உள்ளூர் செய்திகள்

அம்பிகையில் அருளாடல்!

உலகம் தோன்றிய நாளிலிருந்து, இன்று வரை மாறாதவை ஏராளம். அப்படி இருக்கும் போது, அகில உலகங்களுக்கும் தாயான அன்னை ஆதிபராசக்தி மாறுவாளா... அவள், தன் அருளாடலை, இன்றும் நடத்தியபடிதான் இருக்கிறாள்.கடலூர் மாவட்டதில், வானமாதேவி என்ற ஊரில், பாழடைந்த நிலையில் ஓர் அம்மன் கோவில் இருந்தது. இக்கோவிலுக்கு, அடியவர் ஒருவர் தினமும் வந்து அம்பாளை வழிபட்டு செல்வார்.அக்காலகட்டத்தில், கோவிலில் உள்ள அரச மரத்தடியில், சிலர், பகல் வேளைகளிலேயே, மது அருந்தி, அலங்கோலமாக கிடப்பர்.இதனால், மனவருத்தம் அடைந்த அடியார், அம்பாளிடம் முறையிட்டு, சிறு வேள்வி செய்தார். அப்போது, பெரிய நாகம் ஒன்று, வேள்விக் குண்டத்தை வலம் வந்தது. அதன்பின், குடிகாரர்கள் மது அருந்தி, மரத்தின் அடியில் படுக்கும் சமயங்களில் எல்லாம், அந்த நாகம், அவர்கள் மீது ஏறி, படம் எடுத்து ஆடி, பின், மரப் பொந்தில் மறைந்தது. இதனால், பயந்து போன குடிகாரர்கள் கோவிலுக்கு வருவதில்லை.இந்நிலையில் ஒருநாள், அரச மடித்தடியில் அமர்ந்து, அம்பாளை தியானம் செய்து கொண்டிருந்தார் அடியார். அப்போது, மூதாட்டி ஒருவர், அவரை நெருங்கி, தனக்கு பார்வை தெரியவில்லை என முறையிட்டாள்.தியானத்தில் இருந்த அடியார், 'இன்றிலிருந்து, அடுத்த அமாவாசைக்குள், இந்த அம்பாள் உனக்கு ஆசீர்வாதம் செய்திடுவாள்...' என்றார்.அதேபோன்று, அடுத்த அமாவாசையில், அவரை தேடி ஓடி வந்த மூதாட்டி, 'ஐயா... நீங்க சொன்ன மாதிரி, இந்த அம்பாள் எனக்கு பார்வையைக் குடுத்துட்டா; இப்ப எனக்கு கண் நல்லாத் தெரியுது...' என்று சந்தோஷத்தில் கூத்தாடினாள்.அதைக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர் ஒருவர், அதிசயித்து, உடனே, கோவிலைச் சீரமைக்க முயற்சி எடுத்தார். அதன்பின், கும்பாபிஷேகமும் நடந்தேறியது. அடியார்களைக் காப்பதற்கு தயார் நிலையில் இருப்பதைப் போன்று, வலது காலை சற்றே தூக்கியபடி காட்சி தரும் அந்த அன்னை, கோலவிழியம்மன்; அடியாரோ, குருஜி சுந்தரராம் சுவாமிகள்!கடலூரிலிருந்து, 13 கி.மீ., தூரத்தில் உள்ள இக்கோவிலில், இன்றும் ஏராளமான அருளாடல்களை, அரங்கேற்றி வருகிறாள் அம்பாள். அந்த நாயகியைத் தியானிப்போம்; நலம் பல அருள்வாள்!பி.என்.பரசுராமன்திருமந்திரம்!சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்மாத்திரைப்போது மறித்து உள்ளே நோக்குமின்பார்த்த அப்பார்வை பசுமரத்தாணி போல்ஆர்த்த பிறவி அகல விட்டோடுமே!விளக்கம்: ஞான நூல்கள் மற்றும் சாஸ்திர நூல்களை படிக்கிறோம்; அவற்றை ஆராய்ச்சி பூர்வமாக பேசி, வாய் சாமர்த்தியத்தை காண்பித்துக் கொள்கிறோம். ஆனால், ஞான நூல்கள் கூறியவற்றை அனுபவப்படுத்தி பார்ப்பதில்லை. ஒரு மாத்திரையின் போது, அதாவது நொடியாவது, ஞான நூல்களில் கூறியுள்ளபடி இறைவனை உள்ளத்தில் இருத்தி, உற்றுப் பாருங்கள்; பசு மரத்தாணி போல, இறைவன் உங்கள் உள்ளத்தில் பதிந்து கொள்வார்.கருத்து: சாஸ்திரங்களை படித்து, சிறிதளவாவது அனுபவத்தில் கொண்டு வந்தால், நம்மைக் கட்டிப் போட்டிருக்கும் பிறவித்துயர் நீங்கி, பகவான் அருள் கிட்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !