சாண்டோ சின்னப்ப தேவர்! (2)
ஜூன் 28 முதல், தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்ப தேவரின் நூற்றாண்டு துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —'சின்னப்பா... டேய் சின்னா...' என்று பெருங்குரல் கொடுத்து அழைத்தபடி தேடினார் ராமக்காள். எங்கும் மகனை காணவில்லை. 'கோவிலுக்கு நேரத்தோடப் போகோணும்; எங்க போய் விளையாடுதுகளோ...''அவனுங்களுக்குத் தெரியுமா, சொல்லி இருக்கியா?' என்று கேட்டு மனைவியைக் கோபித்தார் அய்யாவு தேவர்.'நல்லா கேட்டீங்க போங்கோ... கருக்கல்லியே எழுப்பி, பல் விளக்க வெச்சு, குளிக்கச் சொல்லி, தலையையும் சீவி விட்டேன். பாருங்கோ சமயத்துல பயலுகள காணோம்...'மாடு பூட்டி தயாராக இருந்தது வண்டி. அன்று, ஆடிக் கிருத்திகை; மருதமலை முருகனுக்கு மாவிளக்குப் போடுவதாகப் பிரார்த்தனை.'இதுக்குத் தான் சொல்றது பொட்டப்புள்ளய மட்டும் பெத்துக்கணும்ன்னு! அந்தப் பாக்கியம் தான் எனக்கு இல்லாம போச்சே... ஆம்பளப் பசங்க அடங்க மாட்டானுங்கோ...' என்று அலுத்துக் கொண்டார் ராமக்காள்.'வீணா எதுக்குக் கவலைப்படறே... கந்தன் கண் திறந்தா மகளும் பொறந்துட்டுப் போறா...' என, மீசையை தடவியபடி மனைவிக்கு ஆறுதல் கூறினார் அய்யாவு.ஒருவழியாக எல்லாரும் வந்து சேர, மற்ற மகன்கள் ஒவ்வொருவராக மாட்டு வண்டியில் ஏறினர்; சின்னப்பா மட்டும் ஏறவில்லை.'இருந்தாலும், இந்த சின்னவனுக்கு இவ்வளவு ஏத்தம் கூடாதுங்கோ... கோவிலுக்கு வர்ற பெரியவன் சுப்பையாவ தடுத்து, 'நீயும் ஏண்ணா சாமி, பூதம்ன்னு போய்ச் சீரழியறே... ஆண்டிப் பயலப் பாக்க இத்தனைச் செலவு தேவையா'ன்னு கேட்டானாம். அதோட, 'வா அண்ணா... கோதாவுல குஸ்தி பாக்கலாம்'ன்னு கூப்பிட்டானாம். அவன் உருப்பட மாட்டாங்கோ....'அய்யாவு தேவருக்கு ஆறு மகன்கள். மூத்தவன் சுப்பையா; இரண்டாவது சின்னப்பா. அவனைத் தொடர்ந்து முருகையா, நடராஜன், திருமுகம், மாரியப்பன். பிழைப்பு தேடி, கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள ராமநாதபுரம் வந்தவர், கடுமையாகப் பாடுபட்டு ஆளானார் அய்யாவு தேவர். சொந்தமாக கொஞ்சம் நிலம் இருந்தது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வந்தனர். மூத்தவன் சுப்பையா மில் தொழிலாளி; கூடவே, வீர மாருதி தேகப் பயிற்சி சாலை நிறுவனர், குஸ்தி வாத்தியார், தெருக்கூத்து கலைஞர் என பல முகங்கள் அவருக்கு உண்டு.சின்னப்பாவுக்கு சிலேட்டு, பல்பம், பள்ளிக்கூடம் எல்லாமே தன் அண்ணன் சுப்பையா தான். கண்களை விலக்காமல், கோதாவையே பார்த்தபடி இருந்தான் சின்னப்பா. அவனுக்கு அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பார்ப்பதில் ஆனந்தமாக இருந்தது. 'இதை விட்டு, கற்சிலைக்குக் கற்பூரம் காட்டுவதைப் பார்ப்பதில் என்ன இன்பம் வந்துவிடப் போகிறது...' என நினைத்துக் கொண்டான்.'ஏண்டா... அய்யாவு மகனா நீ?' என்று கேட்டார் ஒரு பயில்வான்.'ஆம்' என்பது போல் தலையாட்டினான் சின்னப்பா.'நீ கோவிலுக்குப் போகலயா?''போட்டியப் பாக்க முடியாதுங்களே... மறுபடி என்னிக்கு குஸ்தி நடக்குமோ தெரியாது. சாமியை எப்பப் பாத்தா என்ன... மலையும் நகராது; சிலையும் பறக்காது...'என்றான்.'பாருங்கடா... அய்யாவு மகன் என்ன போடு போடறான்னு! இந்தச் சின்ன வயசுலேயே கடவுள பழிச்சுப் பேசறியா... சாமி கண்ணைக் குத்திடும்...' என்றார் பயில்வான்.'பொய் சொல்லாதீங்க மாமா.... மின்னல் பட்டா தான் கண்ணு பொட்டையாவும்ன்னு சொல்லி, எங்க அய்யன் எங்கள மழையில வெளிய விட மாட்டாரு...' என்று பட்டென்று கூறினான் சின்னப்பா.'அம்மா... சோறு போடுவியா மாட்டியா...' என்று கேட்டான் சின்னப்பா. சாப்பாட்டை மூடி வைத்து விட்டு, அவன் எதிரில் வந்த ராமக்காள், 'உன் மூஞ்சிக்கு சாப்பாடு வேறயா... ஊதாரித்தனம் செய்துட்டு வந்தா, சோறு எப்படிக் கிடைக்கும்! நீயும், நாலு காசு சம்பாதிச்சுட்டு வந்தாத் தான், கால் வயித்துக்காவது கஞ்சி ஊத்துவேன். இல்லன்னா, எனக்கு அஞ்சு பிள்ளைங்கன்னு நெனச்சுட்டு வாழுறேன்...' என்று கூறியவள், எரிந்து கொண்டிருந்த காடா விளக்கை ஊதி அணைத்து, தூங்கச் சென்று விட்டாள்.பசித்தது; அதைவிட, பெற்ற தாய் பிச்சைக்காரனை விரட்டுவது போல் துரத்தியடித்த அவமானம். நின்று கொண்டே இருந்தான் சின்னப்பா.அம்மாவின் குறட்டைச் சத்தம் வீதி வரை கேட்டது. அப்பா எழுந்து கொண்டதற்கு அடையாளமாக பீடி வாசம் வந்தது. அவர் கண்களில் விழுந்தால், சவுக்கடி நிச்சயம்.சின்னப்பாவுக்கு வாழ்வு நரகமாகப்பட்டது. விளையாட விட மாட்டேன் என்கின்றனரே... அம்மா கும்பிடுகிற சாமியாவது நல்லது செய்யுமா? 'முருகா... எனக்கு வாழ்வு கொடு; இல்லேன்னா உன் சன்னிதியிலேயே செத்துப் போறேன்...' என்று மனதுக்குள் புலம்பியபடி, அந்த நள்ளிரவில், மருதமலையை நோக்கி நடந்தான்.திருட்டுத்தனமா சுவர் ஏறி கோவிலுக்குள் குதித்தான். கர்ப்பக்கிரகம் சாத்தப்பட்டு இருந்தது. முருகனிடம் நேரடியாக முறையிட வழி இல்லையா... சுற்றிச் சுற்றி வந்தான்; உள்ளே புக ஏதாவது சந்து, பொந்து, காரை பெயர்ந்த சுவர் கண்ணில் படாதா? இரண்டாம் ஜாம நிலவொளி; சொற்பமாக வெளிச்சம் காட்டியது.