உள்ளூர் செய்திகள்

திசை மாறிய வாழ்க்கை!

வள்ளியம்மையும், குமரகுருவும், ஒரே நாளில் இறந்து விட்டனர். நாகராஜனுக்கு ஆச்சரியமாக இருந்தது. குமரகுருவின் உடல்நிலை மிக மோசமாகி, இனி, அவரை காப்பாற்ற முடியாது என்று தெரிந்ததும், அவரை வீட்டிற்கு அழைத்து போக சொல்லி விட்டனர், டாக்டர்கள். அவரின் உடம்பில் மொத்த அவயங்களும் செயல் இழந்து, உயிர் மட்டுமே ஊசலாடிக் கொண்டிருந்தது. வீட்டிற்கு அழைத்து வந்ததிலிருந்து, அருகிலேயே அமர்ந்து, அவருடைய கண்களில் வழியும் கண்ணீரை சேலை தலைப்பால் துடைத்தபடி, தேவையானதை எல்லாம் செய்து கொண்டிருந்தாள், வள்ளியம்மை. ஒரு கட்டத்திற்கு மேல் நாகராஜனிடம், ''உங்க சாரை பார்த்துக்கோ, நாகு. நான் கொஞ்ச நேரம் துாங்கறேன்,'' என்று சொல்லி, அவள் அறையில் போய் படுத்துக் கொண்டாள். அடுத்த சில மணி நேரங்களில், குமரகுருவின் உயிர் பிரிந்தது. ''போய், பெரியம்மாவை எழுப்பிட்டு வா,'' என்று, மனைவி வேணியை அனுப்பி வைத்தான், நாகராஜன். அறைக்கு போன, வேணியின் அலறல் கேட்டு, நாகராஜனும் ஓடிப்போய் பார்த்தான். அங்கு, வள்ளியம்மையும் இறந்து கிடந்தாள். வள்ளியம்மை திடீரென்று இறந்து போவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை; அவள் நோய்வாய்ப்பட்டிருக்கவும் இல்லை. கணவனின் இறப்பை கணித்த அவளின் மனம், அவருக்கு முன் இறந்து போக ஆசைப்பட்டு, அந்த எண்ணமே எந்த சிரமமும் இல்லாமல், அவளுக்கு அது கிடைத்திருக்கிறது என்பதை நினைக்கும்போது, அடக்க முடியாமல் துக்கம் பொங்கியது, நாகராஜனுக்கு. நேற்று வரை வெறுமையாய் கிடந்த பெரிய வீடு. இன்றைக்கு சுற்றம், சொந்தம் என்று மனிதர்களால் நிறைந்துள்ளது. மரணம் தான் அதை சாதித்தது என்றால், அது தான் வாழ்வின் மிகப்பெரும் அவலம். வீட்டு முன், 'ஷாமியானா' பந்தல் போடப்பட்டு, தெருவில் உள்ளவர்களும் மற்றும் குமரகுரு வேலை பார்த்த இடத்திலிருந்து வந்தவர்களும் குழுமி இருந்தனர். 'ஷாமியானா' பந்தல் ஓரத்தில், துக்கம் தாளாமல் விம்மிக் கொண்டிருந்தனர், நாகராஜனும், வேணியும். நேற்று வரை, வள்ளியம்மையையும், குமரகுருவையும் சிரத்தையாக பராமரித்தவர்கள். ஆனால், இப்போது இறந்து கிடந்த உடல்களுக்கு அருகில் செல்ல அவர்களுக்கு அனுமதியில்லை.வள்ளியம்மையின் வளர்ப்பு மகனும், அவன் சுற்றமும் வந்ததுமே, நாகராஜனையும், வேணியையும் வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டனர். நாகராஜனின் பூர்வீகம், ராமநாதபுரத்திற்கு அருகில் ஒரு கிராமம். குடும்ப தொழில், விவசாயம் என்று பதவிசாகச் சொல்லிக் கொண்டாலும், ஆடு திருடுவது தான், அவர்களின் பிரதான தொழில். அதிலும், நாகராஜனின் அப்பா, ஆடு திருடுவதில் மகா கெட்டிக்காரர்.சுமாரான மதிப்பெண்களுடன், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும், படிப்பிற்கு முழுக்கு போட்டு, அப்பாவுடன் ஆடு திருடும் வேலையில் மும்முரமாய் இறங்கினான். ஒருமுறை, ஆடு திருடியதாக, நாகராஜனின் அப்பாவை, போலீஸ் பிடித்து, பிணமாக தான் திருப்பி கொடுத்தது. அவன் சித்தப்பா, தன்னுடன் வியாபாரத்திற்கு வரச்சொல்லி, நாகராஜனை வற்புறுத்தியும் கேட்காமல், அப்பாவின் சாவுக்குப் பின், திருடுவதில் உள்ள வசீகரத்தில் அதையே தொடர்ந்து கொண்டிருந்தான். விவசாயம் நொடித்து, கிராமங்களில் ஆடு, மாடுகள் வளர்ப்பது கொஞ்சம் கொஞ்சமாய் குறைய, ஆடு திருடுவதும், சாத்தியமில்லாமல் போனது. அதன்பின், இன்னும் இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து, நகரங்களை ஒட்டிய, புறநகரில் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து, திருடத் துவங்கினான். வள்ளியம்மையின் வீட்டில், கேட்டை ஒட்டியிருக்கும் மா மரம் பூக்கள் உதிர்வதை கவனித்தான், நாகராஜன். மரம், செடிகளுக்கு உரம் வைப்பவனாய், மூதாட்டியை அணுகவும், வாசல் கேட்டை திறந்து, அவனை அனுமதித்தாள்.வீட்டைச் சுற்றிலும் மா, பலா, தென்னை, வாழை, முருங்கை, எலுமிச்சை, கொய்யா, வேம்பு என்று, நிறைய மரங்களையும், தொட்டிகளில், பூச்செடிகளையும் வைத்திருந்தாள். வீட்டிற்கு பின்புறம், பெரிய வீடு கட்டும் அளவிற்கு இன்னொரு காலியிடம் கிடந்தது. அதில் பாத்தி பாத்தியாக, மிளகாய், தக்காளி, வெண்டை மற்றும் கத்தரி என்று, நிறைய காய்கறிகளை வளர்த்திருந்தாள். ஒவ்வொன்றிற்குமாய் உரங்களை துாவியபடி, வீட்டை நோட்டமிட்டான், நாகராஜன். வீட்டில் நாய் இல்லை. பின்புறம், ஒரு நுழைவு வாயில் இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து வயதான ஒருவர் கத்தும் குரல் கேட்டது. 'அவர், என் கணவர். உடல் நலமில்லாததால், வலியில் அவ்வப்போது இப்படித்தான் கத்திக் கொண்டிருப்பார். கிராமத்திலிருந்து வேணின்னு ஒரு பொண்ண அழைத்து வந்து வேலைக்கு வச்சிருந்தேன்ப்பா. அவளோட அப்பன், மூணு நாள்ல திரும்ப அழைத்து வந்து விட்டுருவேன்னு சொல்லிக் கூட்டிட்டு போனான்; 10 நாளாகியும் இன்னும் வரல. பயபுள்ளை போனையும் எடுக்க மாட்டேங்குது...' என்றாள், வள்ளியம்மை.நாகராஜன் வேலை முடித்து வெளியேறும்போது, 'உன்னைப் பார்த்தா, ரொம்பவும் நல்ல புள்ளாண்டானா தெரியிற... வேலையும் தெரியுது. நீ வேலைக்கு வந்துடுறியாப்பா...' என்றாள். மனசுக்குள் சிரித்து, 'வீட்ல கேட்டு சொல்றேன் பெரியம்மா...' என்றான், நாகராஜன். நான்கு நாட்கள் கழித்து, வள்ளியம்மையின் வீட்டுக்குள், திருடுவதற்காக, மூக்காண்டியுடன் நுழைந்தான், நாகராஜன். வீட்டின் பின்புறம், பூட்டியிருந்த கதவின் உள் தாழ்ப்பாளை, 'ஆக்சாபிளேடால்' அறுக்க முனைந்தபோது, கதவு திறந்து கொண்டது; பயமும், ஆச்சரியமுமாய் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். கழிப்பறை வாசல் முன் கிடந்தாள், மூதாட்டி. அவளின் தலையில் அடிபட்டு, தரையில் கொஞ்சம் ரத்தம் உறைந்திருந்தது.புறக்கடையிலிருந்து பிரதான வீட்டிற்குள் போவதற்குரிய வாசல் திறந்தே கிடந்தது. உள்ளே நுழைந்ததும், அறையின் சுவரை ஒட்டி ஒரு கட்டிலும், அதன் மேல் கசங்கிய விரிப்புகளும் தாறுமாறாய் கிடந்தன. கட்டிலை விட்டு கொஞ்ச துாரத்தில் முதியவர் விழுந்து கிடந்தார். அவரைச் சுற்றிலும், மலமும், சிறுநீருமாய் சகிக்க முடியாத நாற்றம். நாகராஜனும், மூக்காண்டியும் வீட்டின் மற்ற அறைகளுக்கு போய் தேடி பார்த்தனர். யாரும் இல்லை. திருடர்கள் வந்து போனதற்கான தடயங்களும் இல்லை என்பது ஊர்ஜிதமானது. சிறிது நேரத்தில், பெரியவர் கத்த துவங்கினார். அவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவர், பக்கவாத பாதிப்பில், வாய் கோணி, ஒரு பக்க கையும், காலும் செயல்படாமல், கழிப்பறை பக்கம் கை காட்டி, ஏதோ சொல்ல முனைந்தார். வார்த்தைகள் தெளிவாக இல்லை. ஆனாலும், கழிப்பறை முன் அடிபட்டு கிடக்கும் மூதாட்டியை காப்பாற்றச் சொல்வது புரிந்தது. பெரியவரை உற்று கவனித்த போது, இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது, நாகராஜனுக்கு. அழகன்குளம் பள்ளியில் படித்தபோது, அங்கு, தலைமை ஆசிரியராய் இருந்தவர். அவரின் மனைவி, மதுரையில், அரசு அலுவலகம் ஒன்றில் வேலையில் இருந்ததால், அழகன்குளத்தில் இவர் மட்டும் தனியாக தங்கி இருந்தார். படிப்பில் பின்தங்கி இருக்கும் மாணவர்களை, காலையும், மாலையும், வீட்டிற்கு வரச்சொல்லி பாடம் நடத்துவார். அவரிடம் படித்ததால் தான் ஆங்கிலத்திலும், கணிதத்திலும் தேர்ச்சி அடைந்தான், நாகராஜன். இல்லையென்றால், நிச்சயம் தோல்வி அடைந்து இருப்பான். மூன்று ஆண்டுகள், அழகன்குளம் பள்ளியில், எச்.எம்., ஆக வேலை பார்த்து, மாற்றலாகி மதுரைக்கு போய் விட்டார். 'மாப்ள, இவரு என்னோட வாத்தியாரு. பாடம் சொல்லிக்குடுத்த குருவோட வீட்ல திருடுறது மகா பாவம். பாட்டியம்மாவ ஆஸ்பத்திரிக்கு அழைத்து போய் காப்பாத்த முடியுமான்னு பார்க்கலாம்...' என்றான், நாகராஜன்.மூக்காண்டி, அதை ஒத்துக்கொள்ளாமல், வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போதே, அவசர கால ஆம்புலன்ஸ், 108க்குப் போன் பண்ணினான். 