ஒரு விரல் ரகசியம்!
ஆக., 28 ஓணம்மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கி, அவனை ஆட்கொள்ள, திருமால், திரிவிக்ரமராக வந்த நாளே ஆவணி திருவோணம். இந்நாளே கேரளாவில், ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.கேரளாவில், எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரை என்ற ஊரில் வாமனருக்கும், தமிழகத்தில், காஞ்சிபுரம், சீர்காழி மற்றும் திருக்கோவிலூரில், திரிவிக்ரமருக்கும் கோவில்கள் உள்ளன.சீர்காழியில் உள்ள தாடாளன் கோவிலில், 'உலகளந்த பெருமாள்' என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார் திருமால். இக்கோவிலில், ஒற்றை விரலை உயர்த்திக் காட்டிய நிலையில் உள்ளார் பெருமாள்.இதற்கு காரணம், மகாபலியை ஆட்கொள்ள திருமால் வாமனராக வந்து, உலகை இரண்டடியால் அளந்து, 'இன்னும் ஒரு அடி எங்கே?' என்று ஒற்றை விரலைக் காட்டி கேட்பதாக கூறுவர். ஆனால், உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? ஒரு காலத்தில், இப்பூமியில் சாதகப்பறவை என்ற பறவை இனம் இருந்தது. அது, வானத்திலிருந்து பொழியும் மழை நீரை மட்டுமே பருகும்; பூமியிலுள்ள தண்ணீரை பருகாது.அதுபோல, மனிதர்களுக்கும், ஒரே எண்ணம் தான் இருக்க வேண்டும். சொல்லும், செயலும், உணர்வும் ஒன்று என்ற ரீதியில் செயல்பட வேண்டும் என்பதற்காக, அவ்வாறு விரலைக் காட்டுகிறார் என்றும், 'என்னைப் பற்றிய நினைப்பு ஒன்றே உன்னிடம் இருக்க வேண்டும்; இதைத் தவிர வேறெதுவும் உனக்குத் தேவையில்லை...' என்று பக்தர்களுக்கு அறிவுறுத்துவதாகவும் இந்த விரல் காட்சி அமைந்துள்ளதாக கூறுவர்.திருமால் வாமன அவதாரம் என்னும் குள்ள வடிவினராக வந்த அதேநாளில், திரிவிக்ரமராக, உயர்ந்தவராக காட்சியளித்ததில் ஒரு சூட்சுமம் உள்ளது... 'நானே குறுகியதற்கெல்லாம் குறுகியதாகவும், அணுவுக்கும் அணுவாகவும் இருக்கிறேன்...' என்கிறது வாமன வேடம். உலகை ஈரடியில் அளந்து, 'நானே பிரபஞ்சமாகவும், இப்பூமியில் உள்ள எல்லாமாகவும் இருக்கிறேன்...' என்பது திரிவிக்ரம வடிவத்தின் தத்துவம்.தன் திருவடியை மகாபலியின் சிரசில் வைத்தார் பெருமாள். அந்த திருவடியில் சில ரேகைகள் இருந்தன. அவை சங்குரேகை, சக்கர ரேகை, கத ரேகை மற்றும் அங்குச ரேகை. இந்த ரேகைகள், பிறவாவரம் தந்து இறைவனோடு கலக்கச் செய்பவை. அதனால் தான் இந்த ரேகைகளைக் கொண்ட அவனது திருவடியை, 'சடாரி' என்ற பெயரில் நம் தலையில் வைக்கின்றனர்.ஒரே ஒரு நாள் தான், மகாபலிக்கு, பெருமாளின் திருவடி ஸ்பரிசம் கிடைத்தது. பூமியிலுள்ள நமக்கோ, சடாரி மூலம் தினமும் அவனது திருவடி ஸ்பரிசம் கிடைக்கிறது. இதனால், தினமும் பெருமாள் கோவில்களுக்கு செல்வோர், வைகுண்டத்தில் வாழும் பாக்கியத்தை பெறுகின்றனர்.திருமாலை, அஸ்தத்தில் பத்தாம் நாள் பிறந்த அச்சுதன் என்கிறார் பெரியாழ்வார். அஸ்த நட்சத்திரத்தில் இருந்து பத்து நட்சத்திரம் பின் நோக்கி எண்ணினால், திருவோணம் வருகிறது. ஆனால், திருமால், கண்ணனாக பூமியில் பிறந்தது ரோகிணியில்! எனவே, முன்னோக்கி எண்ணினால் தான் ரோகிணி வருகிறது. அப்படி எண்ணித்தான் பெரியாழ்வார் பாடியிருக்க வேண்டும். எனவே, திருமாலுக்கு ரோகிணியும், அவர் வாமனராக வந்த திருவோணமும் சிறப்பு பெறுகின்றன.பெருமாளின் உயர்ந்த திருவடி போல, நம் வாழ்வும் உயர, ஓணம் திருநாளில் வேண்டுவோம்!தி.செல்லப்பா