யானையின் பிளிறல், காதருகே கேட்டது. அதன் சுவாசமும், தும்பிக்கையின் ஸ்பரிசமும் தோள்களில் தெரிந்தன.'அம்மாடியோவ்... யா... யானை...' அலறியபடியே மலையடிவாரம் நோக்கி ஓடியதில், கால் தடுக்கி உருண்டு புரண்டான். படிகள் உடலைப் பதம் பார்த்தன. சிறிது நேரத்தில் மூர்ச்சை ஆனான்.சிறிது நேரத்தில், 'டேய் சின்னா... நீ எங்கேடா இருக்க... சாப்பிட வா மகனே... மாட்டுப் பொங்கல் அதுவுமா, ஊரே தேரும், திருநாளுமா இருக்கு. உன்னக் காணாம என் பெத்த வயிறு பத்தி எரியுது. இன்னிக்கு ஒரு நாளாவது, அரிசிச் சோறும், வாத்து முட்டையும், கருவாட்டுக் குழம்பும் போடக் காத்திருந்தேனே... மகனே... நீ எங்கேப்பா போயிட்ட...' என்று அம்மாவின் உரத்த அழுகுரல் கேட்டது.'இது அம்மாவின் குரலா... அழுகிறாளா இல்ல தன் மரணத்துக்கான ஒப்பாரியா... நான் இறந்துட்டேனா... இது கனவா, நனவா...' என்று எண்ணியவனின் காதில், திரும்பத் திரும்ப அம்மாவின் குரல் மட்டுமே கேட்டது.முகத்தில் சுள் என்று சுட்டான் சூரியன். விழித்துக் கொண்ட சின்னப்பாவிற்கு, தான் பிழைத்தது மறுபிறவி என்று புரிந்தது. 'காட்டு யானையின் கால்களில் மிதிபடாமல் காப்பாற்றியதும், சாப்பிட அழைத்ததும் அம்மாவா... அவளால் எப்படி இத்தனை தூரம் கத்திக் கூப்பிட முடியும்...' என்று எண்ணியவன், எழுந்து ஊருக்குள் ஓடினான்.வீட்டிற்கு வந்ததும், 'அம்மா... நேத்து ராத்திரி நீ என்னைத் தேடி மருதமலைக் கோவிலுக்கு வந்தியா... வீட்டுக்கு வரச் சொல்லி அழுதியா... என்னை சாப்பிடக் கூப்பிட்டாயா?' என்று கேட்டான்.மலங்க மலங்க விழித்தவள், 'இல்லையே...' என்றாள். கூடவே, 'நான் கூப்பிடலேன்னா என்ன கண்ணு... அந்த மருதமலை முருகன் நம் குலதெய்வம்; அவன் உனக்கு புத்தி சொல்லித் திருத்தி, இங்கே அனுப்பியிருக்கான். இனியாவது பொழைக்கிற வழியைப் பாரு ராசா... கூத்து, நாடகம், கோதா, ஊமைப்படம் காட்டறாங்கன்னு காசை கரியாக்காதே.'முருகன் கூட ஒரு முறை தான் புத்தி சொல்லி, காப்பாத்துவான்; நீயா தான் உணர்ந்து திருந்தோணும். போ போயி பல்லை வௌக்கிட்டு வா. கருவாட்டுக் குழம்பும், பழையதும் எடுத்து வைக்கிறேன்...' என்றாள்.சின்னப்பாவுக்கு உடல் சிலிர்த்தது. 'முருகன் கல்லில்லை; கடவுள். காட்டு யானையிடமிருந்து என் உயிரைக் காப்பாற்ற, அம்மாவாகவே வந்து விட்டான். முருகா... இனிமே நான் தப்பு செய்ய மாட்டேன்; ஒழுங்கா நடந்துக்கறேன். ஒவ்வொரு கிருத்திகைக்கும் விரதமிருந்து, உன்னை தரிசிக்கிறேன். இனி நீயே என் உலகம்...' என்றான்.— தொடரும்.நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,சென்னை.பா. தீனதயாளன்