உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

ஜெ.பி.சூரியகாந்த், ரெட்டணை: எனக்கு மனசாட்சி இருக்கிறதா, இல்லையா என்பதை எப்படி கண்டு கொள்வது?தெரிந்தே ஒரு தவறை செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்போது, உடனடியாக உங்களை உங்கள் மனம் கண்டிக்குமானால், உங்களிடம் மனசாட்சி உள்ளது எனக் கண்டு கொள்ளலாம்!எஸ்.ஜமால், மேலக்கன்னிச்சேரி: இலவசங்களை நம் எம்.பி.,க்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்கின்றனரா?முழுமைக்கு மேலேயே பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள், ஒரு நாளுக்கு, 137 போன் கால்கள் இலவசமாக பேசிக் கொள்ளலாம். நம் எம்.பி.,க்கள் லேசுபட்டவர்களா... சராசரியாக, 274 போன்கால்களை போட்டுத் தள்ளி விடுகின்றனர், 'ஓசி'யிலேயே! உ.ஆதிமூலம், விழுப்புரம்: மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்கிற நம் நாட்டில், 35லிருந்து, 40 சதவீத மக்கள், தம் அடிப்படை உரிமையான ஓட்டு உரிமையை அளிப்பதில்லையே... ஏன்?உலகின் எந்த ஜனநாயக நாட்டிலும், நூற்றுக்கு நூறு சதவீதமோ, 90 சதவீதமோ பதிவாவதில்லை. நம் நாட்டை விட, வளர்ந்த மேற்கத்திய நாடுகளின், ஓட்டு பதிவு படுமோசம். ஓட்டு அளிக்காதவர்கள், 'ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன...' என்ற மனநிலை உடையவர்கள். கொடுங்கோல் ஆட்சி ஒன்று அமைந்தபின் தான், இவர்களுக்கு ஜனநாயகத்தின் அருமை புரியும்!பி.நாராயணன், மங்கலம்பேட்டை: முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடியின் குடும்பத்தில் பலரும் விபத்திலோ, சுடப்பட்டோ இறந்து போயுள்ளனரே...இங்கு மட்டும் என்ன... நேரு குடும்பத்திலும் சுடப்பட்டோ அல்லது விபத்திலோ தானே மரணமடைந்துள்ளனர். முன்னேறிய நாடு என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவில் கூட, 'செய்வினை தான் இதற்குக் காரணம்!' என, நம்ப ஆரம்பித்திருப்பதை எண்ணும் போது, தமாஷாக உள்ளது!வி.சந்திரன், கிருஷ்ணாபுரம்: அதிசய செய்தி எதையாவது எடுத்து விடுங்களேன்...இதோ... அமெரிக்காவில் வளர்ப்பு நாய், பூனை, கிளிகளின் எண்ணிக்கை, 38 கோடியாம்... அதாவது, அமெரிக்க ஜனத்தொகையை விட, வளர்ப்பு பிராணிகளின் எண்ணிக்கை, 7 கோடியே, 80 லட்சம் அதிகம்! இங்கே, மனிதனுக்கே சோறு, தண்ணியில்ல!எஸ்.அங்காளம்மாள், எஸ்.எம்.பாளையம்: நகரத்து நாகரிக வாழ்க்கை, கிராமத்து எளிய வாழ்க்கை எது சிறந்தது?நகரங்களில் நாகரிக வாழ்க்கை ஏது... நரக வாழ்க்கை தான்! எங்கும் கூட்டம், எதிலும் கூட்டம், இடம் பிடிக்க கூட அடிதடி... என் ஓட்டு கிராமத்திற்கே!ஏ.ஜேம்ஸ், நீலிகோனம்பாளையம்: பள்ளியில் படிக்கும் போது, 'மெசபட்டோமியா' என்று, ஒரு நாடு இருந்ததாக படித்திருக்கிறேன்; இப்போதும் அந்த நாடு உள்ளதா, அதன் தற்போதைய பெயர் என்ன?ஈராக்கின் பழைய பெயர் தான் மெசபட்டோமியா! இந்த சொல்லுக்கு, இரண்டு ஆறுகளுக்கு நடுவே உள்ள நாடு என்று பொருள்; யூப்ரட்டீஸ், டைக்ரீஸ் என்ற இரண்டு ஆறுகள் இங்கு பாய்கின்றன!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !