உள்ளூர் செய்திகள்

விமானம் தயாரித்த மாற்று திறனாளி!

படத்திலுள்ளவர் பெயர் ஷாஜி; இவர், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். வாய் பேச முடியாத, காது கேளாத இவர் ஒரு விமானத்தை தயாரித்து, வானில் பறக்கவிட்டு, அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த, வெள்ளியாமற்றம் என்ற ஊர், ரப்பர் தோட்டங்கள் நிறைந்த பகுதி. இங்கு ரப்பர் மரங்களுக்கு பூச்சி மருந்து அடிக்க ஹெலிகாப்டர் வருவதுண்டு. ஷாஜி அந்த ஹெலிகாப்டரை கூர்ந்து கவனிப்பார். அதை இயக்கும் பைலட்டுகளுடன் சைகையில் சந்தேகங்களை கேட்பார். அவர்கள் மும்பைக்கு திரும்பிய போது, அவர்களது முகவரிகளை வாங்கி வைத்துக் கொண்டார். அடுத்த நாட்களில் அக்கம், பக்கத்து வீடுகளிலுள்ள பழுதான ரேடியோ, 'டிவி' மற்றும் மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்களை பழுது பார்த்ததில் கிடைத்த பணத்தை சேமித்து வந்தார்.அப்பணத்தை எடுத்துக் கொண்டு மும்பைக்கு ரயிலேறியவர், சில மாதங்களுக்கு பின், விமானம் தயாரிக்கும் பயிற்சியை கற்று, திரும்பி வந்தார். பின், தேவையான பொருட்களை சேகரித்து, விமானத்தை உருவாக்கி பறக்க விட்டார்.தன் கண்டுபிடிப்புகளின் புகைப்படம் மற்றும் குறிப்புகளை, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பினார். அடுத்த சில நாட்களில், 'உங்கள் தகுதிக்கு ஏற்ப வேலை அளிக்கப்படும்...' என்று பிரதமரிடமிருந்து பதில் கடிதம் வந்தது. கடிதம் கிடைத்த சில நாட்களில், ராஜீவ் மரணமடைந்து விட்டார். — ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !