உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

கே.ராமேஸ்வரன், திருவொற்றியூர்: இன்றைய விஞ்ஞான உலகில், ஆங்கில அறிவு அவசியம் தானே...ஆங்கில அறிவு தேவை என்று, தாய் மொழித் தமிழை புறக்கணிக்கிறோம். இதனால், ஆங்கிலமும் முழுமையாக தெரியாமல், தமிழும் தெரியாமல் திண்டாடுகிறோம். இன்று பட்ட மேற்படிப்பு முடித்த ஒருவரிடம், ஆங்கில நாளிதழைக் கொடுத்து, இன்டர் நேஷனல், நேஷனல் எல்லாம் வேண்டாம்... ரீஜினல் எனப்படும் உள்ளூர் செய்தியை படிக்கச் சொல்லுங்கள்... விழி பிதுங்கி விடும் அவருக்கு! தமிழிலும் இதே நிலையில் தான் இருப்பார். நம் சந்ததியினரை, ரெண்டுங்கெட்டானா விட்டுச் செல்லவே, ஆங்கில மொழி போதனை வழிவகுக்கும்!வை.அஸ்வத்குமார், சிவகாசி: வெகுஜன எழுத்தாளருக்கும், இலக்கிய எழுத்தாளருக்கும் என்ன வித்தியாசம்?இரண்டாமவர், முதலாமவர் இடத்தை அடைய பிரயாசைப் படுபவர்; அடைய முடியாமல் அவஸ்தைப்பட்டு, முதலாம வரையும், அவர் எழுத்துகளை வெளியிடும் இதழ்களையும் இகழ்வர். மேலும், படிப்பவர்களுக்கு ஒரு துளியும் தம் எழுத்து புரிந்து விடக் கூடாது என்பதிலும் வெகு கவனமாக இருப்பார் இரண்டாமவர்!சிவ.இனியன், தேனி: வேலையில்லா பட்டதாரிகளுக்கு உங்கள் அறிவுரை...எனக்குத் தெரிந்து பலர், நம்பிக்கையான வேலையாள் கிடைக்காமல் தவித்துக் கொண்டுள்ளனர். வேலையில்லா பட்டதாரிகள் தங்கள் கட்டை உடைத்து, வெளியே வந்தால், தகுதிக்கேற்ப வேலை நிச்சயம் கிடைக்கும்!என்.அமிர்தலிங்கம், சென்னை: புகழ் மற்றும் பணத்துடன் வாழ ஆசைப்படுகிறேன். இதற்கு வேண்டியது என்ன?திறமை. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் திறமை! இதைக் கோட்டை விட்டவர்கள் பின்னர் வருந்துகின்றனர்.க.ராசாமணி, மேட்டுப்பாளையம்: எந்த மொழி மீது உங்களுக்கு பற்று அதிகம்?மழலை மொழி மீது! மழலைக்கு எந்த பேதமும் கிடையாது.ஜெ.பழனிச்சாமி, ராமநாதபுரம்: வேலைக்கு பதிவு செய்து, 17 ஆண்டுகள் ஓடி விட்டன. இனியும் வேலை வாய்ப்பு அலுவலகத்தை நம்பலாமா?வேஸ்ட்! இனி வேலைவாய்ப்பு அலுவலகம் இருக்கும் தெரு பக்கம் போக வேண்டிய வேலை இருந்தால் கூட போகாதீர்கள்!எஸ்.கவின், பல்லடம்: ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவு, கையேந்தி பவன் உணவு... எது சுகம்?என்னைப் பொறுத்தவரை இரண்டாவதே! கழுத்தில் நேப்கின் கட்டி, கையில் முள் கரண்டி, கத்தி வைத்து, திரும்பத் திரும்ப ஒரே வகையான உணவுடனான ஐந்து நட்சத்திர அவஸ்தையை அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்.டி.ஜெயவர்மன், நங்கநல்லூர்:எந்த மாநிலப் பெண்கள் அதிகமாக வேலையில் அமர்ந்து, குடும்ப சுமையை பகிர்ந்து கொள்கின்றனர்?படிப்பும், அதனால் கிட்டிய துணிவும் கேரளத்துப் பெண்களுக்கு அதிகம். இன்று, அவர்கள் உலக அளவில் வியாபித்து வேலையில் இருக்கின்றனர். கேரள பெண்களுடன் ஒப்பிடும்போது, தமிழக பெண்களுக்கு படிப்பும், துணிவும் குறைவு!ப.விஜயராகவன், குரோம்பேட்டை: வாழ்க்கையில் உயர என்ன வழி?செய்ய வேண்டிய வேலையை தள்ளிப் போடாமல், மூளையைப் பயன்படுத்தி உழைத்தாலே உயர முடியும். இன்றுள்ள பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில், உழைத்துக் கொண்டே இருந்தால் மட்டுமே உயர முடியும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !