உள்ளூர் செய்திகள்

ஒரு சாமான்யனின் அமெரிக்க பயண அனுபவம்

விமான பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளம் பெண் திடீரென அலறியதில், பயணிகள் அனைவரும் அரண்டு போயினர். விசாரித்ததில், அப்பெண், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பதும், மனநிலை பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக பெற்றோருடன் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்படுவதும் தெரிய வந்தது. இதையறிந்த பயணிகள், அமைதி அடைந்தனர்.சிறிது நேரத்தில், எங்கள் அருகில் காலியாக இருந்த இருக்கையில், அப்பெண் அமர்ந்தார். உள்ளுக்குள் லேசான உதறல். முதலில் அமைதியாக இருந்த அவர், பின்னர் சரளமான ஆங்கிலத்தில், எங்களுடன் பேச துவங்கினார்.ஆங்கிலம் எனக்கு சரியாக தெரியவில்லை என்றாலும், அவர் பேசியதை புரிந்து கொள்ள முடிந்தது. அரைகுறை ஆங்கிலத்தில் நானும், என் மனைவியும் பதில் அளித்தோம். 'கொஞ்ச நேரத்திற்கு முன் கூச்சலிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த பெண்ணா இவர்...' என்று நினைக்கும் அளவிற்கு, மிகவும் புத்திசாலித்தனமாக பேசினார். அருகில் அமர்ந்திருந்த தன் தாய், தொந்தரவு செய்ததாலேயே சத்தம் போட்டதாக கூறினார். மிகவும் அழகான அந்த இளம் பெண், விரைவில் குணமாக, கடவுளை வேண்டிக் கொண்டோம். கிட்டத்தட்ட, 15 மணி நேர பயணத்திற்கு பின், விமானி பேசினார்... 'நாம் அமெரிக்காவின் அழகிய நகரான, சிகாகோவில், இன்னும் சில நிமிடங்களில் இறங்கப் போகிறோம்...' என, அறிவித்தார்; மனம் துள்ளல் போட்டது. அருகில் இருந்த ஜன்னல் வழியாக பார்த்தேன். மேகக் கூட்டம் விலகி, வானளாவிய கட்டடங்கள் தெரியத் துவங்கின. சில விநாடிகளில் விமானம், சிகாகோவில் தரையிறங்கியது. எங்களை வரவேற்க மகள், மருமகன் மற்றும் பேத்தி வந்திருந்தனர். 10 நிமிடங்களில் விமான நிலையத்தை விட்டு வெளியேறி, சிகாகோவின் புறநகரில் உள்ள வீட்டிற்கு சென்றோம்.சிறிது ஓய்விற்கு பின், அமெரிக்காவை சுற்றிப் பார்க்க வேண்டிய பயண திட்டங்களை கூறினார், மருமகன். சிகாகோவில் இருந்து புறப்பட்டு, ஆறு நாள் பயணமாக, பல நகரங்களுக்கு, திட்டமிடப்பட்டிருந்தது.அதற்கான ஏற்பாடுகளை பயண நிறுவனம், செய்திருந்தது. நபர் ஒன்றுக்கு, 500 டாலர் கட்டணம். இந்திய மதிப்பில், 35 ஆயிரம் ரூபாய். வேன் மற்றும் தங்குமிட செலவுகளை அந்நிறுவனம் செய்யும்.சாப்பாடு, சுற்றுலா தலங்களில் வசூலிக்கப்படும், நுழைவு கட்டணம் ஆகியவை, நம் பொறுப்பு.குறிப்பிட்ட நாளில், 16 பேர் பயணம் செய்யும் வகையிலான சொகுசு வேன் வந்தது. கடைசி நிமிடத்தில் பலர், தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டதால், ஆறு பேர் மட்டுமே புறப்பட்டோம். சீனாக்காரர் ஒருவர் வழிகாட்டியாக இருக்க, இன்னொரு சீனர், வேனை இயக்கினார். ஐந்து மணி நேர பயணம். அமெரிக்க சாலைகளில், 50 கி.மீ., துாரத்திற்கு ஒரு, 'மோட்டல்' என, ஆங்கிலத்தில் சொல்லப்படும் உணவகங்கள் உள்ளன.அனைத்து பிரபல உணவு நிறுவனங்களுக்கும் அங்கு கடைகள் உள்ளன. பழங்கள், காய்கறிகள் துவங்கி, வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்தும் கிடைக்கின்றன. நாம் கையில் எடுத்து செல்லும் உணவுகளை சாப்பிட, சாப்பாட்டு அறை இருக்கிறது. நாங்கள் எடுத்து சென்ற புளி சாதத்தை சாப்பிட்டு, காபியை வாங்கி குடித்த பின், பயணத்தை தொடர்ந்தோம். சாப்பாட்டு அறைக்கோ, கழிவறைக்கோ கட்டணம் கிடையாது. கிட்டத்தட்ட, ஐந்து மணி நேர பயணத்திற்கு பின், டெட்ராய்ட் நகரத்தை அடைந்தோம். ஒரு அழகிய தொழில்நகரம், டெட்ராய்ட்.இங்கு, ஏராளமான கார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், இந்நகருக்கு, 'மோட்டார் சிட்டி' என்ற பெயரும் உண்டு.அமெரிக்க அதிபர்களுக்கான, பாதுகாப்பான, குண்டு துளைக்காத கார்கள், இந்நகரில் இருந்து தான் தயாராகி செல்கின்றனவாம். இங்குள்ள, ஹென்றி போர்டு மியூசியம் பிரபலமானது. கிட்டத்தட்ட, 10 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மியூசியத்தை வலம் வந்தால் போதும்... அமெரிக்க சரித்திரத்தை, கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ள முடியும். டெட்ராய்ட் நகரில் தான், மிகப் பிரபலமான கார் நிறுவனங்களான, 'ஜெனரல் மோட்டார்ஸ்' நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. துறைமுகத்தின் அருகே, வானளாவ நீண்டிருக்கும், அந்த கட்டடம், பிரமிப்பூட்டுகிறது. நகரின் முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்தோம். இரவு நெருங்கியதால், டெட்ராய்ட்டின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டோம். மறுநாள், பயணத்திற்கான மதிய உணவை தயார் செய்த பின், படுக்கைக்கு சென்றோம். காலை, 7:00 மணிக்கே கிளம்ப வேண்டும் என்று வழிகாட்டி கூறியிருந்ததால், சீக்கிரமே எழுந்து, புறப்பட தயாரானோம். நாயகரா அருவியை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். 'ஐந்து மணி நேர பயணத்தில் நயாகரா சென்றடையலாம்...' என்று அறிவித்த வழிகாட்டி, அந்த பிரம்மாண்ட அருவியின் அருமை, பெருமைகளை கூறியபடி வந்தார். நயாகராவை எங்கள் வேன் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், அங்குள்ள ஒரு ஆபத்து குறித்து, வழிகாட்டி கூறியது, அதிர்ச்சியளித்தது.- தொடரும்.* பயணத்தின் போது, சைவ உணவுகள் கிடைப்பது அரிது என்பதால், வீட்டில் இருந்தே இரண்டு, மூன்று நாட்களுக்கான உணவை எடுத்துச் செல்வது உத்தமம். வாழை மற்றும் ஆப்பிள் பழங்கள் தக்க சமயத்தில் கை கொடுக்கும்* தண்ணீரை விலை கொடுத்து தான் வாங்க வேண்டும் என்பதால், தண்ணீர் பாட்டில்களை அதிகமாக எடுத்து செல்லலாம். தங்கும் ஓட்டல்களில் அவற்றை நிரப்பிக் கொண்டால், குடிநீருக்காக கூடுதல் பணம் செலவிட அவசியம் இருக்காது* ஓட்டல்களில், காலை உணவை இலவசமாக கொடுத்து விடுவர். சாப்பிட்ட பின், அங்கு வைக்கப்பட்டுள்ள, பழங்கள், பிரட், பிஸ்கட், தயிர், பால் பாக்கெட்டுகள் மற்றும் உலர் பழங்களை, 'பேக்' செய்து கொண்டால், பயணத்தின் போது கைகொடுக்கும். - எஸ்.உமாபதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !