உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

ஆர்.சுந்தரலிங்கம், வீரபாண்டி: பணம் கடன் கொடுத்தால் தான் திரும்பி வருவது இல்லை; புத்தகங்கள் கடன் கொடுத்தாலும், திரும்பி வருவது இல்லையே...கடன் கொடுக்கக் கூடாதது மூன்று; பணம், புத்தகம் மற்றும் 'சிடி!' தட்ட முடியாது எனும் பட்சத்தில் அன்பளிப்பாக கொடுத்து விடுங்கள்; திரும்ப எதிர்பார்த்து மனக்கசப்பையும், பிரச்னையையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள்!எஸ்.செல்வகணேஷ், விழுப்புரம்: முன்னேற துடிப்பவர்களிடம் இருக்கக் கூடாத விஷயங்கள் எவை?நேரத்தைப் பற்றிய அக்கறையின்மை, நீண்ட துாக்கம், சோம்பேறித்தனம் மற்றும் ஒத்தி போடுதல்! இவற்றில் எது ஒன்று இருந்தாலும், முன்னேறுவது கடினம்!பி.கிருஷ்ணபிரியா, மயிலாப்பூர்: பெருகி வரும், 'கம்ப்யூட்டர்' ஆதிக்கம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?முன்னேற்ற பாதையில் நம்மை அழைத்துச் செல்ல, மற்றொரு படிக்கல்!க.யுவராஜ், திருத்தணி: கல்யாணத்திற்கு ஜாதகம் பார்ப்பது சரியா?ஜாதகம் பார்த்து நடந்த திருமணங்களும், 'பெயிலியர்'ஆகின்றனவே! ஜாதகம், ஜோசியம் இதிலெல்லாம் எனக்கு ஒப்புதல் கிடையாது. பெரிய இடத்து பையன் ஒருவரின் ஜாதகத்தை வாங்கி, அதற்கு ஏற்றபடி பெண்ணின் ஜாதகத்தை மாற்றி செய்து வைத்த திருமணங்கள் பற்றியும் கேள்விப்பட்டுள்ளேன். அந்த தம்பதி, சகல சுகபோகங்களுடன் வாழ்கின்றனர். மனப் பொருத்தம் மட்டும் பாருங்கள் போதும்!கே.முரளிமனோகர், விருதுநகர்: கேரள மாநிலம், கர்நாடக மாநிலம், பீஹார் மாநிலம் என, பிற மாநிலங்களை கூறும் போது, தமிழகத்தை மட்டும் தமிழ் மாநிலம் எனக் கூறாமல் தமிழ் நாடு என்று கூறுகின்றனரே... இது என்ன தனி நாடா?திராவிட இயக்கத்தினர் செய்த வேலை இது! 1968ல் அண்ணாதுரை முதல்வராக இருந்த போது, 'தமிழ்நாடு' என, பெயர் மாற்றி விட்டாராம். அதுவரை, 'மெட்ராஸ் ஸ்டேட்' என ஆங்கிலத்திலும், 'மதராஸ் ராஜதானி' என, இந்தியிலும் அழைக்கப்பட்டு வந்ததாம்! ஜெ.கோகிலவாணி, கோவை: வயதானவர்களை மதிக்காமல், அவர்கள் எதிரிலேயே, 'செக்ஸ்' பற்றி பேசுகின்றனரே இன்றைய இளம் தலைமுறையினர்...'செக்ஸ்' என்பது பாவச் செயல் என்பது போல் அல்லவா பேசுகிறீர்கள்... சாப்பிடுவது, குளிப்பது போன்று, அதுவும் ஒரு செயலாக எடுத்துக் கொள்ள, ஏன் இன்னும் நம்மவர்கள் பழகவில்லை... பெரியவர்கள் முன் பேசட்டும்; அப்போது தான், 'செக்ஸ்' பற்றி இளையவர்கள் கொண்டிருக்கும் தப்பான அபிப்ராயங்களை, அவர்களால் திருத்த முடியும்!என்.ஞானசம்பந்தன், நெய்வேலி: சிறு பிரச்னை வந்தாலும், தற்கொலை எண்ணம் எனக்குள் மேலோங்குகிறதே...உளவியலார்களும், அவர்களது நூல்களும் கூறுவது என்ன தெரியுமா? தற்கொலை எண்ணம் கொண்டவர்கள், தங்கள் உயிர் மீது மிகுந்த ஆசையுள்ளவர்கள்; ஒருநாளும் இவர்கள், தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள். மாறாக, தற்கொலை என்பது அந்த ஒரு நிமிஷ உணர்ச்சியின் வேகத்தில் நிகழ்வது என்கின்றனர். கவலைப்படாதீர்கள்; 'அந்த' செயலுக்கு துணிய மாட்டீர்கள்!ஜி.எஸ்.சுப்பிரமணியம், பெரியகுளம்: பிடிவாதம் கொண்ட மனைவியின் அக்குணத்தை எப்படி போக்குவது?நீங்கள், 'டபுள்' பிடிவாதக்காரராக மாறுவது தான் ஒரே வழி என்கிறார், அனுபவப்பட்ட உதவி ஆசிரியர்.ல.பிரியதர்ஷன், உடுமலைப்பேட்டை: நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவாறு, படிக்கிறேன். என்னுடைய ஏட்டுக் கல்வியை தொடர்வதா அல்லது தொழிலைக் கற்றுக் கொள்வதா?வேலை செய்து கொண்டே படிப்பதாக கூறுவதால், உங்கள் குடும்ப பொருளாதார சூழல் புரிகிறது. ஏட்டு படிப்பில் ஒரு, 'டிகிரி' வாங்கினால், தற்போதைய வேலையை விட, மரியாதையான வேலையைத் தேடி அலைய வேண்டியது தான் மிச்சமாக இருக்கும். நீங்கள் இப்போது வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே தொழில் கற்றுக் கொள்ள முடிந்தால், 'வெல் அண்ட் குட்!' இல்லாவிட்டாலும், ஏதாவது தொழில் கற்று, சுயகாலில் நிற்க முயற்சிப்பது, 'பெஸ்ட்!'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !