அந்துமணி பதில்கள்!
ஆர்.கங்காதரன், மதுராந்தகம்: வளரும் இளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?தேங்க்ஸ்! நீங்கள் ஒருவர் தான் என்னை வளர்ந்த எழுத்தாளராக ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். போகட்டும்... வளரும் எழுத்தாளர்கள் நிறைய படிக்க வேண்டும்; படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எல்லா எழுத்தையும், எல்லா சப்ஜெக்டையும்! பத்திரிகைகளின் நிராகரிப்புகளைக் கண்டு சோர்ந்து விடக் கூடாது. மீண்டும் மீண்டும் மோதினால், வெற்றி நிச்சயம்!எம்.சாய்ராம், பரவை: நீங்கள் படிப்பில் கெட்டிக்காரரா?இல்லை; சாதாரணமாக ஒரு பக்கத்தை படித்து முடிக்க ஐந்து நிமிடம் ஒருவருக்குத் தேவை என்றால், எனக்கு இரு மடங்கு நேரம் தேவை! மக்கா அல்லது முழுமையாகப் படிக்கிறேனா தெரியவில்லை.சி.வின்சன்ட் ராஜா, வங்கனூர்: காதலிக்கும், மனைவிக்கும் இடையே தவிக்கும் நண்பனுக்கு என்ன உதவி செய்யலாம்?முதுகில் நாலு சாத்து சாத்தலாம்! சம்சாரம் வீட்டில் இருக்கும் போது, இவருக்கு என்ன காதல் கத்திரிக்காய் எல்லாம் கேட்குது!பொ.சம்பத்குமார், கண்டமனூர்: அரசியலில், 'பேரோல் லீடர்ஸ்' உள்ளனர் என்கின்றனரே... இதன் பொருள் என்ன, அப்படிப்பட்டவர்கள் தமிழகத்தில் உள்ளனரா?அரசாங்கத்தில், தமக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்ள, அரசியல்வாதிகளால் தங்கள் நிறுவனங்களுக்கு இடையூறு நேராமல் இருக்க, பிரபல தொழில் நிறுவனங்கள், தம் சம்பளப் பட்டியலில் அரசியல்வாதிகள் பலரை, கட்சி வேறுபாடு இன்றி வைத்திருக்கும். இவர்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மாதா மாதம் குறிப்பிட்ட தொகை இவர்களுக்கு சென்று விடும். இதையே ஆங்கிலத்தில்,'பேரோல் லீடர்ஸ்' என்கின்றனர். தமிழகத்தில் மட்டுமல்ல, உலகில் பல நாடுகளிலும் இப்படிப்பட்டவர்கள் உள்ளனர்!என்.ரமணன், வத்திபட்டி: 'லவ் பெயிலியர் ஆன பொண்ணு நான்; என்னை ஏத்துக்கிட்டு வாழ்க்கை தருவீங்களா'ன்னு ஒரு பொண்ணு கேட்டா, உங்க பதில் என்ன?'லவ்'ன்ற வார்த்தையைக் கேட்டாலே, 'ஷாக்' அடிக்குமுங்க நமக்கு... இந்த விபரீத எணணம் எல்லாம் வேண்டாமே!மு.சித்ரா, கல்வீரம்பாளையம்: 'நாலைந்து குழந்தைகளாவது இருந்தால் தான் வீடு கலகலவென்றிருக்கும்... குறைந்தது நான்கு குழந்தையாவது பெற்றுக் கொள்வேன்...' என்கிறாளே என் தோழி...கலகலப்புத் தானே வேண்டும்? வீட்டிலேயே நர்சரி ஸ்கூல் வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். அதை விடுத்து, நாட்டுக்கும், வீட்டுக்கும் கெடுதி நினைக்க வேண்டாம் எனச் சொல்லுங்கள்!எஸ்.கே.ராஜன், திண்டுக்கல்: ஓய்வு என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?கட்டிப் போட்ட, 'கம்பல்சரி' ஓய்வாக இருக்கக் கூடாது. அத்துடன், 'இதைச் செய்யாதே... அதைச் செய்யாதே... வெளியே போகாதே...' இது போன்று கிடைக்கும் ஓய்வு, வேதனையைத் தரும்!எஸ்.ரத்தினசபாபதி, மூலக்குளம்: ஆண்களின் தொப்பையை, பெண்கள் விரும்புவதுண்டா, ரசிப்பதுண்டா?பெருந்தொப்பைகளை ரசிப்பதுண்டாம்... மனதிற்குள் அதை நினைத்து சிரித்துக் கொள்வதுண்டாம்; ஆனால், விரும்புவது இளம் தொப்பைகளையாம். (பெண் உ.ஆ.,ஒருவர் சொல்லக் கேட்டது)எஸ்.புருஷோத்தமன், கீழ்பெரும்பாக்கம்: எம்.காம்., படித்த இளைஞர் ஒருவர், கட்டட வேலைக்கு செல்கிறாரே...கெட்டிக்காரர்; பிழைக்கத் தெரிந்தவர். கவர்னர் வேலை கிடைக்கும் எனக் காத்திருந்து தண்டச் சோறு சாப்பிடாமல், தினமும், 500 ரூபாய்ன்னு சம்பாதிக்கிறாரே... பாராட்டத்தான் வேண்டும்!