விவசாய விழா!
ஆக., 10 - ஆடித் தபசுகோவில்களில் எத்தனையோ விழாக்கள் நடக்கின்றன. ஆனால், விவசாயிகள் தங்களுக்கென ஒரு விழாவை நடத்திக் கொள்வது, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தான். இதை ஆடித் தபசு விழா என்பர்.தபசு என்றால் தவம். புராணத்தின்படி, பார்வதிதேவி, தான் பெற்ற சாபத்தால் பூலோகம் வந்தாள். மீண்டும் சிவனை அடைய ஒற்றைக்கால் ஊன்றி தவமிருந்தாள். அது மட்டுமல்ல, ஹரியும், சிவனும் ஒன்று என்பதையும் உலகுக்கு எடுத்துக் காட்ட விரும்பினாள்.பார்வதி விரும்பியபடியே சிவனாகிய சங்கரனும், ஹரியாகிய நாராயணனும் இணைந்து, சங்கர நாராயணராக காட்சி தந்தனர். அவளை மீண்டும் கைலாயம் அழைத்துச் சென்றார், சிவன்.தவத்தின் சக்தியால், எதையும் சாதிக்க முடியும் என்ற தத்துவத்தை, இந்த நிகழ்வின் மூலம் புரிந்து கொண்டனர், விவசாயிகள்.விவசாயம் என்பதும் ஒரு வகை தவமே. நாற்று நட்டு, தண்ணீர் பாய்ச்சி, களை பிடுங்கி, பூச்சிகளை அகற்றி, பறவை, விலங்குகள், இயற்கை சீற்றங்களிலிருந்து பயிர்களைப் பாதுகாத்து, அறுவடை வரை ஒவ்வொரு பருவத்திலும், தவமாய் தவமிருந்தே, சிறந்த மகசூலைப் பெறுகிறான், விவசாயி.இத்தனையும் ஒரு சேர தடங்கலின்றி நடக்க வேண்டுமானால், இறையருள் தேவை. தகப்பனை விட தாயிடம், பிள்ளைகள் எளிதில் காரியம் சாதித்துக் கொள்ளும். எனவே, விவசாயம் சீராக நடக்க, அன்னை பார்வதியை அவன் வேண்டினான்.அவள் கோமதி என்றும், ஆவுடையம்மாள் என்றும் பெயர் தாங்கி நின்ற சங்கரன்கோவிலுக்கு வந்தான். அம்பாளின் இந்தப் பெயர்களும் விவசாயத்துடன் சம்பந்தப்பட்டது. ஆ என்றாலும், கோ என்றாலும், பசு என பொருள்படும்.பசு வளர்ப்பும் விவசாயத்துடன் ஒன்றியது, பசுஞ்சாணம் விவசாயத்துக்கு மிகச்சிறந்த இயற்கை உரம். இதையெல்லாம் மனதில் கொண்டு கோமதியை வணங்கி, நல்ல மகசூல் பெற்றான். இதற்காக தன் நன்றியை தெரிவிக்க, ஆடித் தபசு அன்று, விளைபொருட்களைக் கொண்டு வந்து, அம்பாளுக்கு காணிக்கை ஆக்குகிறான்.இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. ஆடித் தபசு திருவிழா உத்திராட நட்சத்திரத்தில் நடக்கும். உத்திராடத்தின் அதிபதி சூரியன். பயிர் வளர்ச்சிக்கு சூரிய ஒளியின் பங்களிப்பு முக்கியம்.'உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊரடியில் ஒரு கழனியும்...' என்று, ஒரு சொலவடையே உண்டு. உத்திராடத்தில் குழந்தை பிறப்பது நல்லது. அவ்வாறு பிறந்தால், அந்த பெற்றோர் விளை நிலம் வாங்குவர் என்பது நம்பிக்கை. இதனால், விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட அந்த நட்சத்திரத்தில், தபசுத் திருவிழாவை நடத்துகின்றனர்.விவசாயத் திருவிழாவான ஆடித் தபசு, அன்று, அன்னை கோமதியையும், சங்கர நாராயணரையும் வணங்க சங்கரன் கோவில் வாருங்கள். மதுரையில் இருந்து, 143 கி.மீ., துாரத்தில் உள்ளது, சங்கரன் கோவில். தி. செல்லப்பா