சாதனை தமிழச்சி கார்த்திகா!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள, கஞ்சநாயக்கன்பட்டியில் பிறந்தவர்; இன்று, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன், குராய்டன் பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார், கார்த்திகா அப்பு தாமோதரன். கஞ்சநாயக்கன்பட்டியில் இருந்து சென்னைக்கு படிக்க வந்தார். படிப்பு முடிந்தவுடன், லண்டனில் உள்ள தொழில் முனைவர், அப்பு தாமோதரனுடன் திருமணம் நடந்தது.லண்டன், குராய்டன் பகுதிக்கான தொழிலாளர் கட்சியின் கவுன்சிலராகவும், தமிழ் சங்க தலைவராகவும் இருப்பவர், அப்பு தாமோதரன்.அங்கு போன புதிதில் ஊர், உடை, கலாசாரம், அவர்கள் வேகமாக பேசும் ஆங்கிலம் என, எல்லாமே மலைப்பாகவும், வியப்பாகவும் இருந்தது.'நீ, இங்கு சராசரி பெண்ணாக இருக்கப் போகிறாயா அல்லது சாதனை படைக்கும் பெண்ணாக மாறப் போகிறாயா?' என்று கேட்டு ஊக்கமும், உற்சாகமும் தந்தார், அப்பு தாமோதரன்.'நீ முன்னேற விரும்பினால் முதலில் உடைக்க வேண்டியது உன் தயக்கத்தையும், பயத்தையும் தான்...' என்ற தாரக மந்திரத்தை, மனைவியின் மனதிற்குள் வலுவாக விதைத்தார்.அதன்பின், முற்றிலும் மாறிப் போனார், கார்த்திகா.நியாயமான விலையில், எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கக் கூடிய, சாரா சூப்பர் மார்க்கெட்டை பங்குதாரராக இருந்து, நடத்தி வருகிறார்.அங்குள்ளவர்கள், தனிமையை விரும்புபவர்கள். எவ்வளவு வயதானாலும், யாரையும் சாராமல் வாழ்பவர்கள். 'கோவிட்' சமயத்தில், சரியான உணவு, மருந்து, மருத்துவம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஒரு மகளாய் இருந்து, அனைத்தும் கிடைக்க உழைத்தார்.தொடர்ந்து, 'கோவிட்' மருத்துவ முகாம் நடத்தி, அனைவருக்கும், இலகுவாக தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்தார்.அங்குள்ள சிறுவர்கள், தீய வழிக்கு செல்வதை தடுக்க வேண்டும் என்பதற்காக, நல்லொழுக்க பாடம் நடத்தி வருகிறார்.அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும், முன்பின் தெரியாதவர்களை, குழந்தைகளுடன் குழுவாக சென்று, பேசி ஆறுதலளித்து விட்டு வருகிறார்.வார விடுமுறை நாட்களில், அக்கம் பக்கத்தாருடன் சேர்ந்து, சமுதாய துப்புரவு பணி செய்கிறார்.தமிழ் சங்கத்திற்கு வரும் விருந்தினர்களை வரவேற்பது, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் மகனின் பள்ளியில் - பெற்றோர் ஆசிரியர் சங்க ஆலோசகராகவும் இருக்கிறார்.லண்டனில் வாழ்ந்தாலும், தன் மகன் குரு கிருஷ்ணாவிற்கு, தமிழ் மற்றும் தமிழ் மண் மீது உள்ள பாசமும், நேசமும் குறையக் கூடாது என்பதற்காக, அவ்வப்போது குடும்பத்துடன் தமிழக சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.கார்த்திகாவிடம் அன்பும், ஒழுக்கமும், கடமையும் இருப்பதால், இவரது சொல்லுக்கும், செயலுக்கும், மதிப்பு அதிகம் இருக்கிறது.அடுத்து, இங்குள்ள வயதானவர்களின் நலனிற்காக, சேவை மனப்பான்மையுடன் ஒருங்கிணைந்த பராமரிப்பு இல்லம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவரது முயற்சிகள் வெல்லட்டும்.அவரது மெயில் முகவரி: karthika_appu@yahoo.co.uk எல். முருகராஜ்