சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு சந்தனக்கூடு திருவிழா!
சந்தனக்கூட்டின் முன் தாரை, தப்பட்டை, மேள தாளத்தை ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் முழங்கி வர, இருள் விலக்கி வழிகாட்டும் தீப்பந்தங்களை, தேவேந்திரர் சமுதாயத்தினர் ஏந்தி வர, சந்தனக்கூட்டிற்கு தேவையான இணைப்பு கயிறை, சமுதாயத்தை பிணைக்கும் கயிறாக நினைத்து, நாடார் சமுதாயத்தினர் உருவாக்கித் தர, விளக்கு ஏற்ற தேவைப்படும் எண்ணெய், திரியை சலவையாளர் சமுதாயத்தினர் கொண்டு தர, தங்களது தோள் கொடுத்து சந்தனக்கூட்டை, யாதவ சமுதாயத்தினர் சுமந்து வர, மக்கள் வெள்ளத்தில் மல்லிகை மலர்களை மாலைகளாக சூடி, மணக்க, மணக்க ஆடி அசைந்து வர இருக்கும் ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா, அக்., 20ம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து, 8 கி.மீ., தூரத்தில் உள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு, குத்புல் அக்தாப் சுல்தான் இபுராகீம் ஷஹீது ஒலியுல்லா மகானின் அடக்கஸ்தலம் உள்ளது.மிகவும் பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த புனித ஸ்தலத்திற்கு, அனைத்து மதத்தினரும் வந்து செல்கின்றனர் என்பதும், குறிப்பாக, மனநலம் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் இடமாகவும் விளங்குகிறது.இங்கு ராமநாதபுரத்தை ஆண்ட ரகுநாத சேதுபதி உள்ளிட்ட பலர் வந்து, தங்களது நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி சென்ற வரலாறும் உள்ளது.இத்தகைய பெருமை வாய்ந்த ஏர்வாடி தர்காவில், வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் உரூஸ் எனப்படும் சந்தனக்கூடு திருவிழா மிகவும் பிரசித்தம். பல லட்சம் பக்தர்கள் கூடும் இந்த விழா, வரும், 20ம் தேதி இரவு துவங்கி, மறுநாள் காலை மகானின் சமாதியில் சந்தனம் பூசுவது வரை தொடரும். கட்டுரையில் முன்னரே சொன்னபடி, பல்வேறு சமுதாயத்தினர் உருவாக்கித் தந்த சந்தனக்கூடு, அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகளின் பின்னணியில் பவனி வருவதை காணவும், பங்கேற்கவும், பலன் பெறவும் வேண்டி, நாட்டின் பல பகுதி களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர். ***எல். முருகராஜ்