'நாளைக்கு நீ போலீசுல மாட்டிக்கிட்டா, என்னை காட்டிக் கொடுத்துடாத, நாகு...' என்று சொன்ன மூக்காண்டி, அங்கிருந்து அவசரமாய் வெளியேறினான்.சித்தப்பாவிற்கு போன் பண்ணி வரச் சொன்னான். ஆம்புலன்ஸ் வரவும், மூதாட்டியையும், பெரியவரையும் அதில் ஏற்றி, மதுரை, அரசு மருத்துவமனையில் சேர்த்தான். விடிந்த பின் தான் மருத்துவமனைக்கு வந்தார், நாகராஜனின் சித்தப்பா. பெரியவரை அவர் பொறுப்பில் வீட்டிற்கு அனுப்பி வைத்து, மருத்துவமனையில் இருந்து, மூதாட்டியை கவனித்துக் கொண்டான், நாகராஜன். இரண்டு நாளில் பூரணமாய் குணமாகி விட்டாள். அன்று இரவு, துாங்க போவதற்கு முன், பாத்ரூம் போய்விட்டு வரும்போது, திடீரென, தலை சுற்றி விழுந்து விட்டாள், வள்ளியம்மை. அதில், தலையில் அடிபட்டு விட்டது.மனைவிக்கு ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்த, குமரகுருவும் கட்டிலிலிருந்து குதித்து, கத்தியிருக்கிறார். வலியால், அவ்வப்போது குமரகுரு இப்படிக் கத்துவார் என்பதால், அக்கம்பக்கம் வசிப்போர், அதை பெரிதுபடுத்தவில்லை.'நீ மட்டும், அன்னைக்கு, எங்க வீட்டுக்கு திருட வரலைன்னா நான் செத்து போயிருப்பேன்... எங்களுக்கு உதவியா, எங்க கூடவே இருந்திடேன்ப்பா...' என்றாள், வள்ளியம்மை.தயங்கினான், நாகராஜன்.நாகராஜனின் ஆசிரியரும் கண்களாலேயே கெஞ்சினார்.'நீ, ஊருக்கு வந்து என்னடா பண்ண போற, மறுபடியும் திருடத்தான் கிளம்புவ... அதுக்கு இங்கயே இருந்து இவங்கள பார்த்துக்க... அது, குருவுக்கு நீ குடுக்குற காணிக்கையா இருக்கும். போற வழிக்கு புண்ணியமும் கெடைக்கும்...' என்றார், சித்தப்பா.சம்மதித்தான், நாகராஜன். 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியரும், அவர் மனைவியும் சொன்ன பணிகளை செய்து, அவர்களுடனேயே இருந்தான். அவர்கள் வீட்டில், வேலை பார்த்த, வேணி மறுபடியும் வந்தாள். வேணிக்கு பிடிக்காத குடிகாரன் ஒருத்தனுக்கு, அவள் அப்பா, இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய முனைந்ததாகவும், அதிலிருந்து தப்பி, வீட்டை விட்டு வந்ததாகவும் தெரிவித்தாள். அவளையும், வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டாள், வள்ளியம்மை.சில ஆண்டுகளுக்கு பின், நாகராஜனுக்கும், வேணிக்கும் திருமணம் செய்து வைத்தாள், வள்ளியம்மை. குமரகுருவின் சொந்தக்காரர்கள் எப்போதாவது வந்து, 'தாட்பூட்' என்று அதிகாரம் பண்ணுவர். எதுவும் சொல்ல மாட்டாள், வள்ளியம்மை. கோபித்து கிளம்பி விடுவர். குமரகுருவின் பூர்வீகம், பந்தல்குடிக்கு பக்கத்தில் ஒரு கிராமம். குடும்பத்தில் அவர் தான், படித்து, வேலைக்காக வெளியூர் வந்தவர். அவர் தம்பி, கிராமத்திலேயே நில புலன்களை பார்த்துக் கொண்டிருந்தார். குடித்தும், சூதாடியும் சொத்தை அழித்தார். அவருக்கு வீடு நிறைய குழந்தைகள். ஆனால், வள்ளியம்மை - குமரகுரு தம்பதியருக்கு, குழந்தை இல்லை. குமரகுரு தம்பியின் கடைசி மகனை, தங்கள் பிள்ளையாக வளர்த்தனர். இதில், வள்ளியம்மைக்கு கொஞ்சம் குறை. அவள், அனாதை குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்கலாம் என்றாள். அதற்கு சம்மதிக்கவில்லை, குமரகுரு. தம்பி மகனை, டாக்டருக்கு படிக்க வைத்தனர். படிப்பு முடித்து, வேலை நிமித்தமாக சென்னையில் குடியேறினான். அப்பா, அண்ணன் மற்றும் அக்காக்கள் அவனை சூழ்ந்து கொண்டனர். அவர்களுடன் சேர்ந்து, வளர்ப்பு தாயையும், தந்தையையும் ஒதுக்கி விட்டான். ஆனால், குமரகுரு - வள்ளியம்மையின் மரணச் செய்தியை அறிந்ததும், அனைவரும் குவிந்து விட்டனர். காரணம், அவர்களுக்கு நிறைய சொத்து இருந்தது. இருவரின் பிணம் வீட்டிலிருக்கும்போதே, அதுபற்றி அரசல் புரசலாக சண்டை போட துவங்கினர். வள்ளியம்மையையும், குமரகுருவையும் ஒரே சிதையில் வைத்து எரித்தனர். வளர்ப்பு மகனும், அவனைச் சேர்ந்தவர்களும், நாகராஜனையும், வேணியையும் வீட்டை விட்டு வெளியேற்றினர். கிராமத்தில், நாகராஜனுக்கு யாருமில்லை. அவன் சித்தப்பாவும் இறந்து விட்டார். நாகராஜனும், வேணியும், குமரகுருவின் நண்பரான, வக்கீலின் வருகைக்காக காத்திருந்தனர். வள்ளியம்மையும், குமரகுருவும் கையெழுத்திட்ட உயில் ஒன்றை கொண்டு வந்தார், வக்கீல்.''உயிலில், அவர்களின் அசையும், அசையா சொத்துக்களையும், வங்கியில் இருக்கும், 'டிபாசிட்'டுகள் முழுவதையும், 'டிரஸ்டு'க்கு எழுதி வைத்துள்ளார். 'டிரஸ்ட்'டின் பாதுகாவலர்களாக, நாகராஜனையும், வேணியையும், அதன் கண்காணிப்பாளராக, என்னையும் நியமித்துள்ளனர். ''குழந்தை இல்லாத, ஏழ்மையில் இருக்கும் முதியோர்களுக்காக ஒரு இல்லத்தை நிறுவி, 'டிரஸ்ட்' நிர்வகிக்க வேண்டும்,'' எனக் கூறினார், வக்கீல்.உயிலின் வாசகங்களை கேட்ட வளர்ப்பு மகனும், அவனை சேர்ந்தவர்களும், வள்ளியம்மையை திட்டி தீர்த்தபடி கிளம்பினர். நாகராஜனும், வேணியும் அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருந்தனர். தனிமையை நீடிக்க விடக்கூடாது என்றும், உடனே, குழந்தை இல்லாத முதியவர்களை அழைத்து வந்து வீட்டை நிறைக்கவும், முடிவு செய்தனர். திருடனாய் வாழ்ந்த தன்னை, இந்த சமூகத்திற்கு தொண்டு செய்யும் சமூக சேவகனாக, வாழ்வின் திசையையே முற்றிலுமாய் மாற்றிய, வள்ளியம்மையையும், குமரகுருவையும் மனசுக்குள் தெய்வமாக நினைத்து, வழிபடத் துவங்கினான், நாகராஜன்.சோ. சுப்புராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !