நடமாடும் தேன் கூடு!
விசித்திரமான செயல்களை செய்து முடித்து, அனைவரை யும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது, சீனர்களுக்கு கைவந்த கலை. சாதிப்பதற்காக, எவ்வளவு பெரிய ஆபத்தையும் எதிர் கொள்ள, அவர்கள் தயங்குவது இல்லை.இப்படித்தான், சீனாவைச் சேர்ந்த இரு இளைஞர்கள், அதிக தேனீக்களை உடலில் தாங்குவது யார் என்ற போட்டியில் களம் இறங்கினர். கோங்ஜியாங், வாங் டாலின் என்ற அந்த இருவரும், உள்ளாடைகள் மட்டும் அணிந்து, போட்டிக்கு தயாராயினர். மற்ற தேனீக்களை கவர்ந்து இழுப்பதற்காக, இருவரும், தங்கள் கைகளில் ஒரு சில ராணி தேனீக்களை மட்டும் வைத்துக் கொண்டனர்.அடுத்த சில நிமிடங்களில், ஏராளமான தேனீக்கள் படையெடுத்து வந்து, இருவரின் உடலிலும் அமரத் துவங்கின. தலை, கை, கால் என, ஒரு இடம் விடாமல், தேன் கூட்டில் அமர்வது போல், தேனீக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டன. இருவரும் நடமாடும் தேன் கூடு போலவே காணப்பட்டனர். தேனீக்கள் உடல் முழுவதும் மொய்த்ததால் ஏற்பட்ட எரிச்சல், தேனீக்களின் ரீங்காரச் சப்தம் ஆகியவற்றை தாங்க முடியால், வாங் டாலின், போட்டியில் இருந்து வெளியேறினார். இவர் உடலில், 22.9 கிலோ தேனீக்கள் அமர்ந்திருந்தன. போட்டியில் வெற்றி பெற்ற கோங்ஜியாங் கின் உடலில், 26 கிலோ தேனீக்கள் அமர்ந்திருந்தன.60 நிமிடங்களில், இந்த சாதனையை, அவர் நிகழ்த்தி முடித்தார்.— ஜோல்னா பையன்.