட்சியளித்தது.ஜெயிலின் வாயிலில் நின்று, அனைவரும் வெள்ளைக்காரன் ஸ்டைலில் தொப்பி, கூலிங் கிளாஸ் அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டாலும், உள்ளே நுழைந்த போது கனத்த அமைதி. அங்கே ஒரு காட்சி...அனைவருக்கும் முன், ஒரு எருமைக் கன்றுக்குட்டி கால்கள் தடுமாற, ஜெயில் வாயிலுக்குள் நுழைந்தது. அதன் கண்களிலோ கண்ணீர்! அதைப்பற்றிய தகவலுக்கு அடுத்த வாரம் வரை காத்திருங்கள்... — தொடரும்.அந்தமானில் உள்ள வீரசாவர்க்கர் விமான நிலையம், சென்னை விமான நிலையத்துடன் ஒப்பிடுகையில் அதன் கால்வாசி பகுதி கூட இருக்காது. அந்த அளவு மிகச் சிறிய விமான நிலையம்.ஆனாலும், சென்னை, கொல்கத்தா, டில்லி, பெங்களூர், ஐதராபாத் என, நாட்டின் முக்கிய நகரங்களுக்கும், இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் என வெளிநாட்டு விமானங்களும் இங்கு வந்து போகின்றன.அதேபோன்று, சென்னை, கொல்கத்தா மற்றும் விசாகபட்டினத்திலிருந்து, போர்ட் பிளேயருக்கு, கப்பல் போக்குவரத்தும் உண்டு. மேலும், அந்தமான் நிகோபர் நிர்வாகம், அந்தமான் நிகோபர் தீவுகளுக்கிடையே சுற்றுலா பயணிகளுக்கென்றே, பயணியர் மற்றும் சரக்கு கப்பல் என, 15 சிறிய கப்பல்களையும், எம்.வி.ராமானுஜம் எனும் பெரிய கப்பலையும் நிர்வகிக்கிறது.தொல்லியல் துறையினரால், கி.மு., இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்படும் அந்தமான் நிகோபர் தீவுகளில், மொத்தம், 572 தீவுகள் இருந்தாலும், மக்கள் குடியிருப்பதென்னவோ, 36 தீவுகளில் மட்டும் தான். அதிலும் சுற்றுலா பயணிகளுக்கு என்று அனுமதிக்கப்பட்டது சில தீவுகளே! செவன் சிஸ்டர்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !